குகையிலிருந்து ஒரு பயணம். Gugaiyilirunthu Oru Payanam. Travel of Thoughts and Technology.

நிமிர்ந்த மனிதன்:

இயற்கையான வளங்களும் எண்ணற்ற உயிர்களும் நிறைந்திருக்கும் இவ்வுலகில், மனிதனின் அறிவு வளர்ச்சிக்குச் சாட்சியாகவும் பல்வேறு பொருட்கள் பெருமளவு ஆக்ரமித்து இருக்கின்றன.

கண்டுபிடிப்புகள் என்பவை நெருப்பு, உடை, சக்கரம் போன்ற அடிப்படை தேவைகளைக் கடந்து, மனித அறிவின் ஆற்றலை அறிவிக்கும் வகையில், அபாரமான வளர்ச்சி அடைந்துள்ளன.  மனிதனின் அறிவுக்குத்  துணையாகவும், இணையாகவும் இருக்கும் இன்றைய கண்டுபிடிப்புகள், மனிதனே வியக்கும் அளவுக்கு Artificial Intelligence ஆக வளர்ந்துள்ளன.

இத்தகைய கண்டுபிடிப்புகளும், தகவல்களும் அவை உருவான நாளிலிருந்து பலநூறு ஆண்டுகளாகப் பயணம் செய்து, பலரால் பாதுகாக்கப்பட்டு, பழைமை மாறாமல், அறிவு வளர்ச்சியின் ஆவணங்களாக, நம்பகத் தன்மையோடு பதிவாகியிருக்கின்றன. 

கணக்கில் அடங்காத இத்தகைய தகவல்களும், சங்க காலத்துச் சங்கதிகளும், மன்னர் காலத்துத் தரவுகளும் பல ஆண்டுகள் பயணப்பட்டு, இன்று வெவ்வேறு வடிவங்களில் நம் கையில் வந்து சேர்ந்திருக்கின்றன.  

இத்தனை காலங்கள் கடந்து வந்தும் கம்பீரமாக நிற்கும் இத்தகைய கருத்துப் பரிமாற்றங்களுக்கு அவற்றைத் தாங்கிவந்த ஊடகங்கள்தான் சாட்சிகளாக இருந்துள்ளன.  அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்றாற்போல ஊடகங்களும் படிப்படியாக நவீனமடைந்து, இன்று நாம் எளிதாக தெரிந்துகொள்ளும் வகையில், மிக நேர்த்தியான முறையில் வலைதளத்திலும் வகைப்படுத்தப் பட்டுள்ளன.  

ஆவணங்களும், ஊடகங்களும்:

குகையில் வாழ்ந்த மனிதன் தான் அறிந்த சங்கதிகளைத் தன் கூட்டத்தினருடன் பகிர்ந்து கொள்ள முதலில், ஒலிகளையும், வரிவடிவங்களையும் கண்டுபிடித்தான்.  பின்னர், அறிவுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் எழுத்துகளையும், வார்த்தைகளையும் உருவாக்கி, மனிதசமுதாயத்தை நாகரிகமான சமுதாயமாகத்  தலைநிமிரச் செய்தான்.

மனிதனின் சிந்தனைகளை, அறிவை அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்குத் தெரிவிக்க, ஆவணப்படுத்துதல் என்ற தொழில்நுட்பமே ஆதிகாலம் முதல் சிறப்பாகச் செயல்பட்டு வந்திருக்கிறது.  எந்த மாற்றமாக இருந்தாலும், எந்த நிகழ்வாக இருந்தாலும், அதை ஆவணப்படுத்துதலின் மூலமே உலகம் முழுதும் அரியச்செய்ய முடியும்.  எனவே, மனித இனம் கடந்து வந்த கடுமையானப் பாதைகளையும், அதில் கண்ட வெற்றிகளையும் உலகம் முழுதும் பகிர்ந்துகொள்ள ஆவணங்களே ஆதாரமாக விளங்குகின்றன.  

எனவே, மனிதன் தன் எண்ணங்களை வண்ணங்களில் தோய்த்துச் செய்திகள், பாடல்கள், கதைகள், காப்பியங்கள், காவியங்கள் என வாழ்வியலை விளக்கும் இலக்கிய சித்திரங்கள் தீட்டினான். இவ்வாறு பிரவாகமாகப் பெருக்கெடுத்து ஓடிய சிந்தனைகளை ஆவணங்களாகப் பதிவதற்கு ஊடகங்கள் பதிவேடுகளாக அமைந்தன.  

சுடுமண் ஓடுகள், கல்வெட்டுகள்,  பனைஓலை நறுக்குகள், ஓலைச்சுவடிகள், பட்டுத்துணி ஓலைகள், செப்பேடுகள், பொன்னேடுகள், காகிதங்கள், புத்தகங்கள் என்று வளர்ந்த பதிவேடுகள், இன்று விரல்நுனியில் சிரிக்கும்  E book ஆகவும் வலம்வந்து நம்மை வியக்க வைக்கின்றன.  

பல நூலகங்களைத் தேடிச் சென்று புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது மனதிற்கு நிறைவை தரும்.  என்றாலும், கணக்கிலடங்காத நூலகங்களை ஒரு கையடக்கக் கருவிக்குள் அடக்கி, நம் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், எளிமையாக, கண்ணிமைக்கும் நேரத்தில் கருத்துக்களை அள்ளி தரும் தொழில் நுட்பம், இன்றைய தலைமுறைக்குச் சிறந்த வாய்ப்பாகக் இருக்கிறது.  

மனிதனின் கண்டுபிடிப்புகள் ஒன்றை ஒன்று மிஞ்சி நின்று, தகவல் அறியும் வேகத்தை அதிகரித்து மக்கள் மேலும் செறிவு உள்ளவர்களாக உயர்வதற்கு நல்ல வாய்ப்பைத் தருகின்றன.  

உயர்ந்த நிலை: 

இன்றைய கண்டுபிடிப்புகள், இராக்கெட் வேகத்தில் மனிதனைக் கடந்து கொண்டிருக்கின்றன.  இத்தகைய அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்றபடி அதை முறையாகப் பயன்படுத்தும் பக்குவமும், நுட்பமும் தெளிவாகத் தெரிந்தால்தான் காலத்தோடு ஒன்றி பாதுகாப்பாக வாழ முடியும். 

உலகெங்கும் உள்ள தகவல்களை ஓரிடத்தில் காட்டும் ஊடகங்கள் இன்று நம் கைகளில் உள்ளது.  இதை, காலம் நமக்குக் கொடுத்த நல்ல வாய்ப்பாக உணர்ந்து, முறையாகப் பயன்படுத்தும்போது,  இதுவே நமக்கு நல்ல வரமாக அமையும்.

#   நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *