ஆய்வுக்கூடம்.
ஒவ்வொரு துளியாய்
சொட்டுகின்ற பியூரெட்டின்,
சிறப்பான ஒரு துளியில்
அழகாய் நிறம் மாறியது
கண்ணாடிக் குடுவையின் கரைசல்.
வழிமுறை ஒன்றென அறிந்தாலும்
நிறம் மாறாத கரைசலைக் கண்டு
குடுவையோடு குழம்பி நின்றாள்
பக்கத்து மேசையில் தோழி.
துளியைக் கவனமாகக் கண்டுபிடி!
உனது கரைசலின் அடர்த்தி வேறு! என,
ஆசிரியர் சொன்னது, வேதியியல் பாடமா!
வாழ்க்கையின் வேதமா?
நியாய விலை.
நுகரும் எவற்றுக்கும்
ஒரு விலை உண்டாம்
நியாயம் சொல்கிறது
வணிக உலகம்.
விளையும் பொருளின் விலை
விவசாயிக்கு எட்டவில்லை.
வாங்கும் பொருளின் விலையோ
வியாபாரிக்குக் கட்டவில்லை.
பொருளின் மதிப்பைக் கூட்டும்
வர்த்தகம் பின்னுகின்ற வலை.
நுகராமல் விடுபட்டு போனதோ,
நேர்மையான நியாய விலை!
கல்மரம்.
காலம் காலமாக
கல்லடிப் பட்டது காய்த்த மரம்.
காய்ந்த பிறகும் காய்த்துப்போனது
கூர்தீட்டிய வாளின் பதம் பார்த்து.
படிகள்.
நமக்கும் கீழே உள்ளவர் கோடி என
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடினால்
தன்னை நினைந்து வாழலாம்.
அந்தக் கோடி மக்களின் நிலையை
உணர்ந்து, உயர்த்தும் வழியைத் தேடினால்
நல்ல மனிதனாக நிமிரலாம்.
மேன்மையான வாழ்க்கைத் தரத்தை
மேவும் பொதுவுடமை ஆக்கினால்
தன்னிகரற்ற தலைவன் உருவாகலாம்.
அறமும் திறமும் சேர்ந்தே பிணைந்த
அன்பைப் பகிர்ந்து வாழ முயன்றால்
அனைவரும் இறைவன் ஆகலாம்.
# நன்றி.