வெற்றி:
நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் வெற்றி பெறவேண்டும் என்றுதான் கடினமாக உழைக்கிறோம். அவ்வாறு அந்த வெற்றி கிடைத்தபிறகு, அதைக் கையாளும் திறனை வளர்த்துக் கொள்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நம்மில் சிலர் வெற்றியை மட்டும் நன்கு திட்டமிடுகிறார்கள். ஆனால் அதனுடன் வரும் தொகுப்பைத் திட்டமிடுவதில்லை. அதனால்தான் அவர்கள் விரும்பிய வெற்றி கிடைத்தாலும் அதன் தொகுப்புகளின் பாதிப்பால் மனஉளைச்சலில் வீழ்ந்து விடுகின்றனர்.
தொகுப்புகள்:
புதிதாகக் கைப்பேசியை வாங்கும்போது, அதனுடன் அதற்குத் தேவையான சில இணைப்புப் பொருட்களும், தேவையற்ற நெகிழிப்பைகளும் அட்டைகளும் பெட்டியும் சேர்த்தே கிடைக்கின்றன.
அணுகுமுறை:
கல்வி, வேலை, குடும்பம், பொதுவாழ்க்கை, என்ற எந்த நிலைகளிலும் வெற்றி என்பது அதனதன் தொகுப்பாகத்தான் கிடைக்கும். நாம்தான் அதிலுள்ள சவால்களை மனஉறுதியோடு எதிர்கொண்டு நிதானமாகக் கையாள வேண்டும்.
இந்தச் சவால்களை எந்த அளவுக்கு நேர்த்தியாகக் கையாள்கிறோமோ அந்த அளவுக்கு வெற்றியும் வலிமைபெரும். இத்தகைய அணுகுமுறையே சிறந்த அனுபவங்களை தந்து நமக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும்.
சவால்கள்:
நம் கண்முன்னே உயர்ந்து நிற்கும் எல்லா மனிதர்களும், அவரவர் துறையில் வெற்றி பெறும்போது, உருவாகும் புதிய சவால்களில், எதைப் பொருட்படுத்தி எதிர்கொள்ள வேண்டும், எதைப் புறந்தள்ள வேண்டும் என்ற புரிதலோடு திறம்படக் கையாளும்போது மட்டுமே அந்த வெற்றியைத் தக்க வைத்து கொள்கிறார்கள்.
வெற்றியுடன் தொகுப்பாக வரும் சவால்கள் என்பது பொறுப்புகள் மட்டும் அல்ல. போட்டிகள், பொறாமைகள், சூழ்ச்சிகள், சுழற்றியடிக்கும் சூழ்நிலைகள், ஈகோ எனும் சுயகர்வம் போன்ற முட்களாலான மகுடமும், அதனுடன் சிவப்புக் கம்பளத்தில் வரவேற்கும் புதிய எதிர்பார்ப்புகளும் சேர்ந்துதான் தவிர்க்க முடியாத தொகுப்புகளாக, நாம் விரும்பும் வெற்றியோடு தொகுப்பாகக் கிடைக்கின்றன. இவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்ற தெளிவுதான் நம் மனஉறுதியை வலிமையாக்கும் உரமாகும்.
வெற்றி என்பது வாழ்க்கையல்ல, அதற்காக நாம் எப்படி உழைக்கிறோம், வெற்றி தோல்விகளை எப்படி எதிர்கொள்கிறோம், அதிலிருந்து நாம் தெரிந்துகொண்ட அனுபவங்கள் என்ன, என்பதுதான் வாழ்க்கை ஆகும். எனவே, வாழ்க்கையில் கிடைக்கும் அனுபவங்களை நம்பிக்கையோடு சந்தித்து மனஉறுதியோடு வாழ்ந்து மனநிறைவைப் பெறுவோம் .
# நன்றி.