கவசம்:
உணவு, உடை, வாழ்க்கை முறை என எல்லாமே பருவக்காலத்திற்கு ஏற்றபடி, காலநேரம் பொறுத்தே அமைகிறது. காலமும், கடமையும் வாழ்க்கையின் கவசம் என அறிந்த நம் மக்கள் அவற்றை முறையாகப் பயன்படுத்தி வந்தார்கள். அதனால், சூரிய ஒளியில் கடுமையாக உழைத்தார்கள், களைப்புத் தீர இரவில் நன்கு உறங்கினார்கள். அதன் பலனாக அதிகாலையில் ஆரோக்கியமாக விழித்தார்கள்.
மனிதர்களின் பலமும், பலவீனமும் காலநேரத்தைப் பயன்படுத்தும் முறையிலேயே ஒளிந்து கொண்டுள்ளது. நேரத்தை நேர்த்தியாகக் கையாளும்போது, கடமையும் காலத்தோடு கைகோர்க்கிறது. இதனால் வெற்றி கைவசமாகும் சூழல் ஏற்படுகிறது.
காலமும், கடமையும்:
காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது என்பதை நன்கு அறிந்து, உரிய காலத்தில் பொறுப்பாகக் கடமையாற்றும் மக்கள் உலகில் வெற்றி பெறுகிறார்கள்.
சரியான நேரத்தில் செய்யப்படும் கடமையும், கடமையைச் செயல்படுத்தப் பொருத்தமான காலமும் ஒன்றுக்கொன்று இணைந்து உலகைத் தொடர்ந்து இயக்குகின்றன.
காலங்கள் என்பவை பருவக்காலங்களாக, இரவு, பகல் என்ற பொழுதுகளாக, கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற நிலைகளாக பலவகையில் வகைப்படுத்தப்படுகின்றன.
இவற்றுள் நமக்குத் தேவையான நல்ல நேரம், சாதகமான நேரம், வெற்றிதரும் நேரம் எல்லாமே இதற்குள்தான் இருக்கிறது.
நல்ல காலம்:
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
உலகளவு பெரிய செயலாக இருந்தாலும் காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து பொருத்தமாகச் செயல்பட்டால் அந்தப் பெரிய செயலும் கைகூடும் என்று பொய்யாமொழிப் புலவர் கூறுகிறார்.
சிறப்பாகச் செயலாற்ற தேவைப்படும் பொருத்தமான காலமே நல்லகாலம் ஆகும். இதை நடைமுறைப் படுத்துவதில் உள்ள வேறுபாடுகளே செயலின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.
வியூகம்:
காலத்திற்கு ஏற்றாற்போல திறமைகளை வெவ்வேறாக வெளிப்படுத்தும் வியூகத்தை, மலர்கள் அனுதினமும் செயல்படுத்துகின்றன.
காலையில் மலரும் மலர்கள் கண்ணை கவரும் வகையில் பல வகை வண்ணங்களில் வர்ணஜாலம் காட்டுகின்றன. மாலையில் மலரும் மலர்கள் இருக்குமிடத்தை இருளிலும் வெளிப்படுத்தும் வகையில் வெளிர் நிறத்தோடும், மனங்கவரும் நறுமணத்துடனும் திகழ்கின்றன.
பருவகாலத்திற்கு ஏற்றாற்போலவும் வெவ்வேறான தனித்தன்மையை வெளிப்படுத்தி, காலத்தை அறிந்து கடமையைச் சரியாகச் செய்யும் மலர்கள் காலத்தின் நியதிகளுக்கு உட்பட்டு, இயற்கையின் கொடையாக விளங்குகின்றன.
வேளையும், வேலையும்:
நெய் தயாரிப்பதை நோக்கமாக நினைத்தாலும் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் என்ற அதன் ஒவ்வொரு நிலையாக மாற்றுவதற்குத் தேவையான நேரமும், அதற்குப் பொருத்தமான செயல்பாடுகளும்தான் நோக்கத்திற்கான நகர்வுகளாக இருக்கின்றன.
இந்த விதிகள் அனைவருக்கும் பொதுவானவைதான் என்றாலும், நிகழ்காலத்தில் அவரவர் கையில் இருப்பது பாலா, வெண்ணெய்யா என்பதை பொறுத்து, நோக்கத்தை அடைவதற்கான நேரமும், செயல்பாடுகளும் மக்களிடையே வேறுபடுகின்றன.
பொறுமை:
நட்டு வைத்த ரோஜா செடியில் பெயருக்கு ஏற்றபடி ரோஜா மலர்வதுதான் மகிழ்ச்சி. ஆனால் இன்று செடி முழுவதும் இலைகளும், முட்களும் மட்டும்தான் இருக்கிறது என்பதற்காக சோர்ந்துவிட்டால் முயற்சி என்பதன் பொருள் என்ன?
இந்நிலையில், கிளைகளை முறையாக வெட்டி, பூச்சி தாக்காமல் பாதுகாத்து, அளவாக நீரூற்றி, தொடர்ந்து செழிப்பாகப் பராமரித்து வருவது இன்றைய கடமைகள். இவையே உரிய பருவத்தில் பலன் பெறுவதற்கான வழிமுறைகள்.
இதைப் போலவே நல்ல நோக்கத்திற்கான எண்ணங்களும், செயல்பாடுகளும், வெற்றியடைவதுதான் மகிழ்ச்சி. ஆனால், தவிர்க்கமுடியாதத் தடைகளால் எண்ணங்கள் வலுவிழந்து போகாமல், சிந்தனையை வளமாக பாதுகாப்பதும், சரியான காலத்தில் உறுதியாகச் செயல்படுவதும்தான் நோக்கம் வெற்றி பெறுவதற்கு ஏற்ற முயற்சியாக இருக்கும் .
காலநிலைகள்:
ஒவ்வொரு மனிதனும் நிகழ்காலத்தின் நொடியில் வாழ்ந்தாலும் கடந்த காலமும், எதிர்காலமும் தான் அந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுகின்றன.
கடந்தகாலத்தில் கிடைத்த வெற்றிகளும், தோல்விகளும்தான் நிகழ்காலத்தில் உற்சாகத்தையும், எச்சரிக்கையையும் தருகின்றன. இதனால் அனுபவப்பட்ட மனிதனுக்கு நிகழ்காலத்தில் நிதானமாகச் செயல்படும் மனநிலை ஏற்படுகிறது.
எதிர்காலத்தின் தேவைகளும், குறிக்கோள்களும்தான் வாழ்க்கையை முன்னோக்கி செலுத்துகின்ற உந்துசக்திகளாக விளங்குகின்றன. இவையே நிகழ்காலத்தில் மனிதன் முனைப்பாக செயல்படுவதற்கான உத்வேகத்தையும், முயற்சியையும் ஏற்படுத்துகின்றன.
நிகழ்காலம் என்பது முகம் காட்டும் கண்ணாடி போன்றது. இந்தக் கண்ணாடி காட்டுகின்ற பிம்பத்தில் கடந்த காலத்தின் பதிவுகளும் கண்ணுக்குத் தெரியும், எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளும் இருக்கும். எனவே, நிகழ்காலத்தின் முன்னால் நமக்கு நாமே பார்வையாளராக இருந்து செய்யப்படும் திருத்தமான செயல்பாடுகளே அழகான முன்னேற்றமாக இருக்கும்.
இவ்வாறு, கடந்த காலத்தின் அனுபவத்தையும், எதிர்காலத்தின் குறிக்கோளையும் கருத்தில் கொண்டு, மனதை ஒருநிலைப்படுத்தி செயல்படும் நிகழ்காலம், அர்த்தமுள்ள வாழ்க்கையாகச் சிறந்து விளங்கும்.
# நன்றி.