நல்லோர் வார்த்தை நல்வழி காட்டும். Nallor Vaarththai Nalvazhi Kaattum. Time is Precious Gift.

மூத்தோர் சொல் முது நெல்லிக்கனி:

அனுபவம் வாய்ந்த ஒரு நல்ல குருவிடம் நான்கு சீடர்கள் கல்விக் கற்று வந்தார்கள்.  அவர்களுக்குள் எந்தப் பாகுபாடுமின்றி குரு நேர்மையான முறையில் கல்வி கற்றுக்கொடுத்து வந்தார்.  மேலும், பாடங்களைக் கற்றுக் கொடுக்கும்போதே,  வாழ்க்கைக்குத் தேவையான நல்ல சிந்தனைகளையும் சொல்லிக் கொடுத்து, அவர்களை நல்வழிப்படுத்தும் பயிற்சிகளையும் தந்தார்.

தன்னுடைய சீடர்களிடம், அவர்கள் அறிவுடையவர்களாக இருந்தால் மட்டும் போதாது, ஒழுக்கமாகவும், பெரியவர்களின் வார்த்தைகளை மதித்து, அவற்றை கவனமாகப் பின்பற்றவும் வேண்டும் என்று  உபதேசித்தார். மேலும் எப்போதும் நுண்ணறிவோடு, கடினமான உழைப்புக்கும்  தயாராக  இருப்பதுதான் வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தரும் என்று கூறினார்.

இதை நான்கு மாணவர்களுக்கும் செய்முறை பயிற்சியாக அளிப்பதுதான் முழுமையான பலனளிக்கும் என்று குரு நினைத்தார்.  எனவே அவர்களை வீட்டுக்குச் சென்று இரண்டு நாள் இருந்துவிட்டுப் பிறகு குருகுலம் வருமாறு சொன்னார்.

மறுநாள் காலையில் நால்வரும் வீட்டிற்குச் செல்வதற்குத் தயாராகி குருவிடம் ஆசிபெற வந்தனர்.  குரு அவர்களை ஆசீர்வாதம் செய்துவிட்டு, இரு கைகள்  நிறைய மணலை அள்ளி எடுத்து ஒவ்வொரு மாணவனுக்கும் இரு கைகள் நிறைய மணல் கொடுத்தார்.  இதை அப்படியே இருகைகளினாலே எடுத்துக்கொண்டு போய் பெற்றோரிடம் கொடுத்து, ஒரு துணியில் போட்டு வைக்க சொல்லுங்கள், பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

ஒரே ஊரை சேர்ந்த நான்கு மாணவர்களும் தங்கள் வீடுகளை நோக்கி நடந்தனர்.  கைகளில் மணலை ஏந்தியபடி நடந்ததால், சிறிது தூரம் சென்றதும் அனைவருக்கும் கைவலித்தது.  

இப்போது முதல் மாணவன் பொறுமை இழந்தான்.  ஒன்றுக்கும் உதவாத இந்த மணலை எடுத்துக்கொண்டு போய் என்ன செய்ய போகிறோம் என்று நினைத்தான்.  இதைச் செய்வதால் கை வலி ஏற்படுவதோடு, மெதுவாக நடப்பதால் இரண்டு நாள் விடுமுறையும் வீணாகிவிடும் என்று நினைத்தான்.  இது தேவையற்ற வேலை என்று கூறிக்கொண்டே இரு கைகளில் இருந்த மணலையும் கீழே போட்டுவிட்டுக் கையைத் தட்டிவிட்டு நடந்தான்.  மாற்றவர்களையும் அவ்வாறே செய்யச்சொன்னான்.  அவர்கள் தயங்கவே தான் மட்டும் கையை வீசியபடி ஆனந்தமாக வீடு நோக்கி நடந்தான்.

இதைப் பார்த்த இரண்டாவது மாணவனும் தானும் வேகமாக நடந்து வீட்டுக்குப் போக வேண்டுமே என்று ஆசைப்பட்டான்.  ஆனால் குருவின் வார்த்தையை மீறுவதற்கும் பயமாக இருந்தது.  எனவே ஒருகை மணலை மட்டும் கீழே போட்டுவிட்டு, ஒருகையில் இருந்த மணலை மட்டும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு அவனும் முதலாமவனை பின்பற்றி நடந்தான்.

மூன்றாவது மாணவன் குருவின் வார்த்தையில் நம்பிக்கைக் கொண்டவன். எனவே அதை மீறுவதற்கு நினைக்கவேயில்லை.  ஆனால், பசியும், தாகமும், நீண்ட தூரம் நடந்த களைப்பும் அவனது செயலில் தாக்கத்தை ஏற்படுத்தின.  இதனால் இரண்டு கைகளிலும் இறுக்கம் தளர்ந்து, விரல் இடுக்கில் உள்ள சிறு இடைவெளிகளில் மணல் லேசாக சிந்தியது.  ஆனாலும் ஓரளவு முயற்சியோடு விடாமல் நடந்தான்.

கடைசியாக வந்து கொண்டிருந்த நான்காவது மாணவன் தன் கைகளில் சற்றும் இறுக்கம் குறையாமல் நடந்து கொண்டிருந்தான்.  பசி, தாகம், உடல்வலி, தனித்துக் கடைசியாகச் செல்வது என்ற எந்த சுயபச்சாதாபமும் கொள்ளாமல், மனதை ஒருநிலைபடுத்தி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தான்.  குரு சொன்னதுபோல இதில் ஒரு மணல் கூட கீழே விழாமல் கொண்டுபோய் வீட்டில் சேர்க்க வேண்டும் என்ற உறுதியான ஒரே இலக்குடன் மிகமிகக் கவனமாக நடந்து கொண்டிருந்தான்.

இதனால் இவன் வீடு வந்து சேர்வதற்கு நள்ளிரவு ஆகி விட்டது.  தனக்காகக் காத்திருந்த பெற்றோரிடம் குருவின் கட்டளையைக் கூறினான்.  அவர் கூறியது போலவே கைகளில் இருந்த மணலை ஒரு துணியை விரித்து அதில் கொட்டினான்.  அப்போது அந்த மணல் தங்கமாக மாறி விளக்கொளியில்  தகதகவென மின்னியத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தான்.  

தன்னுடன் வந்த நண்பர்கள் மூவரையும் சந்தித்து நடந்ததைக் கூறினான்.  முக்கால்வாசி மணலை கொண்டு வந்த மூன்றாவது மாணவனும், ஒருகை அளவு மணல் கொண்டு வந்த இரண்டாவது மாணவனும் ஓடிச்சென்று துணியில் கட்டிவைக்கப்பட்ட தங்களுடைய மணலைப் பார்த்தார்கள்.  அவர்கள் எந்த அளவு அந்தத் துணியில் வைத்தார்களோ அதே அளவு தங்கமாக மாறியிருந்ததைப் பார்த்து வியந்து மகிழ்ந்தார்கள்.  இதைக் கண்ட முதல் மாணவனுக்கு ஆச்சரியமாகவும், ஏமாற்றமாகவும் இருந்தது.  குருவின் வார்த்தையை மதிக்காமல், தான் அலட்சியமாக நடந்துகொண்டதால் நண்பர்களின் மகிழ்ச்சியை முழுமையாகப் பகிர்ந்து கொள்ள முடியாமல் தவித்தான்.  

குரு அனைவருக்கும் சமமாக ஒரு சவாலைச் செய்ய சொல்லியிருந்தாலும், அதை நிறைவேற்றுவதில் இருந்த மனஉறுதியின் வேறுபாடே  அவர்களது  செயல் தன்மையாக வெளிப்பட்டது.  அவர்களின் தன்மைக்கு  ஏற்றார் போலவே பலனையும் பெற்றார்கள்.  

நம்முடைய நலனுக்கு நல்வழி காட்டும் குருவின் வார்த்தையைச் சிந்தித்து, நம்பிக்கையோடு உழைத்தால், அந்த வார்த்தையே நமக்கு ஆசீர்வாதமாகும்  என்று அந்த மாணவர்கள் உணர்ந்தார்கள்.

“காலம் என்னும் குரு, உலக மக்கள் அனைவருக்கும் சமமாக, நாளொன்றுக்கு இருபத்திநான்கு மணிநேரம் கொடுத்துள்ளார்.  அந்த நேரத்தைப் பொறுப்புணர்வோடு, நாம் எப்படிக் கவனமாகக் கையாள்கிறோமோ அதற்கேற்ற பலனையே பெறுகிறோம்”.  

உண்மையான அன்பும், அக்கறையும் உள்ளவர்கள் கூறும் அனுபவம் நிறைந்த வார்த்தைகளும், வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சூழ்நிலைகளும், சான்றோர்களின் நல்ல நூல்களும் நமக்கு வழிகாட்டும் நல்ல குருவின் வார்த்தைகளாக விளங்குகின்றன.

#  நன்றி.

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *