ஓர் ஊரில் பொன்னன் என்பவன் தன் மனைவி வள்ளியோடு வாழ்ந்து வந்தான். ஒருநாள் காலை, வெளியூரில் வசிக்கும் அவனுடைய அண்ணன், பொன்னனைப் பார்க்க அவனுடைய வீட்டிற்கு வந்தார்.
அவரை அன்போடு வரவேற்ற வள்ளி உணவளித்து உபசரித்தாள். பொன்னன் வழக்கம்போல தாமதமாக எழுந்து, ஊரிலிருந்து வந்த அண்ணனிடம் நலம் விசாரித்துவிட்டுத் தன்னுடைய காய்கறி தோட்டத்திற்குக் கிளம்பிச் செல்வதற்கு மதியவேளை ஆகிவிட்டது. பிறகு, சிறிது நேரத்திலேயே வெயில் அதிகமாக இருக்கிறது என்று சொல்லித் தோட்டத்திலிருந்து சோர்வாக வந்து படுத்துக்கொண்டான். இதைக் கவனித்த அவனுடைய அண்ணன் அன்றைய இரவு பொன்னனோடு பேசினார்.
அப்போது பொன்னன், விவசாயத்தில் தனக்கு ஒன்றுமே கிடைப்பதில்லை என்றும், தான் வைத்திருக்கும் பசுக்களும் குறைந்த அளவே பால் தருகின்றன, அதை வைத்துதான் ஏதோ காலம் ஓடுகிறது, வேறு எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் கூறினான். மேலும் இந்தக் கவலையால் தனக்கு இரவில் தூக்கமே வருவதில்லை, உடலும் பலகீனமாக இருக்கிறது என்றும் கூறினான்.
இதைக் கேட்ட அவனுடைய அண்ணன், “ஊரில் உள்ள நிலங்கள் எல்லாம் நன்றாக விளைந்திருக்க உனக்கு மட்டும் ஏன் சரியாக விளைவதில்லை?’, என்று கேட்டார். தன்னுடைய அதிர்ஷ்டம் அப்படி என்று கூறிய பொன்னன் பெருமூச்சு விட்டுக்கொண்டான்.
சற்று நேரம் யோசித்த அவனுடைய அண்ணன், “இதற்காகக் கவலைப்படாதே பொன்னா, உனக்கு அதிர்ஷ்டம் வரும் வழியை நான் சொல்கிறேன்”, என்றார். பொன்னனை அருகில் அழைத்து, “அன்னப்பறவைகளை உன் கண்களால் கண்டுவிட்டால் நீ அதிர்ஷ்டசாலி ஆகிவிடுவாய்”, என்றார்.
இதைக்கேட்ட பொன்னனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. “ஆனால் அன்னப்பறவைகளுக்கு எங்கே போவது!”, என்று கேட்டான். அதற்கு அவர், “உன்னுடைய விளைநிலத்தைக் கடந்து சற்று தூரத்தில் உள்ள ஆற்றின் மறுகரையில் அன்னப்பறவைகள் வருகின்றன”.
“காலையில் அன்னப்பறவையைப் பார்க்கும்போது, உன்னுடைய தேவைகளுக்கான வேலைகளை தெளிவாக மனதில் நினைத்துக்கொள். அதேபோல மாலையில் பார்க்கும்போது, உனக்குக் கிடைத்த நல்லதை நினைத்து நன்றி சொல். இதுபோல நீ தொடர்ந்து செய்து வந்தால் அதன்பிறகு அதிர்ஷ்டம்தான்” என்றார்.
தனக்கு அதிர்ஷ்டம் வரவேண்டும் என்றால் காலையும் மாலையும் அன்னப்பறவைகளைப் பார்க்க வேண்டும் என்பதை பொன்னன் நன்கு மனதில் வாங்கிக்கொண்டான். அடுத்தநாள் விடியற்காலை பொன்னனை எழுப்பிய அவனுடைய அண்ணன், இப்போது எழுந்தால்தான் அன்னப்பறவையைப் பார்க்க முடியும் என்று கூறி விட்டு, அவரும் ஊருக்குக் கிளம்பிவிட்டார்.
அன்னப்பறவையைப் பார்க்கக் கிளம்பியப் பொன்னன் வயல்வழியே நடந்தான். காலையில் அன்னப்பறவையைப் பார்த்ததும், மனதில் நினைக்க வேண்டிய, தன்னுடைய தேவைகளை எண்ணியபடியே போனான். அந்த ஆற்றங்கரையில் கொக்கு, வாத்து, கிளி இன்னும் வகைவகையான பறவைகள் எல்லாம் இருந்தன. ஆனால் அன்னப்பறவையை மட்டும் காணவில்லை.
நடந்துவந்த களைப்பும், அன்னப்பறவையைப் பார்க்கமுடியாத சலிப்பும் சேர்ந்ததால், சோர்வாகத் திரும்பி வந்துகொண்டிருந்தான். அப்போது அவனுடைய காய்கறி தோட்டத்தில் நன்றாக விளைந்திருந்த காய்களை யாரோ ஒருவன் பறித்து மூட்டையாகக் கட்டிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் பொன்னனுக்கு ஆத்திரம் வந்தது. ஏய்! என்று ஓங்கி சத்தமிட்டான், “எத்தனை நாளாக இப்படி திருடுகிறாய்”, எனக்கேட்டபடி அவனை அடிக்க ஓடினான். அவனோ மூட்டையை கீழே போட்டுவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டான். பொன்னன், மூட்டையிலிருந்து சிதறிய காய்களை சேர்த்து எடுத்து அந்த மூட்டையில் போட்டு, பின்னர் அதைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தான் .
வீட்டில் இருந்த வள்ளி, எப்போதும்போல மாட்டு தொழுவத்தையும் மாடுகளையும் சுத்தம் செய்துவிட்டுப் பாலைக் கறந்து கேன்களில் நிரப்பி வைத்து, கொள்முதல் நிலையம் செல்வதற்குத் தயாராக இருந்தாள். அப்போது அங்கு வந்த பொன்னன், தானே சென்று பாலை விற்றுவிட்டு, காய்கறிகளையும் சந்தையில் விற்றுவிட்டு வருவதாகக் கூறி அவற்றை வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றான்.
பால் விற்றதும், காய்கறி விற்றதும் சேர்த்துக் கையில் கொஞ்சம் பணம் கிடைத்தது. அந்தப் பணத்தில் பசுக்களுக்குத் தேவையான சத்தான தீவனங்களை வாங்கிக்கொண்டு பொன்னன் வீட்டிற்கு வந்தான். கணவனை சந்தாஷமாகப் பார்த்த வள்ளியிடம், “அன்னப்பறவையைப் பார்க்கவேண்டும் என மனதில் நினைத்த உடனே நமக்கு நல்லது நடக்கிறது”, என்று கூறினான்.
மாலையில், அன்னப்பறவையிடம் நன்றி சொல்ல ஆற்றோரம் சென்றான். இப்போதும் அங்கு அன்னப்பறவையைக் காணவில்லை. ஆனால் இப்போது பொன்னன் சோர்வடையவில்லை, இங்கு வந்து பார்த்து, மனதில் நினைத்தாலே அன்னப்பறவை பலனளிக்கும் என்று நினைத்து, அன்று நடந்த நல்லவைகளுக்கு நன்றி சொல்லிவிட்டு, தன்னுடைய விளைநிலம் இருக்கும் வழியிலேயே திரும்பி வந்தான்.
அப்போதுதான், பொன்னன் தன்னுடைய நிலத்தை நின்று பார்த்தான். பக்கத்தில் உள்ள இரண்டு நிலங்களும், தன்னுடைய நிலப் பகுதியையும் சேர்த்து எடுத்து வரப்பை நெருக்கி வைத்து விட்டார்கள் என்பதை கவனித்தான். மறுநாள் அதை ஊர் பஞ்சாயத்தில் சொல்லி நிலத்தை அளந்து எடுத்து, வரப்பை சரி செய்து கட்டி வைத்தான்.
இப்படியே தினமும் காலையிலும், மாலையிலும் ஆற்றங்கரையோரம் வந்து தன்னுடைய தேவைகளையும், நன்றியையும் அன்னப்பறவையை நினைத்துச் சொல்லி வந்தான். பொன்னனுக்கு இப்போதெல்லாம் அதிகாலை எழுந்ததிலிருந்து இரவு வரை வேலை சரியாக இருந்தது. இதனால் இரவில் நன்றாக தூங்கி எழுந்தான். இப்படியே சில மாதங்கள் ஓடின.
இந்நிலையில் ஒருநாள், அவனுடைய அண்ணன் மறுபடியும் பொன்னனைப் பார்க்க வந்தார். அதிகாலையில் எழுந்து சென்று நிலத்தைக் கவனிப்பதால் இப்போது நல்ல லாபம் கிடைப்பதையும், பசுமாடுகளை நன்றாக பராமரிப்பதால் பால் விற்கும் பணமும் திருப்தியாக இருக்கிறது என்றும் கூறினான்.
பொன்னனின் உறுதியான உடலும், தெளிவான முகமும், நிறைவான பேச்சும் வளமான வாழ்க்கையும் அவனுடைய அண்ணனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. தன்னுடைய சிறிய முயற்சியைச் சரியாகப் புரிந்து கொண்டு செயல்படுத்திய தன் தம்பியைப் பெருமையோடு பார்த்து மகிழ்ந்தார்.
காலை சூரியனும், மாலை சந்திரனுமே அதிர்ஷ்டம் தரும் அன்னப்பறவைகள் என்பதைக் குறிப்பால் உணர்த்திய அண்ணனுக்குப் பொன்னன் நன்றி கூறினான். உரிய காலத்தில் முறையாகச் செய்யப்படும் உழைப்பும், கிடைத்த ஒவ்வொரு வாய்ப்புக்கும் வெளிப்படுத்தப்படும் நன்றியும்தான் நிறைவான வாழ்க்கையைத் தரும் என்பதைத் தெரிந்து கொண்ட பொன்னன், தன் அன்பான வள்ளியோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.
# நன்றி.