நாட்டுமக்கள் மீது அன்பு நிறைந்த, மிக நேர்மையான மன்னருக்கு நான்கு மகன்கள் இருந்தனர். இந்த நான்கு மகன்களுள் நாட்டைச் சிறப்பாக ஆள்வதற்கான தகுதி, நியாயமாக யாருக்கு இருக்கிறதோ அவனுக்கே மகுடம் சூட்ட வேண்டும் என்று மன்னர் நினைத்தார். இதனால் வருங்கால மன்னனை தேர்ந்தெடுக்கும் வழக்கமான முறைகளைத் தவிர்த்துவிட்டு, நுட்பமாக ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என எண்ணினார்.
இதனால், அந்நாட்டில் இருக்கும் அறிவும், திறமையும், நிறைந்த அனுபவமும் உள்ள மிகப்பெரிய நீதிமானாகிய மௌன குருவே இதற்குச் சரியானவர் என மன்னர் தீர்மானித்தார்.
எனவே, நான்கு இளவரசர்களையும் அழைத்து மௌன குருவிடம் சிலகாலம் தங்கியிருந்து அவருடைய கட்டளைகளை ஏற்று பயிற்சிப் பெற்று, அதில் சிறப்பாகத் தேர்ச்சிப் பெற்று வருமாறு அனுப்பி வைத்தார்.
மௌன குருவின் கட்டளைகளை உணர்ந்து, அவருக்குக் கீழ்ப்படிந்து அவரது கண்காணிப்பிலேயே தங்கி படிப்பது இளவரசர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. என்றாலும் வேறு வழியின்றி குருவைப் பணிந்து அங்கேயே பயிற்சி பெற்றனர். விரைவிலேயே குருவின் ஆலோசனைகளையும், உபதேசங்களும் புரிந்துகொண்டு ஒழுக்கமான முறையில் பயிற்சிபெற்று அதில் தேர்ச்சிப் பெற்றார்கள்.
நல்லமுறையில் தேர்ச்சிப்பெற்ற இளவரசர்களை வாழ்த்திய குரு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு நிறைகுடத்தைத் தன்னுடைய பரிசாகக் கொடுத்தார். மகிழ்ச்சியோடு அதைப் பெற்றுக்கொண்ட இளவரசர்கள் அரண்மனைக்குச் சென்றார்கள்.
குருவிடமிருந்து கற்றுக்கொண்ட வித்தைகளை மன்னனிடம் இளவரசர்கள் மகிழ்ச்சியுடன் கூறினார்கள். பின்னர், குரு கொடுத்தனுப்பிய பரிசுப்பொருளான நிறைகுடத்தையும் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியோடு காட்டினார்கள்.
முதலாவது குடத்தை மன்னர் திறந்து பார்த்தார். அதில் மிகத் தூய்மையான தண்ணீர் இருந்தது. தூய்மையான நீர் நிறைந்த நிறைகுடமாக தன்னை குரு அடையாளம் காட்டியுள்ளதாக இளவரசன் மகிழ்ச்சியோடு கூறினான்.
பின்னர் இரண்டாவது குடத்தை மன்னர் பார்த்தார். அதில் சுவையான பால் இருந்தது. அதைக் கண்ட இளவரசனுக்கு மகிழ்ச்சி பொங்கியது.
மூன்றாவது குடத்தை மன்னர் திறந்து பார்த்தார். அது சுவை மிகுந்த பாயசம் நிறைந்த குடமாக இருந்தது. அனைத்து விதமான கலைகளையும் மிகச் சிறப்பாக கற்றுவிட்ட தன்னுடைய திறமைக்கு ஏற்ற நல்ல பரிசு என நினைத்து அடுத்தவன் அளவற்ற பெருமை கொண்டான்.
இப்போது நான்காவதாக நிற்கும் இளவரசன் கொண்டுவந்த குடத்தில் நிறைய தேன் இருப்பதைக்கண்ட மன்னர் மிகவும் மகிழ்ந்தார்.
மிகப் பணிவோடு நின்றிருந்த இளவரசன், தன்னுடைய அறியாமையை படிப்படியாக போக்கி, தனக்குச் சரியான பாதைக் காட்டிய குருவை மனதார வணங்கினான். சரியான சமயத்தில் தன்னுடைய துடுக்கடக்கி வாழ்க்கைக்குத் தேவையான பயிற்சிக்கு வழி ஏற்படுத்திய தன் தந்தையைப் பணிந்து வணங்கினான்.
நான்கு இளவரசர்களும் குரு உணர்த்தும் கட்டளைகளைக் கவனமாக உணர்ந்து, அதை முறையாக நிறைவேற்றியதால் அவர்கள் அனைவருக்கும் நிறைகுடங்களே கொடுத்திருக்கிறார், என்றாலும் அதில் உள்ள பொருட்களின் தன்மைகளின் மூலமாக இளவரசர்களின் தகுதியை அவர் மௌனமாக உணர்த்தியிருக்கிறார் என்று மன்னர் புரிந்து கொண்டார்.
தண்ணீர் என்பது உயிர் வாழ மிகவும் அத்தியாவசியமான அடிப்படையான பொருள். இது இயற்கையாகவே இருப்பது. ஒரு மன்னன் தன் நாட்டு மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளை மட்டும் நிறைவேற்றக்கூடியவனாக அடிப்படையான தகுதிகளோடு மட்டும் இருப்பது போதாது.
பால் சுவையானது, சத்தானது என்றாலும் விரைவாக தன்னிலை மாறக்கூடியது. எனவே ஒரு மன்னன் மக்களுக்கு குறுகிய காலப் பலன்களை மட்டும் தருவது முதிர்ச்சியான தன்மை ஆகாது.
மூன்றாவதாக உள்ள பாயசம் மிகச் சுவையானது. ஆடம்பரமான பலப் பொருட்களை உள்ளடக்கியது. அதற்குமேல் வேறொன்றையும் அதனுடன் சேர்க்க முடியாது என்ற பூரித நிலையில் இருப்பது. அதுபோல மன்னன் நிறைவான பல திறமைகளோடு உயர்ந்த நிலையில் இருந்தாலும், மற்றவர் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாத, ஆடம்பரமான மனநிலையில் இருப்பது மன்னனிடம் மக்களை நெருங்க விடாது. இந்தக் குணம் மன்னனின் சிறப்பைக் குறைத்து விடுவதோடு நாட்டின் நலனையும் பாதித்து விடும்.
நான்காவதாக உள்ள தேன் இனிமையானது, எளிமையானது. இது உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடியது. அதுமட்டுமல்லாமல் என்றுமே தன்னிலை மாறாதச் சிறப்புத் தன்மையும் கொண்டது.
அதே போல மன்னன் என்பவன் நாட்டு மக்களுக்கு இனிமையான உணவு போல அவசியமானவனாகவும், மருந்து போல குறைகளைப் போக்குபவனாகவும் இருக்க வேண்டும்.
எளியவராயினும், உயர்ந்தவராயினும், மாற்று கருத்துகள் உள்ளவராயினும் நட்போடு கலந்து இனிமை சேர்க்கும் குணம் உள்ளவனாக இருக்க வேண்டும். மேலும், தன்னுடைய நல்ல குணங்களை எந்தக் காலத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் நிலையாகக் கொண்டுள்ளவனே மன்னவனாக முடிசூட்ட தகுதியானவன்.
இதை உணர்த்துவதற்காகவே, அமுதக்கடலாக விளங்கும் மௌனகுரு இந்தத் தேன் குடத்தைக் கொடுத்திருக்கிறார் என்று மன்னர் புரிந்து கொண்டார்.
ஒரு தலைவனின் இயல்புகளாக இருக்க வேண்டிய முக்கியமான குணங்களை இந்தக் கதைக் கூறுகிறது. இன்றைய உலகிலும் உயர்ந்தப் பதவிகளுக்குக் கனவு காணும் ஒவ்வொருவரும் அந்தப் பதவிகளுக்கு ஏற்ற தகுதிகளும், மாறாத உயர் பண்புகளையும் கொண்டிருக்கும்போது, அந்தப் பதவி மிகஉயர்ந்த நிலையாக மக்களால் மதிக்கப்படும்.
இந்தக் கதையில் வரும் மன்னனை இறைவனாகவும், குருவைக் காலமாகவும் நினைத்தால் சிந்தனைகள் மேலும் விரிவடையும். தண்ணீர் குடத்துக்கே தளும்புகின்ற மனதைக் கட்டுப்படுத்தி, பொறுமையைக் கடைப்பிடித்து குருவிடம் பயிற்சிப் பெறும்போது அடுத்த நிலைக்கு உயர்ந்து செல்ல வழியுண்டு என்பதை உணர்த்தும் ஒரு சிறு கதை.
# நன்றி.