லாக் டவுன் கலாட்டாக்கள்: கலகலப்பா? Lock Down Galaattaakkal: Kalakalappaa?

முன் அறிவிப்பு:

லாக் டவுனில் சீரியசான விஷயங்கள் பல இருந்தாலும்,  கொஞ்சம் லைட்டர் சைடாக சில செய்திகளை இதில் காணலாம்.  சமீபத்தில், தோழிகள் சிலர் லாக் டவுன் பற்றிய தங்களது சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அவற்றில் சில செய்திகளைத் தேர்ந்தெடுத்து இந்தப் பதிவில் கூறலாம் என்று தோன்றியது.  

ஒர்க் பிரம் ஹோம்:

லாக் டவுன்  என்றதும் உடனே நினைவுக்கு வருவது, ஒர்க் பிரம் ஹோம் எனும் புதியமுறை.  இது எத்தனை நாட்களுக்குத் தொடரும் என்று தெரியாத நிலையில், ஒவ்வொருவரும் ஒரு மனநிலையில் இதை எதிர்கொண்டார்கள்.  

Work from Home என்றதும் சந்தோஷமாக வீட்டிற்குக் கிளம்பியவர்கள், இரட்டை தலைவலியின் கடுப்புடன் இருந்தவர்கள், வீட்டில் உள்ள உறவுகளுடன் அன்பைப் பகிர்ந்துகொள்ள நல்ல சந்தர்ப்பமாக நினைத்தவர்கள், கொரோனாவுக்குத் தெரியாமல் சொந்த ஊருக்குத் தில்லாகக் கிளம்பியும்  பைபாஸில் திரில்லோடு சென்றவர்கள் என லாக்டவுன் நேரத்தில் மக்களின் அனுபவங்கள் பலவிதமாக இருந்தன. 

ஒர்க் பிரம் ஹோம் என்று வீட்டிலிருந்து வேலை பார்த்தவர்களுள் சிலர் கம்ப்யூட்டரோடு ஐக்கியமாகி  விட்டார்கள்.  சிலர் எந்தச் சத்தமும் கேட்காமல் வலைப்போட்டு மூடி வீட்டையே அலுவலகமாய் மாற்றினார்கள்.  சில ஸ்ட்ரிக்ட் ஆபிசர்கள் இருபத்திநாலு மணி நேரத்தில் எது ஓய்வு நேரம் எனத் தெரியாமல் ஒரு மாதத்திலேயே குழம்பிப் போனார்கள்.  

சமையலறை சங்கீதங்கள்: 

காலை டிபன், மதிய லன்ச் என்று பம்பரமாய் சுழன்று டிபன்பாக்ஸ் கட்டவேண்டியதில்லை என்கிற சந்தோஷத்தோடு  சமையலறை நுழைந்த இல்லத்தரசிகள்.  நிதானமாக ரசித்து மூன்று வேளையும் சூடான  சமையல், மாலையில் பலகாரம்,  என்று கிச்சனையே மினி ஹோட்டலாக மாற்றி, நாலாபக்கமும் நளபாகமென சுவையாகக் கழிந்தது ஒருமாதம்.  

உதவிக்கு ஆள் இல்லாமல் தானே பெருக்கித்துடைத்துப் பாத்திரம் கழுவி களைத்துப்போன அன்னபூரணிகள் அவ்வப்போது காளி அவதாரம் எடுத்தனர்.  ஆளுக்கொரு நேரம் எழுந்து தனித்தனியாகச் சாப்பிடவே,  ஓய்வே இல்லாமல் அடுத்த மாதம் ஓடிக்கொண்டிருந்தது. 

வீட்டு வேலைகள் செய்யும் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் மாறியது. வெளியில் ஹோட்டல்கள் இயங்காதக் காரணத்தால் வேறு வழியின்றி  இல்லத்தரசிகளின் இனிய ரசத்துக்கும் சுட்ட அப்பளத்திற்கும்  வீடே காத்துக்கிடந்தது. 

ஆனால் அதுவும் ஒரு மாதம்தான். அதற்குப் பிறகு, சாப்பிடும் அனைவரும் சமையல் குறிப்புச் சொல்ல ஆரம்பித்து விட்டனர். அறுசுவையில் அறுபது வகை “சொன்னார்கள்”.   

யூ டுயூப் உபயத்தால் கம்பெனி சீக்ரெட் தெரிந்து கொண்ட குழந்தைகள்கூட செஃப்பாக மாறிவிட்டார்கள். (யாரும் வெளியே தப்பித்துப் போக முடியாத) இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திய சிலர் தங்களது புதிய கண்டுபிடிப்பைக் கொடுத்துச் சோதித்துப் பார்த்தார்கள். 

பொழுதுபோக்கு:

பழையன கழிதலும், புதியன புகுதலும் காலத்தால் ஏற்படுவதுதான், என்று மெல்ல முனகியபடி பரணில் தூங்கியப் பல்லாங்குழியும், சோழியும் புத்துணர்வு பெற்று கேரம், செஸ் என்ற விளையாட்டுகளுடன் சேர்ந்து கொண்டன.  இந்த நேரத்தில் குழந்தைகளின் மனதில் உண்டான நேர்மறையான எண்ணங்களும், செல்லச் சண்டைகளும், அன்பான சமாதானங்களும் குழந்தைகளின் மகிழ்ச்சியைக் கூடுதலாக்கின. 

தேர்வுகள், தேர்வுமுடிவுகள், மதிப்பெண்கள், ஆன்லைன் வகுப்புகள் என ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு மனநிலையில் இருந்த  பிள்ளைகளை நெறிப் படுத்துவது பெற்றோர்களுக்குப் பெரிய வேலையாக இருந்தது.  

சீரியல் சொந்தங்கள்:

அனைவரும் பதட்டமாகச் செய்திகளைப்  பார்த்த நேரத்திலும் தங்கள் சீரியல் சொந்தங்களைக் காணாமல் தவித்தவர்களும் சிலர் உண்டு.  எப்போதும் உணர்ச்சி வசப்பட்டு, மாற்றிமாற்றி சத்தமாகப் பேசிக்கொண்டிருக்கும் சின்னத்திரை நண்பர்களைக் காணாத சோகத்தில் சிலர் மவுனமாக நாட்களைக்  கடத்தினார்கள்.  ஆனால் அவர்களுடைய உண்மையான அன்பை எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது என்பதால் விரைவிலேயே சீரியல்கள் ஒளிபரப்பப் பட்டன.  இதனால் மீண்டும் அவர்களின் ஆழமான நட்பு தொடரப் பட்டது.

விளையாட்டுக்கு வீரர்கள்:

கண்ணுக்கே தெரியாதக் கிருமிக்கு ஏன் அஞ்ச வேண்டும் என்று துணிச்சலாக வெளியே சென்று போக்குவரத்து நண்பர்கள் சொன்ன உடற்பயிற்சியைச்  செய்துவிட்டு வீடு திரும்பிய வீரர்கள்.  

ஊருக்கு வெளியே உள்ள மைதானத்தில் கூட்டமாக விளையாடி ட்ரோனைப் பார்த்ததும், கேரம் போர்டையே  கேடையமாக்கி பல கிலோ மீட்டர்கள்  தப்பி  ஓடிய விளையாட்டு வீரர்கள். மேலும், இதை ஒளிபரப்பிய தொலைக்காட்சி  வீடியோக்களின் பின்னணி வசனங்களும், பாடல்களும் தனி காமெடி.

புதுமை:

கல்யாணம் என்றாலே ஆடம்பரம் என்ற நிலையை மாற்றி, மிகவும் புதுமையாக நடந்த திருமணங்கள் நம்மை சிறிது சிந்திக்க வைத்துள்ளன.  அவை ஊரடங்கு கால கல்யாணங்கள் என்றாலே நினைவுக்கு வரும் அளவுக்குத் தனித்துவமாய் இருந்தன.  திருமணங்கள் என்பது மலைத்துப் போவதற்காக அல்ல மகிழ்ச்சியாக வாழ்வதற்கு, என்று உண்மையில் நடத்திக் காட்டினார்கள்.

புதிய வளர்ச்சி:

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கிலை ஒத்துக்கொள்; என்பதை நிரூபித்துக் காட்டிய நம் நண்பர்கள்.  தங்களுக்குத் தெரிந்த தையல் தொழிலைப் பயன்படுத்தி பலவகையான முகக் கவசங்களைத் தைத்து, விற்பனை செய்தனர்.  மேலும் பலர் கைகழுவும் திரவங்களைத் தயாரித்து முறையான வருமானத்திற்குப் புது வழியைக் கண்டுபிடித்தார்கள்.
களப்பணியாளர்கள்:
இந்த ஊரடங்கு நேரத்தில் களப்பணி ஆற்றிய வீரர்கள் எல்லையில் இருக்கும் போர் வீரர்களுக்கு இணையாக மதிக்கத் தக்கவர்கள். இவர்கள் மக்கள் சேவையில் கால நேரமின்றி உழைப்பதில் மட்டுமல்ல, தங்களைத் தாங்களே சார்ஜ் செய்துகொள்ளும் திறமையும் உள்ளவர்கள் என்று நிருப்பித்து காட்டினார்கள்.  
தங்களுடைய பாதுகாப்பு உடையின் சங்கடங்களையும் பொறுத்துக்கொண்டு அவர்களுள் சிலர் அவ்வப்போது நடனங்கள் ஆடி உற்சாகத்தைப் பரிமாறியது அவர்களின் நேர்மறையான மனநிலையைக் காட்டியது . 
வெற்றியை  நோக்கி:
 
கொரோனவை விட கொடுமையான பொருளாதாரச் சிக்கலில் உலகம் சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாகக் கொண்டுவருகிறார்கள்.  
இதைப் புரிந்துகொண்டு முன்பைவிட அதிக கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.  ஆனால் மக்கள் மடை திறந்த வெள்ளம் போல கடை வீதிகளில் (சுற்றமும் நட்பும் புடைசூழ) படையெடுப்பதைப் பார்த்தால் மக்கள் கொரோனவுடன் வாழ பழகிவிட்டார்கள் என்றே தெரிகிறது.  ஆனால் இந்தச் சமாதான உடன்படிக்கைக் கொரோனாவுக்குத் தெரியுமா  என்றுதான் தெரியவில்லை. 
பட்டாசு புகையில் திணறும் கொரோனாவை ஊதி தள்ளிவிடலாம் என்று நாம் நம்பி ஊரெல்லாம் புகை மண்டலமாய் ஆக்கினாலும்,  கொரானா, பட்டாசு மாத்திரையில் வெளிவந்த பாம்பு அல்ல.  சந்திரமுகி படத்தின் பாம்பு போல, அது முழுவதும் போகும்வரை சற்று எச்சரிக்கையாய் இருப்பதுதான் நமக்கு நல்லது.  முழு கிணறும் தாண்டும் வரை பொறுமையைக் கடைபிடித்துப் பாதுகாப்பாய் இருப்பதுதான் முழுமையான வெற்றியைத் தரும். 
 
நன்றிகள்: 
கொரனா எனும் அசுரனை முழுமையாக  ஒழிக்கப் பாடுபடும் இந்த நேரத்தில்,
வெயிலோ, மழையோ தங்கள் கடமையைத் தவறாது செய்யும், மக்கள் நலன் காக்கும் காவல் பணியில் உள்ளவர்கள், உயிர் காக்கும் மருத்துவர்கள், சேவையில் சிறந்தச் செவிலியர்கள், துறை சார்ந்த உதவிக்கரங்கள், தூய்மைப் பணியாளர்கள் இன்னும் எத்தனையோ நல்ல உள்ளம் படைத்தத் தேவ தூதர்கள் போன்றவர்கள்.  இவர்கள் அனைவரும் மனிதர்கள் என்ற நிலையில் இருந்து மாமனிதர்களாக, உத்தமர்களாக உயர்ந்த நேரமிது.
நாம் அனைவரும் வீட்டுக்குள் பாதுகாப்பாய் இருக்க, நமக்காகக் காலையில் பால்பாக்கெட் போடுபவர் முதல், செய்தித்தாள், காய்கறி, மளிகை, மருந்துக் கடைகாரர், தண்ணீர் கேன் போடுபவர் வரை அனைவரும் வெளியே சென்று, நமக்கான பொருட்களை வாங்கி வந்து குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாட்டிற்குள்  விநியோகம் செய்தனர். இவர்கள் அத்தனை பேருக்கும் மனதார நமது நன்றியை வெளிப்படுத்துவோம்.  பாதுகாப்பாய் இருந்து பாதுகாப்பை அளிப்போம்.  
#  நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *