வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
என்று மனதின் சக்தியைத் திருவள்ளுவர் மிக நுட்பமாகக் கூறியுள்ளார். அவர் கூறியதைப்போலவே பொருத்தமான குறிக்கோளைத் தேர்ந்தெடுத்து, அதில் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் ஆக்கபூர்வமான செயலாக, மாபெரும் சாதனையாக மாறுவதற்கு மனதின் ஊக்கமே மிக முக்கியமான அடிப்படை காரணமாக அமைகிறது.
முக்கியத்துவத்தின் அடிப்படையில் எண்ணங்களை வகைப்படுத்தி, அவற்றை முறையாகச் செயல்படுத்துவதற்குத் தேவையான ஆற்றலை நாம் நம்மிடமிருந்துதான் பெறமுடியும். மனதின் ஊக்கமே, செயலாற்றும் திறனாக வெளிப்பட்டு, அன்றாட கடமைகள் முதல், நாம் கட்டமைக்கும் முக்கிய குறிக்கோள்கள் வரை அனைத்திற்கும் வெற்றியைத் தீர்மானிக்கின்றது. நமக்கு நாமே ‘நல்ல நட்பாக’ இருந்து புத்துணர்ச்சியோடு செயலாற்றுவதற்கு மனதின் ஊக்கமே உறுதுணையாக இருக்கும்.
இதனால் வெற்றியை நோக்கி போராடும் மனதைரியமும் உருவாகும். இதன் விளைவாக, எண்ணங்களுக்கும், செயல்பாடுகளுக்கும் இடையே நடைமுறையில் உள்ள தூரம் குறைந்து, கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்றும் ஆற்றலை விரைவாகப் பெற முடியும். இந்த ஆற்றலே பண்புக்குச் சாட்சியாக நின்று வாழ்க்கையை வடிவமைத்துக் கொடுக்கும்.
மனதில், நெருப்புப் பொறி போல உருவாகும் சிறிய எண்ணம், ஒரு சூழலை வேறொன்றாக மாற்றி விடுகிறது. இவ்வாறு, சூழலின் தன்மையைத் தீர்மானிக்கும் சக்தி கொண்ட எண்ணம் நேர்மறையாக இருக்கும் நிலையில், விளைவுகளும் நேர்மறையாக இருக்கும்.
பிரகாசமான ஒளியில் பாதை தெளிவாகத் தெரிவதுபோல, நேர்மறையான சிந்தனையால் மனம் தெளிவு பெரும். நேர்மறையான சிந்தனைகள் மனதின் ஊக்கத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டவை. இவை, வழுக்கலான தரையில் நடந்தாலும் எச்சரிக்கையோடு நடப்பதற்கேற்ற பாதுகாப்பையும், விழுந்தாலும் உடனே எழக்கூடிய நம்பிக்கையையும் தரக்கூடியவை.
விளைவுகளைக் கருத்தில்கொண்டு, சில சூழல்களைத் தவிர்ப்பதும், மறுப்பதும்கூட நேர்மறையான விளைவுகளை உருவாக்கும். தவிர்க்கமுடியாத சூழல்களை மனஉறுதியோடு எதிர்கொள்வதும், மாற்றமுடியாத நிலைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதும் அந்தச் சூழல்களைக்கடந்து போக உதவும் நேர்மறையான நகர்வுகளே.
நாம் சந்திக்கும் சவால்கள் முன்னேற்றத்தின் படிக்கட்டுகள்தான் என்ற எண்ணமே அவற்றில் உள்ள நன்மையை நமக்கு வெளிப்படுத்தும். எதிர்காலத்தின் ஏதோ ஒரு நன்மைக்காகவே இன்றைய நிகழ்வுகள் கட்டமைக்கப் படுகின்றன என்ற நம்பிக்கையோடு இன்றைய சூழல்களை எதிர்கொள்வதும் மனதிற்கு வலிமை சேர்க்கும் ஒரு வழியாகும்.
தனிப்பட்ட சிந்தனைகளையும், இரசனைகளையும், வெளிப்பாடுகளையும் நேர்மறையாக உயர்த்தக்கூடிய சூழல்களே மனதிற்குப் பெருமளவு ஊக்கத்தை அளித்து, செயல்களைச் செம்மையாக்கும். இதனால் ஏற்படும் மகிழ்ச்சி சுழற்சி முறையில் மீண்டும் மனதிற்கே வந்து சேரும்.
# நன்றி.