மாற்றம் மனதிலும் வேண்டும். Maatram Manathilum Vendum. Change is Also Need in The Mindset.

நேற்று போல் இன்று இல்லை:

மனிதன், தோன்றிய காலம்முதல் பலவகையான மாற்றங்களைத் தொடர்ந்து நிகழ்த்துவதன் மூலமே தன்னுடைய வளர்ச்சியை வெளிப்படுத்துகிறான்.  மாற்றம் ஒன்றே மாறாதத் தன்மையுடையது என்று கூறப்படும், இந்த மாற்றம் வாழ்க்கையை உயர்த்தும் வகையில் முன்னேற்றமாக இருக்கும்போது முழுமையான பலனைத் தருகிறது.  இதனால், சமுதாயமும் வளர்ச்சிப்பாதையில் பெருமையாக நடைபோடுவதற்கு வாய்ப்பாக அமைகிறது.   

நவீன வாழ்க்கை அமைப்பிலும், நாகரிகத் தோற்றத்திலும், சிறப்பை வெளிப்படுத்தும் மனிதன், மனதளவில் ஏற்படும் மாற்றங்களிலும்  தெளிவான வளர்ச்சியடைந்து  தன்னையும், சூழலையும் மகிழ்ச்சியாக மாற்றினால் அதுவே உண்மையான முன்னேற்றமாக இருக்கும்.

இத்தகைய முன்னேற்றத்தைத் தரக்கூடிய, பல்வேறு appகளாக, முன்னோர்களின் அறிவுரைகள், நீதி நெறிகள், வாழ்க்கை அனுபவங்கள், சுவாரஸ்யமான கதைகள் என ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.  இவற்றில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை மனதில் download செய்து, பொருத்தமாகப் பயன்படுத்தும்போது இவை மனவளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன.  மேலும் இவை, மனிதனிடம் இயல்பாக உள்ள சில குணக்குறைகளையும் நீக்கி,  இன்றைய காலத்துக்கு ஏற்றவகையில் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ள உதவும் சிறந்தக் கருவிகளாகவும்  இயங்குகின்றன. 

Update: புதுப்பித்தல்: 

சிறப்பாகப் படமாக்கப்பட்டு, திருத்தமாக எடிட் செய்யப்பட்டு, விருதுக்கும் தகுதி பெற்று, வெளிவரும் விருப்பமான வீடியோவைப் போல வாழ்க்கையும் தொய்வில்லாத சீரான ஓட்டமாக இருக்க வேண்டும் என்பது இன்றைய வலைதள உலகின்  எதிர்பார்ப்பாக இருக்கிறது.  

ஆனால், பயிற்சிகள், ஒத்திகைகள் போன்றவற்றைக் கடந்தும் எதிர்பாராத சமயங்களில், தவிர்க்கமுடியாத, எடிட் செய்யமுடியாத bloopersகளையும் சேர்த்துதான் வாழ்க்கை வடிவமைக்கப் பட்டுள்ளது என்பதுதான் யதார்த்தம்.  

இந்நிலையில், அனுசரித்துச் செல்வதற்கு அவசியமே ஏற்படாத,  பின்னடைவுகளே இல்லாத சிறந்த screenplay கொண்ட  வாழ்க்கைதான் மகிழ்ச்சியான வாழ்க்கை என்ற மேலோட்டமான பார்வையை, நடைமுறைக்கு ஏற்றபடி மாற்றவேண்டியது அவசியம்  அல்லவா?  

சவாலான சூழ்நிலைகள், தோல்விகள், புறக்கணிப்புகள் போன்றவற்றை எவராலும் முற்றிலும் தவிர்த்துவிட முடியாது.  ஆனால், அவை ஏற்படுத்திய காயங்களை, வலியில்லாத நினைவுகளாக, வெறுப்போ கோபமோ இல்லாத அனுபவங்களாக நிச்சயமாக மாற்றமுடியும்.  

அவ்வாறு மாற்றும் சக்தியை அன்பான, நேர்மறையான செயல்களின் மூலமே இயல்பாகப் பெறமுடியும். வாழ்க்கையில் தொடர்ச்சியாகச் சந்திக்கும் சூழ்நிலைகளே மனதின் உறுதிக்கு மாறாத சாட்சியாக இருந்து நம்மை ஒவ்வொரு வினாடியும் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றன.  

பொறுமையும், நம்பிக்கையும்:

ஒரு சிற்பம் அது உருவாகும் நிலையிலேயே கண்திறந்து, முழுமைப் பெறாத தன்னிலை கண்டு வருந்தி, உளியை வெறுத்தால் முழுமையான சிற்பமாக உருவாக முடியுமா?  நம்பிக்கையோடும் பொறுமையோடும் உளியை உறுதியாக எதிர்கொள்ளும் சிற்பமே முழுமைப் பெற்று, சிறப்பான கலைவடிவமாகக்  கொண்டாடப்படும். 

தலைமுறைச் சங்கிலியின், தொடர் கண்ணியாக இணைந்திருக்கும்  மனிதன், தன்னுடையக் கடமைகளை முறையாக, முழுமையாக, மனநிறைவோடு பூர்த்திச் செய்வதே வாழ்க்கையின் நோக்கம்.  இந்த நோக்கம் வெற்றியடைவதால்  ஏற்படும் மகிழ்ச்சியே தொடர்ந்து வரும் தலைமுறைகளுக்கு இயல்பான பரிசாகத் துணைநின்று பலனளிக்கும். 

மாறுகின்ற சூழ்நிலை மாற்றங்களை நிதானத்துடன் தெளிவாக அணுகும் பண்பு, வாழ்க்கை நடைமுறைகளைப் புரிந்துகொள்ள உதவும்.  காத்துநிற்கும் கடமைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தும்போது மனம் ஒருமுகப்பட்டுச் செயல்கள் சீராக சிறப்பாக வெளிப்படும்.  இதனால் மகிழ்ச்சியான வாழ்க்கையும் வளர்ச்சிப்பாதையில் முன்னோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும்.

#  நன்றி.

 

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *