கஞ்சன் தந்த கூலியும், அதை மிஞ்சிய வேலையும். Kanjan Thantha Kooliyum, Athai Minjiya Velaiyum. Simple Strategy.

ஓர் ஊரில் இருக்கும் செல்வந்தரிடம் முருகன் என்பவன் வேலை செய்துகொண்டிருந்தான்.  செல்வந்தருடைய தென்னந்தோப்பு, மாந்தோப்பு மற்றும் காய்கறி தோட்டம் போன்றவற்றைச் செழிப்பாகப் பராமரித்துக் கொண்டு பொறுப்போடு இருந்தான்.  செல்வந்தரும் முருகனுக்குத் தோட்டத்திலேயே சிறிய வீடு கொடுத்து, அவனுக்கு நல்ல சம்பளமும் கொடுத்துத் தன் வீட்டிலேயே உணவளித்து, அன்பாகக் கவனித்து வந்தார். 

அவர் தனது முதுமை காலத்தில் வெளிநாட்டில் இருக்கும் தன் பிள்ளைகளோடு சேர்ந்து இருக்க வேண்டும் என நினைத்துத் தன்னுடையச் சொத்துக்களைச் சின்னசாமி என்பவனுக்கு விற்றுவிட்டு, முருகனையும் அவனுக்கு அறிமுகப் படுத்திவிட்டு வெளிநாடு சென்று விட்டார்.

இப்போது சின்னசாமியின் தோட்டத்தில் முருகன் தொடர்ந்து வேலைகளைச் செய்வதற்கும், சின்னசாமியும் அதேபோல முருகனை கவனித்துக் கொள்வதற்கும் சம்மதம் தெரிவித்துக் கொண்டனர்.

முருகன் எப்போதும்போல காலையில் செய்யும் வழக்கமான தோட்ட வேலைகளை எல்லாம் செய்து முடிப்பதற்கு மதியம் ஆகிவிட்டது.  பின்னர் சாப்பிடுவதற்குச் சின்னசாமியின் வீட்டிற்குச் சென்றான்.  முருகனைப் பார்த்ததும்  சின்னசாமி, தன் மனைவியை அழைத்து அவனுக்கு இலை நிறைய சோறுபோட சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டான்.  

முருகன் தான் கொண்டுசென்ற வாழைஇலையைப் போட்டு உட்காரச் சொன்ன அவள், ஒரு சிறிய கிண்ணத்தில் சோறு கொண்டுவந்து அதை இலைமுழுவதும் தூவியதுபோலப் போட்டாள்.  மற்றோரு சிறிய கிண்ணத்தில் இருந்த குழம்பைச் சிறிய ஸ்பூனில் எடுத்துத் தெளித்ததுபோல ஊற்றிவிட்டு அவள் உள்ளே சென்று விட்டாள்.  

முருகனுக்கு ஒன்றும் புரியவில்லை.  இலையில் இருந்த சோற்றைச் சேர்த்து எடுத்தால் சரியாக இரண்டு கவளம் மட்டுமே இருந்தது.  காலையிலிருந்து வேலை செய்து யானைப்பசியோடு இருந்தவனுக்கு அது சோளப்பொறிபோல இருந்தது.

சரி, ஐயா (சின்னசாமி) வந்த பின்னர் இரவு சாப்பிடும்போது தன்னை  கவனித்துக் கொள்வார் என்று ஆறுதலடைந்த முருகன் தண்ணீர் குடித்துவிட்டு எழுந்தான்.  மாலையில் தோட்டத்தைச் சுத்தம் செய்துவிட்டு மறுபடியும் நீர் பாய்ச்சிய முருகன், சின்னசாமி வீட்டில் இருக்கும்போது சாப்பிடச் சென்றான்.  அப்போதும் சின்னசாமியின் மனைவி அதேபோல்தான் பரிமாறினாள், சின்னசாமியும் பார்த்துக்கொண்டுதான் இருந்தான்.  ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. 

மறுநாள் முருகன் முழுஇலையாகப் பெரியதாக எடுத்துக்கொண்டு சென்றான்.  அதைப் பார்த்த சின்னசாமியும் அவன் மனைவியும்  ஆச்சரியப்பட்டாலும் ஒன்றும் பேசவில்லை.  அவள் முன்புபோலவே சோற்றை இலையில் தூவினாள்.  கடுமையாக உழைத்தவனுக்கு உணவு தருவதற்கே மனமில்லாமல், இருவரும் இவ்வளவு கருமியாக இருப்பதைக் கண்டு முருகனுக்குக் கோபம் வந்தது. 

தோட்டத்திற்குச் சென்ற முருகன் அங்குக் கத்திரிக்காய், வெண்டைக்காய் என்று பிஞ்சாக இருந்தக் காய்களைத் தின்றுவிட்டு தண்ணீர் குடித்தான்.   வேலை செய்தவனின் பசியை நினைக்காத இவர்கள், வேலைக்குக் கூலியாகப் பணம் தருவதில் எப்படி நடந்து கொள்வார்களோ என்று நினைத்தான்.  

பசியும், தீவிர சிந்தனையும் அதிகமாக இருந்த அந்த இரவு தூக்கமில்லாமலேயே கழிந்தது.  காலையில் மிகுந்த உடல் சோர்வோடு எழுந்த முருகன் இந்தப் பிரச்சனைக்கு நல்லவழி காணவேண்டும், அதோடு சின்னசாமிக்கும் சரியான பாடம் புகட்டியே ஆகவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.    

உணவிற்காக மறுபடியும் சின்னசாமியின் வீட்டிற்குச் செல்ல மனமில்லாத முருகன், களைப்பைப் போக்க இனிமேல் தானே சமைத்து சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்தான்.  எனவே, தன்னுடைய பழைய சேமிப்பிலிருந்து சமையலுக்குத் தேவையான அடிப்படை பொருட்களை வாங்கிவந்து சமைத்து சாப்பிட்டான்.

பின்னர், தோட்டத்திலிருந்த வேலைகளைத் தொடர்ந்து செய்தபடியே இருந்தான். ஆனால் முன்புபோலக் கடினமாக உழைக்க முடியாமல் உடல் சோர்வு இன்னும் இருந்து.  எனவே, தோட்டத்தில் இருந்த  ஒவ்வொரு செடியின்  வேரிலும் நன்றாக நீர் போகும் அளவுக்கு மட்டும் நீர் ஊற்றினான்.  செடி முழுவதும் நனையும் அளவுக்கு அவனால் நீர் இறைத்து ஊற்ற முடியாமல் மனதளவிலும் மிகவும் சோர்ந்து போயிருந்தான்.  

வெளிஊருக்குச் சென்றிருந்த சின்னசாமி நாலுநாள் கழித்துத் தோட்டத்தைப்  பார்க்க வந்தான்.  அங்கு மரம் செடி எல்லாம் முன்புபோல் செழிப்பாக இல்லாமல் வாடி இருப்பதைக் கண்டு அதிர்ந்தான்.  

தான் நாலு நாட்கள் தோட்டத்தைப் பார்க்க வரவில்லை என்பதால் வேலை செய்யாமல் ஏமாற்றியதாக முருகனைத் திட்டினான்.  தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றாததால் காய்கறியில் கிடைக்கும் லாபம் பாதிக்கப்படும் என்று சின்னசாமி கோபமாகக் கத்தினான்.

முருகனோ, தோட்டத்திலிருக்கும் செடிகளையும், மரங்களையும் தன்னைப்போலவே நினைத்துப் பராமரிப்பதாகக் கூறினான்.  தன்னுடைய வயிறு நிறையும்படி இலைநிறைய சோறு போடுவதுபோலவே, தானும் செடிகளுக்கும் அவற்றின் வேர்கள் நனையும் அளவுக்கு இருவேளையும் தண்ணீர் ஊற்றுவதாகக் கூறிவிட்டுச் செடிக்கு அடிப்பகுதியில் இருந்த ஈரமான மண்ணை எடுத்துக்காட்டினான்.  

முருகனுக்குச் சரியாக சோறு போடாததால், அவன் செடிகளுக்குச் சரியாகத் தண்ணீர் ஊற்றவில்லை என்பதை நாசூக்காகத் தெரிவிக்கிறான் என்று சின்னசாமிக்குப் புரிந்தது.  

அப்போது முருகன், தன் வேலைக்குத் தகுந்த சம்பளத்தை ஒவ்வொரு வாரமும் கொடுத்துவிடுமாறும், தனக்குத் தேவையான உணவை தானே தயாரித்துக் கொள்வதாகவும் கூறினான்.

தன்னிடம் வேலை செய்பவர்களிடம் நிறைவாக நடந்துகொள்ளும் குணம் சின்னசாமிக்கு இயற்கையாக இல்லை.  ஆனால், தான் எதிர்பார்க்கும் வேலை நன்றாக நடந்து லாபம் கிடைக்க வேண்டும் என்று நினைத்த சின்னசாமி முருகன் சொன்னதை ஏற்றுக்கொண்டான்.

மனதின் உணர்வுகளை மதிக்காமல், பணத்தை மட்டும் பெரிதாக மதிப்பவர்கள்  வெறும் பொருட்களோடு இருக்கிறார்கள்.  

மனதின் உணர்வுகளை மதிக்கவும், அவற்றை நியாயமாக வெளிப்படுத்தவும், பணத்தை ஒரு கருவியாகக் கையாள்பவர்கள் உண்மையாக வாழ்கிறார்கள்.  

#  நட்புடன் நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *