மாற்றம்:
வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் வேண்டும் என நாம் அனைவரும் விரும்புகிறோம். அவ்வாறு நாம் விரும்புகின்ற முன்னேற்றத்தை நோக்கி சீராகச் செலுத்துகின்ற மாற்றங்களே வெற்றிக்குத் துணையாக நம்மை வழிநடத்துகின்றன.
இந்த மாற்றங்கள் என்பவை, சிந்தனையில், மனநிலையில், உடல்நிலையில், அறிவுநிலையில் என நமக்குள் நடக்கின்ற personal மாற்றங்களாகவும் இருக்கலாம்.
தோற்றத்தில், பேச்சில், அணுகுமுறையில், கையாளுவதில், செயல்படுவதில் என நாம் சூழ்நிலையோடு தொடர்பு கொள்ளும் வெளிப்பாடுகளில் செய்யப்படும் personality மாற்றங்களாகவும் இருக்கலாம்.
இதில் முக்கியமாக, personal மாற்றங்கள் personalityயில் மாற்றம் கொண்டுவருவதற்கு அடிப்படையாக இருக்கின்றன என்ற கருத்தை பல பதிவுகளில் வலியுறுத்தி கூறியிருக்கிறோம்.
அதுபோலவே செயல்பாடுகளில் வெளிப்படுகின்ற மாற்றங்களும் முக்கியமான முன்னேற்றங்களுக்கு உறுதுணையாக உள்ளன என்பதை சில நடைமுறை உதாரணங்களோடு இந்தப் பதிவில் பார்க்கலாம்.
வினைநலம் வேண்டிய எல்லாம் தரும்!
நல்ல விளைவுகள் வேண்டும் என்றால் நல்ல செயல்களையே செய்ய வேண்டும் என்பதுதான் இயற்கையின் விதி. மேலும் பொருத்தமான கூடுதல் முயற்சிகளினால் மாற்றம் அடைகின்ற விளைவுகள் சிறந்த முன்னேற்றங்களாக வளர்கின்றன.
அதேபோல, கடுமையான அல்லது எதிரான சூழ்நிலைகளையும் கையாளுவதற்கு தேவையான மனவுறுதியோடு இணைந்து இயங்கும் நிதானமான அணுகுமுறைகள் சூழ்நிலைக்குப் பொருத்தமான சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
நாம் நல்ல செயல்களையே செய்தாலும், அதை உணராதவர் அல்லது எதிர்ப்பு மனநிலையோடு உள்ளவர், விளைவுகளை வேறுவிதமாக மாற்றலாம். இத்தகைய சூழ்நிலையை எப்படிக் கையாள்வது?
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
என்ற திருவள்ளுவர் வாக்கின்படி, ஆற்றல் உள்ளவரின் உண்மையான ஆற்றல் என்பது அவரது பணிவே ஆகும். இந்தப் பணிவே எதிராளிகளை மாற்றுகின்ற கருவியாக இருக்கும் என்பதாகும்.
அதாவது, துணிவாகச் செயல்படுகின்ற அதிகாரம் உள்ள சூழ்நிலையிலும், அந்தச் சூழலைப் பணிவாகக் கையாளுகின்ற திறனே எதிராகச் செயல்படும் மாற்றாரையும் மாற்றுகின்ற பலமான கருவியாகும்.
அதுபோலவே, உண்மையான சுயமதிப்பு எனும் நேர்மைக்குக் கட்டுப்பட்டு, பணிவாகச் செயல்படுவதே, ஈகோவைத் தூண்டுகின்ற எதிராளிகளின் தந்திரங்களை முறியடிக்கும் ஆற்றல் மிக்க கருவியாக இருக்க முடியும்.
இவ்வாறு, சவாலான சூழ்நிலைகளை வலிமையோடு எதிர்கொள்ளும் நேர்த்தியான வழிகளையும், எளிமையாகக் கூறியிருக்கும் நமது முன்னோர்களின் அருமையான கருத்துகள், அணுகுமுறையில் சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்தவல்ல கையேடுகளாக இருக்கின்றன.
இவற்றில் உள்ள அறிவுபூர்வமான நுட்பங்கள், மேம்பட்ட அணுகுமுறை மாற்றங்களை முயற்சி செய்வது தனிமனித வாழ்க்கையை முன்னேற்றுவதோடு, நாகரிகமான சமுதாய முன்னேற்றத்திற்கும் அவசியமான மாற்றங்களை நிகழ்த்துகின்ற பயிற்சிகளாக இருக்கின்றன.
சமுதாய மாற்றம்:
மாற்றம் என்பது எப்போதும் ஒரே விதமாக இல்லாமல், ஒவ்வொரு காலநிலைக்கும் ஏற்றபடி, மக்கள் வாழும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி பல மாற்றங்களைத் தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டேயிருக்கிறது.
மேலும், புதிய வடிவங்களோடு புதிய பரிமாணங்களோடு புதுமையாக வளர்ந்துகொண்டே இருப்பதனால், மாற்றம் என்பது மாறாதது என்ற சிறப்போடு உலக முன்னேற்றத்திற்கு அடிப்படையாக தொடர்ந்து இயங்குகிறது.
பேசிஅறியாத ஆதிமனிதர்கள் எழுப்பிய ஒலிகள் காலத்தினால் பல மாற்றங்களை பெற்று பலவிதமான மொழிகளாக வளர்ச்சி அடைந்திருக்கின்றன. படிப்பு என்பதை அறியாத மக்கள் படிப்படியாக உருவாக்கிய வடிவங்கள் பல மாற்றங்கள் அடைந்து இன்று கல்வியின் வளர்ச்சியைக் கூறுகின்றன.
இவ்வாறு காலம்தோறும் பெயர் தெரியாத பல்வேறு மக்களின் முயற்சிகளும், பல்வேறு நிலைகளில் உருவாக்கிய மாற்றங்களும் இன்றைய நாகரிகமான உலகத்தின் பல்வேறு துறைகளாக வளர்ச்சிபெற்று, இன்றைய சமுதாயம் சிறப்பாக வாழ்வதற்கு உறுதுணையாக இருக்கின்றன.
மாற்றம் ஏற்றம் முன்னேற்றம்:
பிரமாண்டமாகத் தோற்றமளிக்கும் பெரிய மாடமாளிகையாக இருந்தாலும் அது சிறிய கற்களைக் கொண்டே கட்டப்படுகின்றது என்ற உண்மையைப்போல, அன்றாட நடைமுறையில் மேற்கொள்ளப்படும் சிறிய செயல்களும், சிறிய மாற்றங்களும் வாழ்க்கையின் உயர்வான விளைவுகளுக்கு அடிப்படையாக இருக்கின்றன என்பதும் உண்மையே.
சிறிய புன்னகையில் மலரும் முகம் ஒரு சூழ்நிலையை இனிமையாக மாற்றுகிறது என்றால் கூடுதலாக முயற்சி எடுத்து செயல்படும் மனிதனின் ஒவ்வொரு செயல்பாடும் உலகத்தின் மாபெரும் மாற்றத்திற்கு அடிப்படையாக இருக்க முடியும் என்பதும் சாத்தியம்தானே!
அன்பு, நட்பு, காதல், அனுசரணை, மன்னிப்பு, நன்றி, பொறுப்பு, மகிழ்ச்சி எனும் மனதின் ஆழமான உணர்வுகள் பரிமாறப்படுகின்ற சூழ்நிலைகளில் உணர்வுபூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தி உறவு நிலைகளை மேலும் உறுதியாக்குகின்றன.
இவ்வாறு ஒவ்வொரு நிலையிலும் ஒளிந்துகொண்டிருக்கும் இத்தகைய மெல்லிய உணர்வுகளை, மாற்றங்களை வெளிக்கொண்டுவரும் முயற்சிகளே வாழ்க்கையின் வளர்ச்சிகளாக விரிகின்றன. இத்தகைய வளர்ச்சிகளைத் தொடர்ந்து பெறுகின்ற சமுதாயம் இயல்பாக முன்னேற்றம் அடைவதும் உறுதியானதாக இருக்கும்.
உலக இயக்கத்தில் இணைந்து மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர்கள் மிகச்சிறந்த வரலாற்று நாயகர்கள், மிகப்பெரிய சாதனையாளர்கள் என புகழ்பெற்றவர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.
சிந்தையும் செயலும் ஒன்றுபட்டு நேர்மையாக வாழ்கின்ற ஒவ்வொரு சாமான்ய மனிதனும் உலக வளர்ச்சியின் ஒருபகுதியாகச் செயல்பட்டு, இயற்கையின் பதிவேடுகளில் பயனுள்ளவனாகப் பதிக்கப்படுகிறான் என்பது நிச்சயமான உண்மை.
இயற்கையின் அற்புதமான ஏற்பாடுகளுள் ஒன்றாக இருக்கும் மனிதனுக்கு, சுயமாகச் சிந்தித்துச் செயல்படும் தன்மை எனும் சுதந்திரம் இயற்கை தந்திருக்கும் சிறப்பான வரம். இந்த வாய்ப்பை வாழ்நாள் முழுவதும் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு மட்டுமே முன்னேற்றங்களுக்கு அவசியமான விதியாக இருக்கிறது.
பெரிய மாற்றங்கள், முன்னேற்றங்கள், வெற்றிகள் என உலக வரலாற்றை உருவாக்கிய அனைத்து விளைவுகளுமே பல்வேறு வகையான மனிதர்களின் சிந்தனைகள் எனும் விதைகளிலிருந்து விளைந்த வெளிப்பாடுகளே.
இத்தகைய விளைவுகள் சமூகத்தில் ஏற்படுத்துகின்ற மற்றமே உலக இயக்கத்திற்கு அடிப்படையான முன்னேற்றத்திற்கு அச்சாணியாக விளங்குகின்றது என்பது முற்றிலும் உண்மை.
இந்த முயற்சியில் நம்முடைய பங்கும் பொறுப்பும் நிச்சயமாக இருக்கிறது என்று உணர்வதே இன்றைய சிந்தனையின் நேர்மறையான மாற்றம்.
# நன்றி.
