ஓர் ஊரில் மிகப்பெரிய செல்வந்தன் இருந்தான். அவன் தன்னுடைய செல்வத்தைப் பயன்படுத்தி யாருக்கும் எந்த நன்மையும் செய்தறியாதவன். ஆனால், புலவர்கள் வள்ளல்களை நாடுவதுபோல தன்னையும் நாடி வந்து பாடிப் புகழ வேண்டும் என்று விரும்பினான். ஆனால் அதற்காக ஒரு காசுகூட செலவு செய்துவிடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தான்.
எனவே, நன்கு சிந்தித்து ஒரு குறுக்கு வழியைக் கொண்டுபிடித்தான். தன்னை நாடி வந்து நாலு கோடிப்பாடல்கள் பாடும் புலவருக்கு ஆயிரம் பொன் பரிசு தருவதாக அறிவித்தான்.
பாடிப் பரிசில் பெறுவதற்குச் சில புலவர்கள் ஆர்வமாக இருந்தாலும் நாலு கோடிப் பாடல்களைப் பாடி முடிப்பது என்பது வாழ்நாளில் இயலாத காரியம் என்பதால், கண்ணுக்குத் தெரியும் பரிசுத்தொகையைக் கையில் வராத கானல் நீராக நினைத்துப் புலவர்கள் வருந்தினர்.
பரிசில் தரவிரும்பாதக் கருமி, வள்ளலைப்போல அறிவிப்புக் கொடுத்துப் புலவர்களை ஏமாற்றும் தந்திரத்தை ஒளவை கேள்விப்பட்டார். தன்னுடைய புத்தி சாதுர்யத்தை ஆயுதமாகப் பயன்படுத்திய ஒளவை, கருமியின் தந்திரத்தை வெல்லும் வழி கண்டார்.
எனவே, மற்றப்புலவர்களையும் அழைத்துக்கொண்டு அந்தப் போலி வள்ளலை சந்தித்த ஒளவை, தான் நாலு கோடிப் பாடல்கள் பாடுவதற்குத் தயாராக இருப்பதாகவும், அவ்வாறு பாடி முடித்தவுடன் ஆயிரம் பொன் பரிசில் தொகையைச் சரியாகக் கொடுத்துவிடவேண்டும் என்றும் ஒளவை கூறினார்.
அதற்கு ஒத்துக்கொண்ட அந்தச் செல்வந்தனோ, தன் மனதிற்குள், ‘இந்த ஒளவை பாடும் வரை பாடட்டும், நாலு கோடிப் பாடல்களையும் பாடி முடிப்பது முடியாதக் காரியம் என்பதால் எப்படியும் பரிசுத்தொகை தரவேண்டியதிருக்காது’ என்று நினைத்துக் கொண்டான். இதை நன்கு புரிந்துகொண்ட ஒளவை,
மதியாதார் முற்றம் மதித்தொருகால் சென்று
மிதியாமை கோடி பெரும்.
உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில
உண்ணாமை கோடி பெரும்.
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுவது கோடி பெரும்.
கோடானுக்கோடி கொடுப்பினும் தன்னுடையநாக்
கோடாமை கோடி பெரும்.
என்று கோடி பெறக்கூடிய செயல் என்று வரிசைப்படுத்தி, நான்கு கோடிக்கு நான்கு செயல்களை வகைப்படுத்தி பாடினார்.
பின்னர், தன்னுடைய நான்கு கோடிப் பாடல்களுக்கு அறிவித்தபடி பரிசுத்தொகையைத் தருமாறு கேட்டார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத ஏமாற்றுக்காரச் செல்வந்தன், பரிசுத்தொகையைத் தர மறுத்தான்.
அப்போது, அறிவித்தபடி நான்கு கோடிப் பாடல் பாடிய ஒளவைக்குப் பரிசுத்தொகைத் தரவேண்டும் என்று புலவர்கள் அனைவரும் சத்தமிட்டதால், வேறு வழியின்றி அந்தப் போலி வள்ளல் பரிசுத்தொகையை ஒளவையாருக்குக் கொடுத்தான். அதைப் புலவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்த ஒளவை, எத்தகைய சவால்களையும் புத்தி கூர்மையால் சுயமரியாதையோடு வெல்ல முடியும் என்பதற்கு உயர்ந்த சாட்சியாக இருக்கிறார்.
ஒளவையார் பாடிய நாலுகோடிப் பாடல் கூறும் அரிய கருத்துகளைப் போலவே, இந்தப்பாடலுக்குப் பின்புலமாகக் கூறப்படும் இந்தக் கதையும் சிறந்தக் கருத்தை நமக்கு உணர்த்துகிறது.
ஆசையைத் தூண்டும் வகையில் அல்லது இயலாமையை எண்ணி வருந்தும் வகையில் இதுபோன்ற அறிவிப்புகளும், விளம்பரங்களும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்புகின்றன. இவற்றிலிருந்து தற்காத்து கொள்ள, மக்களே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
தனிப்பட்ட மனிதர்களிலும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி போலியான நட்புடன் உறவுகொண்டாடும் மக்களும் காலந்தோறும் இருந்திருக்கின்றனர். “நீ வறுத்தக் கடலை கொண்டுவா, நான் உதிர்ந்த தவிடு கொண்டுவருகிறேன், இருவரும் ஊதி ஊதி சாப்பிடலாம்” என்று கூறி, தான் ஏதோ சமமாகப் பங்களிப்பதுபோல் தோற்றமளிக்கின்ற போலி மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள்.
செயல்படுவதுபோல வெறும் பாசாங்கு மட்டும் காட்டிவிட்டுப் பெறவேண்டிய நன்மைகளில் சுயநலமாக இருப்பவர்களை, சாதுர்யமாகதான் கையாள வேண்டும் என்ற விழிப்புணர்வும் இதனால் ஏற்படுகிறது என்பது உண்மைதானே!
நேர்மையான உறவும், உண்மையான நட்பும், ஆரோக்கியமான வளர்ச்சியும், என்றும் மனதிற்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் தரும். இத்தகைய நேர்மறையான உறவுகளுடன் உண்மையான அன்புடன் பழகுவதே இனிமையான சூழலை உருவாக்கும்.
# நட்புடன் நன்றி.