குறிப்பு:
மாயாபஜார் படத்தில் “கல்யாண சமையல் சாதம்…” என்ற பாடல் காட்சியில் கடோத்கஜனாக நடித்த S.V. ரங்காராவ் அவர்களுடைய அருமையான நடிப்பில் அமைந்திருக்கும் காட்சி அனைவருடைய மனதிலும் பதிந்துவிட்ட மகிழ்ச்சியான காட்சியாக இருக்குமென்று நினைக்கிறேன்.
பார்க்கும் நமக்கு மகிழ்ச்சி தருகின்ற அந்தக் காட்சியில் பட்டியலிட்டுப் பாடியுள்ள விதவிதமான கல்யாண உணவுகள் அனைத்தையும் அவர் ஒருவரே உண்ண வேண்டும் என்பதுதான் அவர் முன்னே இருக்கும் சவாலான சூழ்நிலை.
அந்த நிலையில், அந்தச் சவாலை அஹா ஹாஹா ஹாஹ்ஹா, என்று மகிழ்ச்சியான மனநிலையோடு ஒவ்வொன்றாகக் கவனித்து எடைபோட்டு, பின்னர் அதை எதிர்கொள்ளும் அளவுக்கு முதலில் தன்னைப் பெரிதாக வளர்த்து, தயார் செய்துகொண்ட பின்னர், சவாலை ஒவ்வொரு பகுதியாக ஏற்றுக்கொண்டு சந்தோஷமாக நிறைவேற்றுகிறார்.
அந்தக் காட்சியின் நுட்பத்தைப்போல, குறிக்கோளின் சிறப்புகளை மகிழ்ச்சியோடு உணர்ந்து, அதில் உள்ள எல்லா வாய்ப்புகளையும் எதிர்கொள்ளும் அளவுக்குத் தகுதிகளைப் பெரிதாக்கம் செய்து, வெற்றி பெறுவதற்கு ஏற்றவகையில் தயார்ப்படுத்திக்கொள்வது முயற்சியின் முதல்நிலையாகும்.
இவ்வாறு, தயார்ப்படுத்திக்கொள்வது எவ்வளவு சிறப்பாக இருக்கிறதோ அந்த அளவுக்கு முன்னேற்றமும் சிறப்பாகக் கிடைக்கிறது. அத்தகைய தயார் நிலைக்கு உதவுகின்ற சில பண்புகளை இந்தப் பதிவில் நினைவுபடுத்திக் கொள்ளலாம் என்பதே இந்தச் சிந்தனையின் பதிவு.
முன்னுரிமை:
வாழ்க்கை என்பது அவரவர் அமைத்துக்கொள்வதற்கு ஏற்ப, இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணமாகவும் இருக்கலாம், சமூகத்தையே உயர்த்துகின்ற உயர்ந்த நோக்கமாகவும் இருக்கலாம். உலக ஓட்டத்தின் திசையைத் திருப்புகின்ற வலிமையான குறிக்கோளாகவும் இருக்கலாம்.
இவ்வாறு, அவரவர் அமைத்துக்கொள்ளும் வாழ்க்கையின் இலக்கு அவரது தனிப்பட்ட விருப்பம் என்றாலும் அதில் வெற்றியடைவதற்கு தேவையான தகுதிகள் பெரும்பாலும் பொதுவானவையாக இருக்கின்றன என்று கூறுகிறார்கள். அவற்றுள் முக்கியமானதாக, “எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது” என்ற விழிப்போடு சூழ்நிலைக்கு ஏற்றவாறு முன்னுரிமை கொடுத்து, சரியாக முடிவெடுக்கும் திறமை முக்கியமான இடத்தைப் பெறுகிறது.
ஏனெனில், வெற்றிபெறுவதற்கு உதவுகின்ற சிந்தனைகளை, செயல்பாடுகளைச் சரியாக உணர்ந்து அவற்றின் முக்கியத்துவம் அறிந்து முன்னுரிமை கொடுப்பது வெற்றிக்கு முதல் நிலையாக இருக்கிறது. அதுபோலவே, தோல்வியின் விளைவைத் தெரிந்து எச்சரிக்கையாகச் செயல்படுவதும் வெற்றியின் அவசியத்தை உணர்த்துகிறது.
கண்ணில் தெரிகின்ற பலவகையான வாய்ப்புகளுள் முன்னுரிமை கொடுத்துத் தேர்ந்தெடுப்பது என்பது அறிவின் எல்லைக்கு உட்பட்டது என்பதால், சரியான வாய்ப்புகளைத் தேர்ந்தெடுக்கும் அறிவின் திறமையே வெற்றியின் வாசலைத் திறப்பதற்கான அடிப்படை தகுதி என்று அறிகிறோம்.
உதாரணமாக, நேரத்தின் மதிப்பைச் சரியாக அறிந்திருக்கும் சுயஅறிவே, அந்த நேரத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கிறது.
அணுகுமுறை.
ஒரு இடத்தில், குளிர்ச் சாதனப்பெட்டியில் புத்தகங்களும், புத்தக அலமாரியில் காய்கறிகளும் என்று மாற்றி வைக்கப்பட்டிருந்தால் அது அறிவார்ந்த செயலாக இருக்காது என்பதோடு, அது பொருட்களையும் கெடுத்து, சூழலையும் பாதிக்கும். எனவே, எந்த இடத்தில் எதை வைக்க வேண்டும் என்ற பொருத்துகின்ற அறிவு அவசியம் என்பதைப் போல “எந்தச் சூழ்நிலையில் எந்த அணுகுமுறை” என்கிற தெளிவான மனப்போக்கு வெற்றிக்கான சிறந்த நுட்பமாக உள்ளது.
உணவு தயாரிப்பில் சரியான பொருட்களை, சரியான அளவில், சரியான நேரத்தில் சேர்த்தால்தான் எதிர்பார்க்கும் சுவையில் உணவைத் தயாரிக்க முடியும். அதுபோல, “சரியான செயல்களை, சரியான இடத்தில், சரியான சமயத்தில்” செயல்படுத்தும்போது அது எதிர்பார்க்கும் வெற்றியை நிச்சயம் தரும்.
வெற்றிக்கான வழிகள் தெளிவாகத் தெரிந்தாலும், அந்த வெற்றியைக் கவனமாக கைப்பற்றுவதற்கும் அதை சிறப்பாகக் கையாளுவதற்கும் ஏற்ற, “பொருத்தமான நிதானம்” வெற்றி பெறுவதற்கான மிக அவசியமான தகுதி என்பது வெற்றியாளர்களின் செயல்பாடுகள் மூலம் தெரிகிறது.
தடைகளை உடை:
தடைகளற்ற பாதையை எதிர்பார்ப்பது மனிதனின் இயல்பான மனநிலை என்றாலும், வெற்றியை நோக்கிய பயணத்தில் தடைகள் இல்லாத பாதைகள் இல்லை என்று மிகச்சிறப்பாக வெற்றி பெற்றவர்கள், அதற்காகப் பலகாலம் பயணித்தவர்களின் அனுபவங்கள் கூறுகின்றன.
சிலர் அத்தகைய தடைகளைக் காற்றுபோல கடந்து செல்கிறார்கள். சிலர் தடைகளுக்கு இடையில் இருக்கும் சந்துகளில் நுழைந்து நீர்ப்போல நெகிழ்ந்து செல்கிறார்கள்.
சிலர் சம்மட்டிபோல உறுதியாக நின்று தடைகளை உடைத்து மற்றவர்களும் பயணிப்பதற்கேற்ற வகையில் வழி ஏற்படுத்துகிறார்கள்.
சிலர் காலத்தோடு இணைந்து பொறுமையாகப் போராடி, தடைகளைக் கரைக்கிறார்கள். சிலர் குறிப்பிட்ட அந்தத் தடைகளைத் தவிர்த்துவிட்டு மாற்று பாதையைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள வேறுவகையான சவால்களை எதிர்கொண்டு பயணிக்கிறார்கள்.
அவரவர்க்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கை பாதையில் யாருக்கு எந்த அணுகுமுறை சரியானது என்பது தனிநபர் தேர்ந்தெடுக்கும் முயற்சியைப் பொறுத்து அமைகிறது. ஏனெனில், தடைகள் என்பவை வெளியில் இருப்பவையாக மட்டுமல்லாமல் மனதில் இருப்பவையாகவும் இருக்கலாம்.
அவை, பதட்டத்தை ஏற்படுத்தி தவறாக முடிவெடுக்கத் தூண்டுகின்ற கோபம். Egoவை முன்னிறுத்தி செயல்படுகின்ற அகந்தை. முன்னேற்றமான திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் தடுக்கும் சோம்பல். பலவீனத்தை ஏற்படுத்துகின்ற ஒப்பீடு போன்ற, எதிர்மறை உணர்வு பழக்கங்களினால் உருவான மனத்தடைகளாகவும் இருக்கலாம்.
தடைகள் எத்தகையதாக இருந்தாலும், குறிக்கோளில் வெற்றி பெற வேண்டும் என்ற “திடமான மனவுறுதியே, அதன் பாதையில் உள்ள தடைகளை உடைத்து, அதற்கு வெகுமதியான வெற்றியைப் பெறச்செய்கிறது”.
முன்னேற்றத்தை நோக்கிய முயற்சிகளில், கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் தைரியமும், அவற்றை முறையாகக் கையாளுகின்ற ஆற்றலும் கூடுதலாக இருப்பதே, விரும்புகின்ற வெகுமதியைப் பெறுவதற்கான நடைமுறைக்கு அவசியமான தகுதியாகும்.
ஒரு சிலர் பெரிதான திட்டமிடல்கள் ஏதும் இல்லாமல், எதேச்சையாக வெற்றி அடைந்ததாக வெளியில் தெரிந்தாலும், “நேர்மறையான உணர்வு பழக்கங்களும், அவற்றை பொருத்தமாகப் பயன்படுத்துகின்ற முக்கியமான சில அணுகுமுறைகளும்” அவர்களுடைய தனிப்பட்ட இயல்புகளாக அமைந்து, அவர்களுக்கே தெரியாமல் அந்த வெற்றிக்குக் காரணமாகச் செயல்படுகின்றன.
வாய்ப்புகள்:
Discipline is choosing between what you want now and what you want most, என்று ஆபிரகாம் லிங்கன் கூறியதுபோல, தற்காலிக தேவைகள் மற்றும் உறுதியான குறிக்கோளுக்கான தேவைகள் ஆகியவற்றில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அவரவர் சுயஒழுக்கமே நிர்ணயிக்கின்றது.
நிலையான, குறிப்பிட்ட குறிக்கோளில் வெற்றி பெறுவதற்கு முறையான கல்வி, அனுபவம் போன்ற தகுதிகளோடு, சரியான முடிவெடுக்கும் திறமை, ஆக்கபூர்வமான பகுப்பாய்வு சிந்தனைகள், அணுகுமுறைகள், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, புதிய திறன்களைப் கற்றுக்கொள்ளுதல் போன்ற பண்புகளும் வலுவான வெற்றியைப் பெறுவதற்கு உறுதுணையாகச் செயல்படுகின்றன.
இத்தகைய பண்புகள், அவரவர் முயற்சிகளுக்கு ஏற்ப வளர்ந்து, “வெற்றிக்கான தகுதிகள்” எனும், ஏறுகின்ற படிக்கட்டுகளாக, இயங்கும் படிக்கட்டுகளாக, மின்உயர்த்திகளாகச் செயல்பட்டு, வெற்றியை நோக்கி ஆற்றலோடு உயர்வதற்கு உதவுகின்றன.
வெற்றியைப் பெறுவதற்கு துணையாக இருக்கும் இத்தகைய பண்புகளே, அந்த வெற்றியைப் பயனுள்ள வகையில் முறையாகக் கையாளும் திறமையாகவும், அந்த வெற்றியின் மகிழ்ச்சியை மேலும் பன்மடங்காக உயர்த்துகின்ற மனமுதிர்ச்சியாகவும் திறம்பட செயல்படுகின்றன.
# நன்றி .