மாதமும் மாரிப் பொழிகிறதா? Maathamum Maari Pozhikirathaa? Is It Raining Properly?

மழைஉதிர்காலம்:

இப்போது மழைக்காலம் என்பதால் மழையோடு தொடர்புடையச்  செய்திகளை, நம் சிந்தனைகளாகப் பார்க்கலாம்.  அரசர் என்றால் “மாதமும் மாரிப் பொழிகிறதா?” என அமைச்சரைக் கேட்டுத் தெரிந்து கொள்வார், என்று  நகைச்சுவையாகக் கூறுவது உண்டு.  

உண்மையில், மழைப் பொழிவது அரசருக்கும் தெரியும் என்றாலும், மழையின்  சரியான அளவை அந்தத் துறைக்கான அமைச்சரே அதிகாரப் பூர்வமான தகவலாக அரசருக்குத் தெரிவிப்பார். 

நீர்மேலாண்மை: 

சிறந்த அரசரின் நிர்வாகத் திறனைக் குறிப்பிடுவதற்கு, அவர் மரங்கள் நட்டார், குளங்கள் வெட்டினார் என்று கூறுவதைப் பள்ளிபருவத்திலேயே  அறிந்திருப்போம்.  அக்காலத்தில் ஒரு நாட்டின் நீர் நிலைகளைக் காப்பது மன்னனின் போர்த்திறமைகளில் ஒன்றாகவே கருதினர்.  

இதனால் நாட்டைக் காக்கும் பொறுப்பில் இருந்த மன்னர்கள் நீர் வளத்தைப்  பெருக்குவதற்கான நிர்வாக முறைகளை நன்கு அறிந்து வைத்திருந்தார்கள். மழை வளத்தை மேம்படுத்தவும், மழைநீரைச் சேமிக்கவும் அதிக அக்கறைச் செலுத்தி, நாட்டிற்குச்  செய்யவேண்டிய கடமைகளில் கவனமாக இருந்தனர்.  

இதனால் ஓடை, ஆறு, கொரம்பு, கால்வாய், ஏரி, கண்மாய், மடை, மதகு,…..முதலிய நாற்பதுக்கும் மேற்பட்ட நீர்நிலைகளை அமைத்து நாட்டை வளப்படுத்தினர். இதை நிர்வகிக்க நீராணிகர்கள், நீர்கட்டியார், கரையார், குளத்துக் காப்பாளர், மடையர், …. போன்ற  நிர்வாகிகள் அடங்கிய நீர் மேலாண்மைக் குழுவினரும் இருந்தனர்.

இவ்வாறு, வல்லமைப் பொருந்திய, அறிவு நிறைந்த அரசர்கள், நாட்டின் நீர் வளம் பெருக்குவதற்காக, தங்கள் நிர்வாகத்தில் மரம் வளர்ப்பதையும், குளம் வெட்டுதலையும் செய்ததைப் போல, இப்போது எளிய மனிதர்களாக வாழும் நிலையில் மரங்கள் நட்டும், குளங்கள் வெட்டியும் சாதனைகள் படைத்த  இன்றைய நாயகர்கள் இருவரைப் பற்றி சிறு அறிமுகம் காண்போம்.

வனமே சுவாசம்:

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு 

எல்லோர்க்கும் பெய்யும் மழை

அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட  உயிரினங்கள், கழிமுகப் பகுதியில் இருந்த உவர் நிலத்தின் வெப்பம் தாங்க முடியாமல் தவித்தன.  

அதைக் கண்ட ஜாதவ் மோலை பாயேங் என்பவர், அந்த இடத்தின் வெப்பத்தைக் குறைக்க வழி தேடினார். அதிகாரிகளால் கைவிடப்பட்ட, மரம் நடும் திட்டத்தை அவரே தனியாகச் செய்ய நினைத்தார். 

அந்த நிலம் மரங்கள் வளர்வதற்கு ஏற்றதாக இல்லாததால், முதலில் மூங்கில் மரங்களை நட்டுவைக்க ஆரம்பித்தார்.  அதன் பின்னர் தேக்கு, சந்தனம் என்று ஒவ்வொரு மரக்கன்றாக நட்டு வைத்து வளர்த்தார்.  

இவ்வாறு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்பு உணர்வோடு,  கடினமாக உழைத்து, சுமார் 1400 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு பெரிய காட்டையே தனிமனிதராக உருவாக்கியுள்ளார்.  

இந்த மோலைக் காட்டில் பல வகையான மரங்களும்,  நூற்றுக்கும் மேற்பட்ட யானைகளும், மான்களும், புலிகளும், ஒற்றைக் கொம்புள்ள  காண்டாமிருகங்களும் இருக்கின்றன. அவைகளோடு, பலவகையான அழகியப் பறவைகளும், பல்வேறுப்பட்ட உயிரினங்களும் குளிர்ச்சியாக வாழ்கின்றன.  

 

மேலும், தூய்மையான காற்றைச் சுவாசிக்கும் இந்தக் கிராம மக்களின் அன்றாடத்  தேவைகளுள்  பெரும்பாலானவை இந்தக் காட்டிலிருந்தே கிடைத்து விடுகின்றன.   இந்தக் காட்டின் அருகிலேயே ஒரு சிறிய வீடு அமைத்து, மனைவி மற்றும் குழந்தைகளோடு மகிழ்ச்சியோடு  வாழும் ஜாதவ்,  தான் வளர்க்கும் கால்நடைகள் மூலம் கிடைக்கும் பாலை, சுற்றியுள்ள கிராமங்களுக்கும் விற்பனை செய்து வருகிறார். 

காடுகளின் அவசியத்தைத் தான் அறிந்து உருவாக்கியதோடு நின்று விடாமல், பல ஊர்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கும்  சென்று, உலகம் வெப்பமாதலைத் தவிர்க்கும் வழிகளை இளைஞர்களுக்கு விளக்கிக்  கூறுகிறார்.  

பசுமையானச்  சுற்றுப்புறத்தைக் காக்கவும்,  உலகம்  வெப்பமாதலை தவிர்க்கவும்,  இவர் வாழ்க்கை முழுவதும் உழைப்பதால் பல்வேறு விருதுகளும், பரிசுகளும் பெற்றுள்ளார்.  இவருடைய இந்தச் செயற்கரியச் செயலைக்  கண்டு வியந்த அரசு பத்மஸ்ரீ  விருது கொடுத்து ஜாதவை கவுரவித்துள்ளது.

இதுபோன்ற காடுகளை இன்னும் பல இடங்களில் உருவாக்க நினைக்கும் இவருடைய சமுதாய அக்கறை நம்மை மேலும் பிரமிக்க வைக்கிறது.  காடுகளின் மனிதர் என்று அழைக்கப்படும் இவர் மகிழ்ச்சியின் மனிதராகவே வாழ்ந்து சமூகத்திற்கு வழிகாட்டியாக இருக்கிறார்.

குளமே வளம்:

சட்டிஸ்கர் மாநிலத்தில், சஜாபகாத் என்ற ஊரில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தினால் அங்குள்ள கால்நடைகளும், விவசாயமும் அழிந்துகொண்டிருந்தன. வாடிய  உயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை உள்ளம் கொண்ட ஷியாம் லால் என்ற மனிதர், அந்த ஊரின் வறட்சியைப் போக்க, குளம் வெட்டினார்.  

நிர்வாகத்திடம் இருந்து எந்த உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக, விடாமுயற்சியாக இந்தப் பணியைத் தொடர்ந்து செய்து வந்தார்.  

இதைக் கண்டும் அந்த ஊர்மக்களுள் ஒருவர் கூட இவருடைய அரிய செயலுக்குத் துணையாக உதவ முன்வரவில்லை.  அதுமட்டும் அல்லாமல், ஷியாம்லாலைப் பார்த்துப் பரிகாசமும் செய்தனர்.  இவ்வாறு உழைப்பது வீண் வேலை என்றும் இதனால் ஒரு பயனும் இல்லை என்றும் கேலியாகப் பேசினார்கள்.  

ஆனால், இந்தப் பேச்சுகள் எதையும் காதில் வாங்காமல் தன் கருமமே கண்ணாகக்  கொண்டு, இருபத்தேழு ஆண்டுகளுக்கும் மேலாக அயராமல் உழைத்துக் குளத்தை விரிவுபடுத்தினார்.  

இதனால் அந்த ஊரில் விவசாயம் செழித்து வளர்ந்தது, கால்நடைகளும் ஆரோக்கியமாக வளர்ந்தன.  மேலும், அந்த ஊர் மக்களின் நீர்த் தேவைகள் அனைத்தையும் இந்தக் குளங்கள் முழுமையாகப்  பூர்த்தி செய்துவிடுகின்றன.  

ஷியாம் லாலின் முயற்சிக்கும், உழைப்புக்கும் நல்ல பலன் கிடைத்துள்ளதை உணர்ந்த மக்கள் இப்போது அவரைப் பாராட்டுகின்றனர்.  பஞ்சத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிய நாயகனாக நன்றியுடன் அவரைக் கொண்டாடுகின்றனர்.

மண் பயனுற வாழ்தல்:

“வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்” என்றும், “மரம் வளர்ப்போம் மழை  பெறுவோம்” எனவும், நாம் காணும் வாசகங்களை வெறும் வார்த்தைகளாகக் மிகச் சாதரணமாகக் கடந்து விடுகிறோம்.  மரம் வளர்க்க முதலில் வீடு வேண்டுமே என்றும் கேட்கிறோம்.  

ஆனால், இவ்வாறு இதை இயல்பாகக் கருதாமல், ஒருசிலர் பள்ளி, கல்லூரி, பூங்கா, போன்ற இடங்களில் அனுமதிப் பெற்று மரக்கன்றுகளை நடுகின்றனர்.  அதற்கும் வாய்ப்பு இல்லாதவர்கள், மரத்தின்  விதைகளை சிறுசிறு மண் உருண்டைகளில் வைத்து நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் உள்ள நிலத்தில் தூவினால் ஒருசில மரங்களாவது வளர்வதற்கு வாய்ப்பாக அமையும் என்றும்  கூறுகிறார்கள். 

இந்தச்  சிந்தனைகளைச் செயல்படுத்த நமக்கு சிறு முயற்சிதான் தேவைப்படுகிறது.  சமுகத்திற்குப் பயனுள்ள வகையில், பொது நலத்தோடு வாழும் ஜாதவ் பாயேங், ஷியாம்லால் போல,  நம்மால் காட்டையும், குளத்தையும் உருவாக்க இயலாவிட்டாலும், இருக்கும் மரங்களையும், நீர் நிலைகளையும் பாதுகாக்கும் வகையில் கவனமாக நடந்துகொள்ளலாம்.  

இவ்வாறு  இயற்கை வளம் காக்கப் பாடுபடும் இவர்கள் இயற்கை அன்னையின் அன்பான காப்பாளர்கள். இத்தகைய மனிதர்கள்தான்,  “பெய்ய வேண்டிய நேரத்தில் சரியாகப் பொழியும் மழையைப்  போல” வாழும் பயனுள்ள மனிதர்கள்.  

   #  நன்றி.                                                                

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *