கல்வியா, செல்வமா, வீரமா? Kalviya, Selvama, Veerama? Legendary Persons.

கல்வியா, செல்வமா, வீரமா?

இது  நமக்கு நன்கு தெரிந்த பாடல் வரிதான். ஆனால் இந்த  மூன்றில் எது சிறந்தது என்று நாம் ஆராயப்போவதில்லை.  ஏனெனில், ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா? என்று கேட்டு,  இந்த மூன்றும் துணை இருந்தால்தான் நலம் சேரும் என்று, அந்தப் பாட்டிலேயே தீர்வும் கூறிவிட்டார்கள். 

திறமை வாய்ந்தவர்கள் பலர், இந்த மூன்றையும் துணைசேர்த்து, பல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி, புகழ் பெற்று வாழ்ந்துள்ளனர்.  அவ்வாறு, தங்கள் எல்லையை விரிவுபடுத்தியவர்களுள், தங்களுடையப் பயணத்தை மற்றவர்களுக்குப் பாதையாக அமைத்தவர்களும் உண்டு.  

இவ்வாறு ஒன்றிலிருந்து மற்றொன்றை உருவாக்கி, நாட்டுக்கும் நலம் சேர்த்த, புகழ்பெற்ற பெண் ஆளுமைகளுள், ஒரு சிலரை மட்டும் இந்தப் பதிவில் நினைவுப்படுத்திக் கொள்வோமா?

கல்வி (அறிவு), செல்வம் (செல்வாக்கு), வீரம் (மனதைரியம்) என்ற மூன்றையும் பெண்கள் எப்படி கையாண்டார்கள்  என்று பார்க்கும் அதே நேரத்தில் இந்தத் துறைகளில் பெண்களின் வெற்றிக்குத் துணையாக இருந்த ஆண்களின் நட்பையும், அவர்களின் மனவளத்தையும், நாம் மிகுந்த மகிழ்ச்சியுடன் நினைவுகூர்தல் நன்று.

கல்வியே அடித்தளம்:

“அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தறித்த குறள்”, என்று கூறி, அணுவைப் பற்றி விஞ்ஞானிகள் கண்டறிவதற்கு முன்பே,  “இடைக்காடர்” கூறிய கடுகைவிட அணு மிகச் சிறியது என்று உலகிற்குக் கூறிய ஒளவையாரின், ஆழ்ந்து, அகன்ற அறிவுத்திறன், சான்றோர் அவையில் முந்தி நிற்கிறது. 

 “வரப்புயர நீர் உயரும், 

 நீர் உயர நெல் உயரும், 

நெல் உயரக் குடி உயரும், 

குடி உயரக் கோல் உயரும், 

கோல் உயரக் கோன் உயர்வான்.”  

என்று கூர்த்த மதியுக மந்திரியாகச் சிந்தித்து, நாட்டின் உயர்வுக்கு வழிகாட்டுகிறார்.  சிறந்த கல்வியினால் கிடைத்த அடித்தளத்தின் மூலம், “கற்றோர்க்குச் சென்ற இடமெலாம் சிறப்பு” என்பதற்குச் சாட்சியாக இருக்கிறார். 

தகடூர் மன்னன் அதியமானும், ஒளவையும் கொண்டிருந்த அன்பும், நட்பும் ஒளவையின் அறிவுக்குக் கிடைத்தப் பரிசு.  மூவேந்தர்களும், ஒளவையிடம் கொண்டிருந்த மரியாதை அவருடைய செல்வாக்கைப் பறைசாற்றுகிறது.  

அதியமானுக்காக,  தொண்டைமானிடம் தூது சென்ற ஒளவை, “அதியமானின் போர்க் கருவிகள் முனைமழுங்கி கரைபடிந்து பட்டறையில் இருக்கின்றன. ஆனால், உன் கருவிகள் பளபளவென புதிதாக இருக்கின்றன”,  என்று மன்னனிடம் வஞ்சப்புகழ்ச்சியாகப் பேசும் அளவுக்கு (வியப்பூட்டும்) தைரியம் உள்ளவராக இருந்துள்ளார்.  மேலும், நடக்கவிருந்த பெரிய போரை, தன் வாக்கு வன்மையால் நிறுத்தும் அளவுக்கு வல்லமை மிகுந்தவராகவும் வாழ்ந்துள்ளார்.

கல்வியினால் புலமைப் பெற்றதோடு மட்டும்  இருந்திருந்தால், ஒளவை ஒரு பெண்பாற்புலவராக மட்டுமே இருந்திருப்பார்.  ஆனால், தான் கற்ற கல்வியினால், சிறந்த செல்வாக்கும் பெற்று, எங்கும் எதற்கும் அஞ்சாதவராக வாழ்ந்ததால், இவர், மூன்று துறைகளிலும் ஆளுமை செலுத்தியவர் என்பது உறுதியாகத் தெரிகிறதல்லவா?

டாக்டர். முத்துலட்சுமி:

இன்றைய பெண்கள் படிப்பதற்கு மிகவும் விரும்பும் மருத்துவத்துறையில், ஒருகாலத்தில் ஒரு பெண்கூட இல்லாதது அன்றையச் சமூகத்தில் பெண்களின் நிலையை எடுத்துக் காட்டுகிறது.  அப்படிப்பட்ட காலத்தில் ஒரு பெண் அவ்வாறு படிக்க விரும்பினால், அவளது எண்ணம் ஈடேற எத்தனை போராட்டத்தைச் சந்தித்திருக்க வேண்டும்!  

அப்படி, பெண்கள் படிப்பதற்குச் சூழலே இல்லாத நிலையில்,  பல சங்கடங்களைத் தாங்கிக்கொண்டு மனவுறுதியோடு சிறப்பாகப் படித்தவர் டாக்டர். முத்துலட்சுமி அம்மையார் .  

நிறைய போராட்டங்களுக்குப் பிறகு ஆண்கள் கல்லூரியில் சேர்ந்து முதல் பெண்ணாகப் படித்து, முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார். அரசு மருத்துவக் கல்லூரியில் முதல் மகப்பேறு மற்றும் கண் மருத்துவமனையில், முதல் ஹவுஸ் சர்ஜனாக இருந்துள்ளார்.  இவையனைத்தும் அவருடைய கல்வியின் வாயிலாக அவருக்குக் கிடைத்த உயர்வுகள்.   

இதையடுத்து, ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இந்தியாவின் முதல் சட்டமன்ற உறுப்பினராகவும், மாநில சமூகத்தின் ஆலோசனை குழுவின் முதல் தலைவராகவும் இருந்துள்ளார்.  

மேலும், அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி, சட்டமன்றத்தின் முதல் பெண் துணைத் தலைவர், என்று எல்லாவற்றிலும் முதல் பெண்மணியாகத் தொடங்கிய அவருடைய சாதனைகளும், பதவிகளும் அவருடைய செல்வாக்கைக் கூறுகின்றன.  

பல எதிர்ப்புகளுக்கு இடையில் மனதில் உறுதியோடு நின்று, கொடுமையான வழக்கமாக இருந்த தேவதாசி முறையை ஒழித்தார்.   பெண்களின் குறைந்தபட்சத் திருமண வயதை உயர்த்தியதில் சிறப்பான தன் பங்களிப்பை அளித்தார்.  பெண்களுக்கான கழிப்பறைகள் அமைப்பதில் தீவிரமாகப் பாடுபட்டார்.  

மகளிர் இந்தியச் சங்கத்தின் நிறுவனராகவும், தலைவராகவும் பதவிகள் வகித்தார்.  அடையாறில் முதன் முதலில் புற்றுநோய் சிகிச்சை மையம் தொடங்கினார்.  மேலும் அவ்வை இல்லம் என்ற நிறுவனத்தையும் தொடங்கினார்.    

திருமணம் என்பது பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்குப்  பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.  அதைத் தன்  வாழ்க்கையில் நடத்தியும் காட்டினார்.  ஒருவருக்கொருவர் துணையாக இருக்க உறுதிசெய்துகொண்ட பின்னர் திரு.சுந்தர ரெட்டியைத் திருமணம் செய்துகொண்டார்.  

இவ்வாறு தனக்கு ஏற்பட்ட எதிர்ப்புகளையே ஏணிகளாகப் பயன்படுத்தி, தன் வாழ்நாளில் இவர் செய்த சாதனைகளை நினைத்தால் இன்றும்  வியப்பாகவே உள்ளது.  புரட்சிகரமான இவரது செயல்பாடுகளும்,  கொண்டுவந்த சட்டங்களும்,  இவருடைய வீரத்திற்குச் சான்றாகவே  அமைந்துள்ளன.

இன்றைய பெண்களுக்குக் கல்வியில், சமூகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், இவர்போன்ற பெருமக்களின் போராட்டத்தாலும், அஞ்சா நெஞ்சம்  கொண்ட உழைப்பாலும் விளைந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  

வாழ்நாள் முழுதும் போராடி, தான் கற்ற கல்வியைச் சமுதாயத்தின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்திய இவரை, அனைத்துத் துறைகளிலும் ஆளுமைப் பெற்றவர் என்று உலகம் உள்ளவரைச் சொல்லும் என்பது உண்மைதானே?

சாவித்திரிபாய் புலே:

ஆசிரியர் பணி என்றாலே பெண்கள் அதிகம் படிக்கும் துறை என்பார்கள்.  ஆனால் அந்த ஆசிரியப்பணிக்கு, முதன்முதலில் ஒரு பெண் படிக்கத்  தொடங்குவதற்குப் பட்டபாடு மிகப் பெரியது.  

அவ்வாறு அரும்பாடுபட்டுப் படித்து, பாறையில் நார் உரிப்பது போன்ற தன் கடுமையான முயற்சியால்,  இந்தியாவின் முதல் பெண் ஆசிரியையாக உருவெடுத்தவர் சாவித்திரிபாய் புலே.  

இவருடைய கணவர் மகாத்மா ஜோதிபாய் புலே ஒரு ஆசிரியர்.  திருமணத்திற்கு முன் படித்திராத சாவித்திரி பாய், சமூக அக்கறை உள்ள தன் கணவரது தூண்டுதலால் படித்து, கல்வியின் பெருமையை உணர்ந்தார்.   

“தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என நினைத்தார்  சாவித்திரிபாய்.  ஆனால் குடும்பத்தின் பெரியவர்களும், ஊர் மக்களும் தீவிரமாக எதிர்த்து,  அவரை அவமானப்படுத்தும் நோக்கில் பெரும் தொந்தரவுகள் செய்தனர்.  

ஆனால் தன் கணவரின் முழுமையான ஒத்துழைப்பாலும், தனது மனவுறுதியாலும்,  விடாமுயற்சியாகப் போராடிய சாவித்திரிபாய் இன்று  இந்தியாவின் முதல் பெண் ஆசிரியையாகத் திகழ்கிறார். 

பல்வேறு இழிவான காரணங்களால் படிக்க இயலாத குழந்தைகளுக்குக் கல்விக்கண் திறக்கத் தினமும் போராட ஆரம்பித்தார்.  ஆசிரியராகப் பணி செய்வதே பெரும் போராட்டமாக இருந்த நிலையிலும், மகிளா சேவா மண்டல் என்ற அமைப்பைத் தொடங்கினார்.  இதன் மூலம் பெண்களிடையே மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.  

அமைதியாக இருப்பதற்கும், அடிமையாக இருப்பதற்கும் உள்ள வேறுபாட்டை விளக்கி, பெண்களுக்கான விழிப்புணர்வுக்குப் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.  

சமுதாயத்தில் மிகவும் கடைநிலையில் இருந்த மக்களை அணுகி அவர்களுக்கான உரிமைகளை விளக்கி விழிப்புணர்வு பெறச்செய்தார்.  அவர்களும் இந்தச் சமுதாயத்தின் சம உரிமையுள்ள அங்கத்தினர்தான் என்று வலியுறுத்திய சாவித்திரிபாய் வீரம் மிகுந்த முதல் பெண்ணியவாதி என்பது நீங்களும் அறிந்ததுதானே?

இராஜபாட்டை:

இத்தகைய சாதனையாளர்களைப் பற்றி தெரிந்துகொள்ளும்போது கல்வி, செல்வம், வீரம் என்பது வெவ்வேறு அல்ல என்பதும், ஒன்றுக்கொன்று துணைநின்று உயர்த்தக்கூடியது என்பதும் தெளிவாகப் புரிகிறதல்லவா?  

கல்வியை வேலைக்கான நுழைவு அட்டை என்று கருதாமல், வாழ்நாள் முழுதும் ஒளி தரும் விளக்காகக் கருத வேண்டும் என்பதை இவர்கள் உணர்த்துகிறார்கள்.  

வாகனத்தின் பதிவு எண்ணைப் (fancy number) பேன்சியாகப் பயன்படுத்துவது போல, பட்டத்தைப் பெயருக்குப் பின்னால் போடுவதால் மட்டும் எந்த உயர்வும் இல்லை.  சிறந்த மனவளமும், மனிதநேயமும், நாகரிகமான செயல்களுமே படித்தவருக்கு அணியாகும்.  இதுவே மேலும் பலரை நன்கு படிக்கத் தூண்டும்.  இதனால் சமுதாயமும் முன்னேறும்.

அனைவருக்கும் கல்வி அவசியம்.  அதிலும் பெண்களின் கல்வி ஒரு குடும்பத்தின் மைல்கல்லாக இருந்து அடுத்துப் படிப்பவர்களுக்கும் வழிகாட்டும்.  மேற்கண்ட பெண் சக்திகளின், கல்விக்கான போராட்டத்தின் விளைவாக இன்று நமக்குக் கிடைத்திருப்பது இராஜபாட்டை என்றே தோன்றுகிறது.  

இன்றும் பெண்கள் படிப்பதற்குப் பலவிதமான தடைகள், எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன.  அவற்றைத் தகர்க்கப் பெண்களுக்குத் தேவையான மனவுறுதிக்கும் முன்மாதிரியாக இந்தச் சாதனைப் பெண்கள் இருக்கிறார்கள். 

எல்லைகள் கடந்து கல்வி கற்று, வேரூன்றி, எல்லாத் துறைகளிலும் கிளைப்பரப்பி செழித்து வளரும் பெண்களுக்குப் பேருதவியாக இருக்கும் ஆண்களின்  நட்பும், நாகரிகமும் இன்றைய உலகின் அற்புதமான வளர்ச்சி.  

கல்வியினால் ஏற்படும் உயர்வை, அனைவருக்கும் பயனுள்ள வகையில் பயன்படுத்தி, செல்வாக்கு மிகுந்த பெண்களாக வாழ்ந்து, வருங்காலச் சந்ததிகளுக்குச் சிறப்பாக வழிகாட்டும் அனைவருமே ஆக்க சக்தியின் வடிவங்களே.

#  நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *