தொட்டுவிடும் தூரம்தான்.
சிறந்த குருவும், அவருடைய சீடரும் வெற்றியூர் என்ற ஒரு ஊரை நோக்கி சென்றுகொண்டிருந்தனர். நீண்ட தூரம் நடந்த பின்னர், எதிரில் வந்த விவசாயிடம், ஊரின் பெயரைச் சொல்லி, “அந்த ஊர் இன்னும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?”, என்று சீடர் கேட்டார். அந்த விவசாயி, “இன்னும் இரண்டு கிலோமீட்டர் போகவேண்டும்”, என்றார்.
குருவும், சீடரும் இரண்டு கிலோமீட்டர் நடந்து, காடு மேடு எல்லாம் கடந்த பிறகும், எந்த ஊரும் கண்ணுக்குத் தெரியவில்லை. எனவே அங்கு ஆடு மேய்ப்பவனைப் பார்த்த சீடர் அவனிடமும் அதே கேள்வியைக் கேட்டார். அவனும் இரண்டு கிலோமீட்டர் தூரம் இருப்பதாக அதே பதிலைக் கூறினான்.
கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் மேலும் பல கிலோமீட்டர் நடந்தும் ஊர் ஏதும் கண்ணுக்குத் தென்படாததால் களைப்படைந்த சீடர், மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தார்.அப்போது ஒரு வயதான பெண்மணி எதிரில் வருவதைப் பார்த்த சீடர், அவரிடம் தன்னுடைய கேள்வியைக் கேட்டார்.அந்தப் பெண்மணியும் புன்னகையோடு, இன்னும் இரண்டு கிலோ மீட்டர் இருப்பதாக அதே பதிலைக் கூறிச் சென்றார்.
இதைக் கேட்ட சீடருக்குஒன்றும் புரியவில்லை, “எல்லோரும் ஏன் இப்படி கூறுகிறார்கள். எப்போதுதான் அந்த இரண்டு கிலோமீட்டரை கடந்து நாம் ஊரை அடைவோம்?”என்று குருவிடம் கேட்டார்.
அதற்கு அந்தக் குரு, “பயணம் என்பதே நீண்ட தூரத்தைக் கடந்து செல்ல வேண்டும் என்பதுதானே, ஆனால் அந்தப் பயணத்தில் சந்திக்கும் கடினமான சூழ்நிலைகள், சில நேரங்களில் நம்மைச் சலிப்படையச் செய்கின்றன. அம்மாதிரியான நேரங்களில் நாம் செல்லவேண்டிய தூரத்தை மலைப்பாக நினைத்துச் சோர்வடையாமல், மகிழ்ச்சியாகப் பயணிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தால், இன்னும் சிறிது தூரம்தான் உள்ளது என்று நமக்கு ஊக்கம் தரும் நோக்கத்தில் அவ்வாறு கூறுகிறார்கள்”.
வாழ்க்கையும் ஒரு பயணம்:
நடைமுறை வாழ்க்கையில், “இந்தப் பகுதியை மட்டும் கடந்து விட்டால் அப்புறம் மகிழ்ச்சிதான்” என்று சொல்லியே ஒன்றன்பின் ஒன்றாக நம்மைத் தொடர்ந்து முன்னிழுக்கும் கடமைகள்தான் நம்மை முன்னோக்கிப் பயணிக்க வைக்கின்றன.
முன்னெற்றி புடைக்க விழுந்து விழுந்து படிக்கும் படிப்பு, வியர்க்க வியர்க்க அலைந்து திரிந்து கிடைக்கும் வேலை, வீடு, குடும்பம்,…என்று நோக்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மாறினாலும், இதோ,இதோ! என்று கடமைகள் நம்மை தொடர்ந்து கைப்பிடித்து முன்னோக்கி இழுத்துச் செல்கின்றன. இந்தப் பயணத்தில், இவையெல்லாம் உலகபந்தமா அல்லது நிர்பந்தமா? என்ற நிலையில் “எப்போதுதான் மகிழ்ச்சி வரும்?” என்று கடுப்பாவதும் இயற்கைதான்.
மகிழ்ச்சி என்பது குறிப்பிட்ட ஊர் போலவோ, மலைபோலவோ தனியாக எங்கோ இருப்பதில்லை என்பதால், நாம் வாழ்க்கையைப் பார்க்கும் கோணத்தில் மகிழ்ச்சியை உணர்வதுதான் ஒரேவழி. பூவின் வாசனைப் போல, வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியிலும் உள்ளிருக்கும் மகிழ்ச்சியை உணர்வோடு காண்பவர்கள்தான் எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். உடன் இருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தருகிறார்கள்.
முதன் முதலில் பள்ளியில் சேரும்போது, அந்த முதல்நாளைக் கடப்பதே மிகப்பெரிய சாதனையாக இருந்திருக்கும். அதையே ஒவ்வொரு நாளாக, ஒவ்வொரு வருடமாக படித்து, பள்ளி, கல்லூரி என பலவருடங்கள் படிப்பு, பட்டம் என நீண்டகாலம் கடந்து வந்திருக்கிறோம். இந்தக் காலகட்டத்தை எத்தனை வருடங்கள் கழித்து நினைத்தாலும் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம், அந்த வயதில் அனைத்திலும் மகிழ்ச்சியைப் பார்த்தப் பழக்கம்தான்.
உறவினர் சந்திப்பும், விளையாட்டுகளும் விதிமுறைகளோடு இருந்தாலும், அவை விடுமுறை மகிழ்ச்சியின் அடையாளங்களாக இருந்தன. கல்வியும், கண்டிப்பும் முதன்மையாக இருந்தாலும், அவரவர் இயல்போடு பழகும் தோழமைகளின் பேச்சும், சிரிப்பும் கல்விக்கூடங்களின் மகிழ்ச்சியாகப் பொங்கி வழிந்தன.
இப்படி, எல்லாவற்றிலும் மகிழ்ந்து, மகிழ்வித்துப் பழகும் நல்ல பழக்கத்தை இயல்பாகக் கொண்டிருக்கும் நாம், வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் இதைத் தொடர்ந்து முயற்சி செய்தால், வாழும் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாகவே இருக்கும்.
Getting Success is Sure in Life, Do Ensure The Happiness in That.
# நன்றி.