Light decorations on city
Glowing city

இனிக்கும் நினைவுகள்.Super Sweet Memories. இனிய நாள்கள்.

இரசனைகள்:

“இந்த நாள் இனிய நாள்” எனும் உணர்வு ஒவ்வொரு நாளும் மனதில் தோன்றுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஏதேனுமொரு காரணம் இருக்கக்கூடும்.  அது, புதிய காலை பொழுதை வரவேற்கும் புத்துணர்ச்சியாகவோ, வீட்டுச் செடியில் பூத்த புதுமலரின் மலர்ச்சியாகவோ, பக்கத்து இருக்கையில் இருக்கும் குழந்தையின் சிரிப்பாகவோ, நினைத்த வேலையைச் சிறப்பாகச் செய்துமுடித்த திருப்தியாகவோ என வெவ்வேறான சூழ்நிலையில் உருவாகும் நேர்மறை உணர்வாக இருக்கலாம்.

இவ்வாறு, சட்டென ஒரு வினாடி நேரத்தில் உருவாகும் இந்த இனிய உணர்வுக்கு மனதின் இரசனை முக்கியமான காரணம் ஆகிறது.  பெரும்பாலான நேரத்தில் இவற்றை அந்தந்த நாளில் சந்தித்த சிறிய நிகழ்வாக எளிதாக கடந்துவிடுகிறோம். 

ஆனால், ஒருசில தருணங்கள், நிகழ்வுகள், சூழ்நிலைகள், நாள்கள் ஆகியவை மனதில் ஆழமாகப் பதிந்த இனிமையான இரசனையாக, வாழ்க்கை நிகழ்வுகளோடு இணைந்த சிறந்த அனுபவங்களாக ஒன்றியிருந்து எப்போது நினைத்தாலும் மனதில் நிலையான மகிழ்ச்சியைத் தருகின்றன.

அவ்வாறு, அன்றும், இன்றும் இனிமையான தருணங்களாக நினைவுகளோடு இணைந்து என்றும் நினைவில் இருக்கும் பொதுவான சிலவற்றைப் பார்க்கலாம்.   

வானொலி:

“பிறந்தநாள்! இன்று பிறந்தநாள்! நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்தநாள்!” என்று இலங்கை வானொலி பாடுகின்ற வாழ்த்துப் பாடலின் மகிழ்ச்சியோடு தொடங்கும் குழந்தைப் பருவத்தின் நினைவுகள்.  அதில் பிறந்தநாள் வாழ்த்துக் கூறுபவர்கள் அம்மா, அப்பா, அம்மம்மா, அம்மப்பா, அப்பப்பா,… என்றெல்லாம் கூறுகின்ற உறவுமுறைகளின் பெயர்களைக் கேட்டு மகிழ்ந்த குழந்தையின் நினைவுகள்.

மேலும்,

மனதை மகிழ வைக்கும் சிறுவர் நிகழ்ச்சிகள், ஒலிச்சித்திரம், போன்றவையோடும் இரவின் மடியில், பொங்கும் பூம்புனல் என நேயர்கள் விரும்புகின்ற பாடல்களோடும் இனிய இரசனைகள் தந்த இலங்கை வானொலியின் சிறப்புச் சேவைகள்.  கருப்பு வெள்ளை காலத்தில் பல வண்ணங்களைக் குழைத்துப் பூசிய அன்றைய மகிழ்ச்சி, இன்றும் மனதில் விவரிக்க முடியாத உணர்வுகளை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன.

வளரும் பருவத்தில், பள்ளிக்கு அவசரமாக கிளம்பும் வேளையிலும், அகில இந்திய வானொலியில் மதிப்பிற்குரிய திரு. தென்கச்சி சுவாமிநாதன் ஐயா அவர்களின் நிதானமான குரலில் ஒலிக்கும் “இன்று ஒரு தகவல்” கேட்டு இரசித்த  பிள்ளைபருவத்தின் நினைவுகளும் வானொலியோடு இணைந்தே இருக்கின்றன.

ஒலியும் ஒளியும்:

காலத்தின் புதிய வரவாக, பெருமையாக வந்த தொலைக்காட்சியில், அலைபாயும் காட்சிகளைச் சரிசெய்ய மொட்டை மாடியில் இருக்கும் ஆன்டெனாவைப் பாய்மரப் படகைத் திருப்புவதுபோல, சரியான திசையில் திருப்பிவைத்து, உரத்த குரலில் தகவல் பரிமாற்றம் செய்துகொண்ட அந்தக்கால நினைவுகள் புன்முறுவலை ஏற்படுத்துகின்றன.

தலைமுறை இடைவெளி இருந்தாலும், தலைமுறை அளவு இடைவெளி இருந்தாலும் அனைவரும் ஒரே இரசனையோடு நிகழ்ச்சிகளைப் பார்த்து, அவரவர் கருத்துகளைக் கலந்துபேசி இரசித்த நாட்கள் ஒலியோடு ஒளியும் சேர்ந்த மகிழ்ச்சியின் மலரும் நினைவுகள்.

அமைதியாக வாசிக்கப்படும் செய்திகள் மற்றும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள்களில் இரவு முழுவதும் வெளியாகும் அறிவிப்புகள் ஆகியவற்றை ஆர்வத்துடன் கவனித்து விவாதிக்கும் பெரியவர்கள்.  ஐந்து நாட்களாகத் தொடர்ந்து பொறுமையாக விளையாடும் கிரிக்கெட்டை உற்சாகத்துடன் பார்த்தவர்கள். 

பரதம் முதல் பாட்டுக் கச்சேரி வரை, சித்ரஹார் முதல் சித்ரமாலா வரை, எதிரொலி முதல் ஒலியும் ஒளியும் வரை, ஹிந்தி முதல் தமிழ்ப்படம் வரை என நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர் யாராக இருந்தாலும், அவரே அந்த நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பாளராக அமைந்து, குடும்பத்தில் உள்ள அனைவரையும், நண்பர்களையும், அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து ஆவலுடன் வரும் குழந்தைகளையும் பார்க்கும்படி செய்து விடுவார்.

அன்றைய இரசனைக்கு இனிமையாக இருந்த வானொலி மற்றும் தொலைக்காட்சிகளின் வழியாகக் கிடைத்த மகிழ்ச்சியை வெறும் பொழுதுபோக்காக மட்டும் நினைத்துக் கடந்துபோக முடியாதபடி பலவகையான உணர்வுகளும் கருத்துகளும் பரிமாற்றங்களும் கலந்து ஊறிய உறவுகளின் அருமையான அனுபவங்களாக மனதில் பதிந்து உள்ளன. 

சித்திரம் பேசுதடி:

நாளடைவில், கடமையும் பொறுப்பும் தொடர்ந்து வளர்ந்து முதிர்ச்சியைத் தந்தாலும், மனதின் உள்ளிருக்கும் குழந்தைக்குத் துணையாக வந்தன அடுத்த தலைமுறையின் புதிய இரசனைகள். 

கார்ட்டூன் என்றால் Tom and Jerry, Donald duck மட்டுமே என்ற நிலைமாறி Mowgli, Simba, Timon & Pumbaa, Popeye, Scooby-Doo, The Flintstones, Mr. Bean,…. போன்ற இரசனைக்குரிய சிறந்த கார்ட்டூன்களும் Small wonder போன்ற நகைச்சுவை தொடர்களும், மேலும் பல புது வரவுகளும் நட்போடு இணைந்து, வண்ணமயமாகத் தொடர்ந்த மகிழ்ச்சியின் காட்சிகள் மக்களைத் தேடி வந்தன.   

ஒளிரும் டிஜிட்டல்:

இன்று வளர்ந்துவரும் புத்தம்புதிய தலைமுறையினரின் வேகமான எண்ணங்களை எதிரொலிக்கும் வகையில் கைகளுக்குள் வந்த நவீன தொழில்நுட்பத்தில், மலர்ந்திருக்கும் பலவண்ண டிஜிட்டல் பூக்கள் அவரவர் தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ற வகையில் வெவ்வேறு அலைவரிசையில் விதவிதமாக மின்னுகின்றன. 

சமூகத்தின் முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கும் இன்றைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் எதிர்பார்ப்புகளும் அதிகம், அதைவிட அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் மிக அதிகம்.  இதனால், அதற்கு இணையான அளவு கொண்டாட்டமும் சமூகத்தில் வெளிப்படுவதாகத் தோன்றுகிறது. 

இந்தக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி தனிப்பட்ட உணர்வாக ஓரிடத்திற்குள் அடங்கிவிடாமல் பரவலாக அள்ளி தெளிக்கப்பட்டு அனைவருக்கும் உரிய வாய்ப்பாக பகிரப்படுகிறது.  இதனால், இரவை பகலாக்கும் ஒளிவெள்ளத்தில் திறந்திருக்கும் வணிகத்தின் வாயில்களும் அனைவரையும் வரவேற்று மகிழ்ச்சியைப் பண்டமாற்றம் செய்கின்றன.

இதமான இரவு நேரங்களில், நீண்ட நெடிய சாலையெங்கும் ஒளிரும் பிரகாசமான விளக்குகளின் வெளிச்சத்தில் கூடுதல் ஜொலிப்போடு மெதுவாக நகரும் வாகனங்களின் நெருக்கமான போக்குவரத்து.  பார்க்கிங்கில் அணிவகுத்து நிற்கும் வாகனங்களும், அங்கே கூடுவதும் கலைவதுமாக இருக்கும் மக்கள் கூட்டமும் என கண்ணில் தெரிகின்ற காட்சிகள், மகிழ்ச்சியைத் தேடி மக்கள் வந்ததற்கான சாட்சிகள். 

ஒளிரும் வண்ண சரவிளக்கு மாலைகள் சுற்றிக்கொண்டு, இப்போது பகலா இரவா என பார்த்தபடி அமைதியாக நிற்கும் மரங்கள்.  தெருவெங்கும் மின்னுகின்ற விளக்குத் தோரணங்கள்.  அலங்கரிக்கப்பட்ட மாளிகைபோல நிமிர்ந்து நிற்கும் வணிக வளாகங்கள்.  காத்திருக்கும் கூட்டத்தோடு நிரம்பி வழியும் விதவிதமான உணவகங்கள். பிரமாண்டமான வாயில்களோடு வரவேற்கும் பெரிய பெரிய கடைகள் என கண்ணுக்கு விருந்தாகும் காட்சிகளின் அழகு. 

சில்லென்று இலேசாகக் குளிரும் இரவின் மடியில், நடைபாதையெங்கும் நிறைந்திருக்கும் சிறிய துணிக்கடைகள், விதவிதமான பொம்மைகள், அழகான பொருட்கள், அலங்கரிப்புப் பொருட்கள், பூக்கடைகள், அந்தப் பூக்களின் வாசனையை மீறி வருகின்ற துரித உணவுகளின் வாசனைகள் என அனைத்துத் தரப்பினருக்கும் வரவேற்பைத் தந்து பார்வைக்கு அழகாக விரிந்திருக்கும் பொருள்களின் காட்சிகள் இன்றைய இந்த நிமிடத்தின் மகிழ்ச்சி.   

இந்தக் கடைவீதியின் இரைச்சலையும் கடைக்காரர்களின் உரத்த சத்தங்களையும் மெதுவாகக் கடந்து செல்லும் இரசனையுள்ள காதுகளைத் தேடி, காற்றில் தவழ்ந்து வந்து சேர்ந்தது மெலிதாக ஒலித்த பழைய பாடல் இசை.  அந்த இசையின் தூண்டுதலால் ஏற்பட்ட நினைவுகளின் விளைவுதான் இந்தப் பதிவு.

வருடமெல்லாம் காத்திருந்து பொருட்காட்சி, திருவிழா என சிறப்பு நாட்களில் உறவுகளோடும் நண்பர்களோடும் சேர்ந்து இந்த நாள் இனிய நாள் என்று கொண்டாடியது மறக்கமுடியாத மகிழ்ச்சிதான், என்றாலும் இந்த நாள் இணையற்ற நாள் என்று தினமும் திருவிழாவாக கொண்டாடும் வாய்ப்பு பெற்றிருக்கும் இன்றைய தலைமுறைக்குக் கிடைத்திருப்பதும் காலத்தின் வளர்ச்சி தந்திருக்கும் இனிய மகிழ்ச்சிதான்.

 

#   நன்றி.