plant in rain
Rain drops give life to the world

புது மழை.The Rain.Pudhu Mazhai.

சூல்கொண்ட கருமேகம் 

காற்றின் கையை இறுகப் பற்றி  

மடியில் ஏந்திய மழைக்கரு தாங்கி  

மெதுவாய் நடந்து, மெல்ல நகர்ந்தது.

 

சாதகமான சூழல் என்றே 

மின்னும் ஒளி சமிக்கை செய்ததும்

தேகம் திரண்டு நெகிழ்ந்த மேகம் 

இடியின் முழக்கம் ஒலிக்கச் செய்தது.

 

புதுமழை பிறக்கும்! என்ற தகவலை  

மண்ணின் வாசனை வந்து சொன்னது.

பண்ணிசைப் பாடும் பறவைகள் கூட்டம்  

பறந்து திரிந்து நற்சேதி பகிர்ந்தது. 

 

மரங்கள் எல்லாம் கிளைகள் அசைத்து, 

வாழ்த்துகள் கூறி வரவேற்பு அளித்து,

ஒன்றுக்கொன்று பேசி சிரித்து,

உச்சி குளிர்ந்தன மகிழ்ச்சியில் திளைத்து. 

 

பூக்கள் உதிர்க்கும் செடிகள் குனிந்து 

வாசலெங்கும் கோலமிட்டு 

அலங்கரிக்கும் அழகை கண்டு

புதுமழை பிறந்தது, புன்னகை செய்தது. 

 

அன்பின் சுவையில் அழகாய்ப் பிறந்த 

மழையின் நீர்த்துளி கைகளில் தவழ்ந்தது. 

உலகம் செழிக்க உவந்து வந்த 

உயிர்த்துளி என்ற உயர்நிலை பெற்றது.

 

#  நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *