Playing basket ball
The victory loves the practice and preparation

நல்லன எல்லாம் தரும் .All Good victory.

வெற்றிக்கு வழி:

தனம் தரும், கல்வி தரும்,

ஒருநாளும் தளர்வறியா மனம் தரும்,

தெய்வ வடிவும் தரும்,

நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்,

நல்லன எல்லாம் தரும்,

அன்பர் என்பவர்க்கே கனம் தரும்

பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!

என்று அன்னையின் அன்பை அழகாகக் கூறுகின்றது அபிராமி அந்தாதியின் பாடல். 

இந்தப் பாடல், நல்லன எல்லாம் தருகின்ற தாயின் பெருமைகளைக் கூறுவதுபோலவே, நாம் வேண்டுகின்ற நல்லன எல்லாம் பெறுவதற்கு சில கடமைகளும், தகுதிகளும் உள்ளன என்றும் உணர்த்துகிறது. 

பக்தியைக் கூறுகின்ற இந்தப்பாடலில் நடைமுறை வாழ்க்கையின் கடமைகளை உணர்ந்து சிறப்பாகக் கையாளும் உக்தியும் உடன் இருக்கிறது.  இதுவே நாம் வெற்றி பெறுவதற்கான வழியாகவும், நாம் செலுத்தவேண்டிய நன்றியாகவும் சேர்ந்தே ஒலிக்கின்றது.

கல்வி, செல்வம், வீரம்: 

பிறந்த நாள்முதல் புதிய வாய்ப்புகளில் வரிசையாகக் கற்றுக்கொண்டே இருப்பதுதான் வாழ்க்கை.  இதற்கு துணையாக இருக்கும் கல்வி, அறிவு, நுண்ணறிவு, சமூக அறிவு என வளர்ந்து, காலத்திற்ப நாள்தோறும் மாறிக்கொண்டே இருக்கும் வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ளும் அறிவே வாழ்க்கையை வகுத்துக்கொள்ள  வழிகாட்டும் நல்லறிவாக மலர்கிறது. 

இதற்கு துணைசெய்யும் வலிமையான கருவியாக உள்ள பணம் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் தன்னுடைய வலிமையை வெளிப்படுத்துகிறது. 

அத்தகைய பணபலத்தை, பொருள் வளத்தைப் பெறுவதற்கும், செய்யும் தொழிலே தெய்வம் என்ற உணர்வோடு தினமும் முறையாக உழைப்பதற்கும் மனநிலை என்பது முக்கியமாக இருக்கிறது.

மனம் நல்ல ஊக்கத்துடன் உற்சாகமாக மலர்ந்து, அன்பும் அறிவும் இணைந்து, சிந்தித்துச் செயல்படும் நிலையில் வெற்றி என்பது விரைவில் வந்து சேரும். 

இத்தகைய வளமான மனமே, உடல்நிலையை ஆரோக்கியமாகப் பேணுவதற்கும், நேர்த்தியான வெளிப்பாடுகளுடன், அமைதியான மனதுடன், தன்னம்பிக்கையோடு நிதானத்துடன் செயல்படுவதற்கும் அடிப்படை சக்தியாக இருக்கிறது.  

இனம்:

இத்தகைய சுய ஏற்பாடுகளுடன் ஒவ்வொரு தனிமனிதரும் தனித்துவமான வலிமையோடு செயல்படுவது என்பது இயற்கையான, இயல்பான வாழ்க்கை முறையாகவே இருக்கிறது. 

என்றாலும், உறவுகள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் மட்டுமல்ல இன்றைய காலத்தில் முக்கியமான இடத்தில் உள்ள மீடியாக்கள் என சூழ்ந்திருக்கும் சூழ்நிலைகளுக்கும் தனிமனித இயல்புகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் தன்மை உண்டு. 

எனவே, சூழ்நிலைகளின் தன்மை உணர்ந்து அவற்றை வலிமையாக எதிர்கொள்வதும், நெஞ்சில் வஞ்சமில்லாத சூழ்நிலைகளை நேர்மையாகக் கையாளுவதும் வெற்றியை வேண்டுகின்ற அன்பர்களின் வாழ்வியல் கடமைகளாகும். 

இறை அருள்:

மிக எளிமையாகத் தெரிகின்ற இந்தக் கடமைகளை நாள்தோறும் செயல்படுத்துகின்ற கவனமே வேண்டுதலை வெற்றிபெறச் செய்யும் வழிபாடு ஆகிறது. இதுவே இறைவனுக்கு நாம் அன்போடு செலுத்துகின்ற நன்றியாகவும் வெளிப்பட்டு, மகிழ்ச்சியான வாழ்க்கையில் மேலும் பெருமையைத் தருகிறது.

மேற்கூறியவாறு, கல்வி, அறிவு, பணம், வளம், ஆற்றல், அமைதி, நல்ல உறவுகள், நல்ல நண்பர்கள் என வாழும் அன்பர்களுக்கு நல்லன எல்லாம் தந்து பெருமையைத் தருகின்ற மாபெரும் சக்தியின் கூறுகள் நமக்குள்ளேயும் இருப்பதை உணரும் நிலையே இறை அருளின் நன்மைகளைப் பெறுகின்ற தகுதியாக உள்ளது.

எனவே, நம்முடைய எண்ணங்கள், செயல்பாடுகளின் மூலமாக நம்மை நாம் கவனிப்பதுதான் நல்லன எல்லாம் பெறுவதற்கான அடிப்படை முயற்சியாகும்.  இத்தகைய முயற்சியே வேண்டுதலில் வெற்றி பெறுவதற்கான வலிமையான வழிபாடாக இருக்கும். 

 

#   நன்றி . 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *