தன்னம்பிக்கை:
உலகில் வாழும் எண்ணற்ற உயிரினங்களுள் மனிதனுக்கு மட்டுமே தன்னம்பிக்கை எனும் வரம் மிகப்பெரிய பலமாக வாய்க்கப் பெற்றிருக்கிறது. மேலும் குறிப்பாக, தன்னிடம் உள்ள அந்த வரத்தின் மேன்மையை உணர்ந்து, தொடர்ந்து உறுதியாகப் பயன்படுத்துபவர்களே சிறப்பாக வளர முடிகிறது.
பிறந்ததிலிருந்து வளரும் ஒவ்வொரு நிலையிலும் தொடர்ந்து சந்திக்கும் போராட்டங்களிலும் எதிர்ப்புகளிலும் நேர்மறையான வலிமை பெறுபவர்கள், மனவளர்ச்சியோடு சேர்த்துத் தன்னம்பிக்கையையும் கவனமாக வளர்ப்பவர்கள் உள்ளத்தனைய உயர்வு பெறுகிறார்கள்.
பெரிதினும் பெரிதாக குறிக்கோளை அமைத்து, அதையே குறிவைத்து வளர்பவர்களின் தன்னம்பிக்கையில் கிடைக்கும் வெற்றிகள் இந்த உலகத்துக்கே ஊக்கத்தைத் தருகின்ற வரலாறுகளாக உயர்கின்றன. இதற்கான சான்றுகளாக இருக்கும் சாதனைகள் பலவற்றை கடந்த பல பதிவுகளில் விளக்கமாகப் பகிர்ந்திருக்கிறோம்.
இவ்வாறு, உலகமே வியந்து பாராட்டுகின்ற சாதனையாளர்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க அனைத்து வெற்றிகளுக்கும் அடிப்படை விதையாக இருப்பது, சுய புரிதலோடு வெளிப்படும் உறுதியான தன்னம்பிக்கையே.
பயணம்:
தனக்குள் இருக்கும் தன்னம்பிக்கையைக் குறிக்கோளின் வாகனமாக அமைத்துக்கொண்டு வெற்றியை நோக்கி செலுத்துகின்ற பயணத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் எல்லாம் வழியில் வரவேற்கும் மைல்கற்கள்களாக மாறுகின்றன.
அவற்றை முறையாகக் கையாளும் அனுபவ முதிர்ச்சி, அந்தச் சூழலில் நம்பிக்கை வெளிச்சத்தைப் பரவச்செய்தபடி தொடர்ந்து முன்னேறுவதற்கான சக்தியைத் தருகின்ற எரிபொருளாகப் பயன்படுகிறது.
ஆக்கபூர்வமான சிந்தனைகள் மற்றும் பொருத்தமான செயல்பாடுகள் ஆகியவற்றை சூழ்நிலையின் குறிப்புகளுக்கு ஏற்றவாறு communicate செய்தவாறு, நேர்மறையாகப் பயணிக்கும் தன்னம்பிக்கை வாகனம் சூழ்நிலையிலும் நம்பிக்கையை விதைக்கிறது.
நிகழ்காலம்:
கடந்தகால அனுபவங்களும், எதிர்காலத் திட்டங்களும் ஆற்றின் இரு கரைகளைப்போல ஒரு ஒழுங்கோடு அதனதன் எல்லையில் நின்று அரணாகும் நிலையில், நிகழ்காலத்தின் செயல்பாடுகள் பாதை மாறாத பயணமாக அமைதியான ஆற்றின் பயணம்போல பலன்களைத் தருகின்றன.
முன்பே திட்டமிடப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும், அதில் ஏற்படுகின்ற எதிர்பாராத மாற்றங்கள், அதனால் உருவாகும் பக்கவிளைவுகள் ஆகியவற்றை எதிர்கொண்டு, நிகழ்காலத்தை உணர்ந்து, முறையாகச் செயல்படும் வியூகமே வெற்றியை நோக்கி வேகமாக நெருங்குகின்றது.
கடினமான சூழ்நிலையில் முன்னும் பின்னும் அலைபாயும் மனதை “நிகழ்காலத்தில் வலிமையாக நிறுத்தி” சவாலை எதிர்கொள்ளும் துணிவே வெற்றியைத் தரும் என்ற கீதையின் உபதேசம் அனைவருக்கும் பொதுவான வழியைக் கூறுகிறது.
நிகழ்காலச்(present) சூழலின் தன்மை அறிந்து, தன் இருப்பின் (presence) பலம் உணர்ந்து, வலிமையாகச் செயலாற்றுபவருக்கே சூழ்நிலையை வெற்றிகொள்ளும் (presents) வாய்ப்புகள் கிடைக்கின்றன.
எல்லை:
நீருக்குள் நிற்பவனுக்கு, அந்த நீரின் உயர எல்லை என்பது, அவனுடைய தலைவரை அல்ல, மூக்கின் கீழ்வரை மட்டுமே என்பதுதான் பாதுகாப்பான எல்லை. அந்தப் பாதுகாப்பு எல்லையை விரிவுபடுத்தும் வியூகத்தில் தொடர்ந்து செய்யப்படும் சுயமுயற்சியே கடலையும் நீந்திக் கடக்கும் திறனாக வளர்கிறது.
நீர் நிறைந்த சூழ்நிலையில், என்ஜான் உடலின் பாதுகாப்பு என்பது அங்குல அளவில் இருப்பதுபோல, மறுபடுகின்ற சூழ்நிலைகளின் பாதுகாப்பு அதன் எல்லைகளில் உள்ளது. அந்த எல்லைகளை நுணுக்கமாக உணரும் அறிவுதான் திறன்களைத் தீவிரமாக வளர்த்துக்கொள்வதற்கான துணிவைத் தந்து முழுமையான பாதுகாப்பையும் தருகிறது.
நம்பிக்கை:
வாய்ப்புகளுக்குள் வழிகள்.
சுடோகு எனும் எண்களின் புதிர் விளையாட்டில் மிகச்சில எண்கள் மட்டும் உள்ள சூழ்நிலை கொடுக்கப்படுகிறது. அந்த மிகச் சில எண்களிலும் ஓரிரு எண்கள் மட்டுமே புதிய எண்களைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகளாக இருக்கின்றன.
இந்தப் புதிர் விளையாட்டில், குறைவான எண்கள் மற்றும் மிகக்குறைவான வாய்ப்புகள் எனும் சவால்களை ஏற்றுக்கொண்டு, ஒன்றிலிருந்து ஒன்று முயற்சி செய்து, வாய்ப்புகளைச் சிந்தித்துக் கண்டறியும் கவனமே, புதிராக உள்ள கட்டங்கள் முழுவதையும் பூர்த்தி செய்து வெற்றிபெறும் வழியை வளர்க்கின்றது.
வாழ்க்கையின் சூழ்நிலைகளும் இவ்வாறுதான் இயங்குகின்றன. நம்மிடம் இருக்கும் ஒருசில வாய்ப்புகளைக் கவனித்து, முன்னேற்றத்திற்கு உதவுகின்ற வழிகளைக் கண்டறிந்து, ஒன்றிலிருந்து ஒன்றாக நம்பிக்கையோடு முயற்சி செய்து வெற்றிடங்களை வெற்றியின் இடங்களாக நிரப்புவதே வாழ்க்கை.
இந்தப் பயணத்தில், குறுக்கிடும் தடைகளைத் தகர்த்து, பொறாமைகளைப் புறந்தள்ளி, இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி தொடர்ந்து முன்னேறுவதற்கு மனவுறுதி அவசியம் வேண்டும்.
தெளிவான அணுகுமுறையோடும், நேர்மறையான நம்பிக்கையோடும் வெளிப்படுகின்ற தன்னம்பிக்கையின் பயணம் குறிக்கோளை வென்று, மேலும் சிறப்பான இலட்சியங்களோடு உயரும்போது இந்தப் பயணம் நிச்சயமாக வெற்றிப் பயணம் ஆகிறது.
மேலும், தன்னம்பிக்கையை விதையாகக் கொண்டு விளைகின்ற வெற்றி, சமுதாயத்திற்கு பயன்படுகின்ற, உண்மையான வளர்ச்சியைத் தருகின்ற சிறந்த வெற்றியாக உயரும் நிலையில் நிச்சயம் இது மக்களின் வெற்றியாக மணம் வீசி மலர்கின்றது.
# நன்றி.
