அடையாளம்:
வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து ஒருவரை எடை போடக்கூடாது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனாலும் நாம் அத்தகைய ஒரு சிந்தனைக்குப் பழக்கப்பட்டிருக்கிறோம் என்பதும் உண்மைதானே?
அதன் அடிப்படையில்தான் நாமும் நம்முடைய தோற்றத்திற்கு முக்கியத்துவம் தருகிறோம். இதைப்போலவே மற்றவர்களின் வெளிப்பாடுகளும் ஒரு அடிப்படையான பார்வையை நம்மிடையே ஏற்படுத்துகின்றன. எனவே, ஒரு நிறுவனத்தின் அடையாள அட்டையைப்போல வெளித்தோற்றம் என்பதும் ஒரு அடையாளமாக இருப்பதாகத் தோன்றுகிறது.
ஆள்பாதி ஆடைபாதி:
சீருடை என்பது முதல் அடையாளமாகவே செயல்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் ஒரு குழுவாக இணைந்து இருப்பதை இது வெளிப்படுத்துகிறது. சில இடங்களில் மற்றவரிலிருந்து வேறுபட்டுத் தனித்துவமாகத் தெரிவதற்கும் கூட பயன்படுகிறது.
சில இடங்களில் எளிதில் அணுகுவதற்கான முக்கிய குறியீடாகவும் சீருடை பயன்படுகிறது. வேறுசில இடங்களில் அணுகாதிருக்கவும் எச்சரிக்கின்றது.
ஒரு வியப்பு என்னவென்றால், முற்றும் துறந்த முனிவர் என்றாலும் அவர், தான் உலகவாழ்க்கையைத் துறந்து வாழ்வதை அறிவிக்கும் விதமான அடையாளங்களை அணிய வேண்டியிருந்தது.
மழித்தலும், நீட்டலும் வேண்டாதவனை அடைவதற்கு இத்தகைய வெளித்தோற்றங்கள் அவசியம் இல்லை. என்றாலும், நடைமுறையில் சில சங்கடங்களைத் தவிர்க்கும் எளிய வழியாக இந்த அடையாளங்கள் தேவைப்பட்டிருக்கலாம்.
இவ்வாறே, வேந்தன் என்றாலும் ஒருவித வெளித்தோற்றமே அடையாளம் காட்டுகிறது. அவ்வாறு இல்லையெனில் அது மாறுவேடமாகிறது.
மேலும், எங்கும், எதிலும் நிறைந்த இறைவனையே குறிப்பிட்ட சில அடையாளங்களோடு மட்டும் பொருத்திப் பார்த்துப் பழகியிருக்கிறோம்.
ஆகவே, குறிப்பிட்ட வெளித்தோற்றத்தைக் கண்டதும் அதன் பின்புலம் மற்றும் அது எதற்கான அடையாளம் என்ற ஒரு என்ன ஓட்டம் நம்மிடையே ஏற்படுவது இயல்புதான். ஆனால் அதுவே முழுமையும் அல்ல என்பதால்தான் Don’t judge a book by its cover என்று கூறினார்கள்.
ஏனென்றால் இத்தகைய உடையில் இருப்பவர், இப்படிபட்டவராகத்தான் இருப்பார் என்ற யூகத்தைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்ளும் வேடதாரிகளும் இருப்பார்கள் என்பதால்தான் எவரையும் தோற்றத்தை வைத்து மதிப்பீடு செய்வது சரியல்ல என்று கூறுகிறார்கள்.
இதுபோலவே, சிப்பிக்குள் முத்தாக, மிக எளிமையான தோற்றத்தில் உத்தமரும் உள்ளிருக்கலாம். அதனால்தான் எப்போதும் உருவுகண்டு எள்ளாமை வேண்டும் என்றார்கள்.
கவரும் தோற்றத்தைக் கொண்டவர் உயர்ந்தவர் என்றோ, ஒரு குறிப்பிட்ட உடையில் இருப்பவர் முழுவதும் அதற்கு நேர்மையாக இருப்பவர் என்றோ தோற்றத்தை வைத்து உறுதியாகக் கூறவும் முடியாது. ஆனால் அதற்கு வாய்ப்பிருக்கிறது என்று மட்டுமே நினைக்க முடியும்.
தரச்சான்று:
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். இன்றைய நவீன உலகில் முகமே தெரியாத, வெளித்தோற்றமே கண்ணுக்குப் புலப்படாத (Invisible) மனிதர்களால், தொழில்நுட்பங்களின் மூலம் உருவாக்கப்படும் தொடர்புகள் நம்மிடையே பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
இன்றைய சூழலில் இத்தகைய நிலையில் இருப்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்ற எண்ணமே பழைமையாகிவிட்டது. எனவே, வெளித்தோற்றம் என்பது பார்வைக்குத் தெரியும் அடையாளமாகக் கொண்டாலும், செயல்கள் மூலமாக எத்தகைய அடையாளம் உருவாகிறது என்பதுதான் உண்மையானதாக இருக்கும்.
Steve Jobs, Mark Zuckerberg போன்றவர்கள் தங்களது உடைகளினால் பெரும்பாலும் சாதாரணமான தோற்றத்தையே வெளிப்படுத்தினாலும், அவர்களுடைய செயல்கள் தர அடையாளமாக (Brand) வெளிப்பட்டன.
இயல்பான, அவரவருக்கு ஏற்ற மனநிறைவான வெளித்தோற்றமும், தன்னம்பிக்கை நிறைந்த செயல்களுமே உயர்ந்த, தரமான மதிப்பை ஏற்படுத்தும்.
இந்த மதிப்புப் பொருட்களைச் சார்ந்து இல்லாமல், கண்ணும் கருத்தும் ஒன்றிணைந்த செயல்கள் மூலம் உள்ளுணர்வோடு இருக்கும்.
தெளிவு:
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.
யாரையும் ஆராய்ந்து தெளிந்த பிறகே ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். அவ்வாறு நம்பிக்கை வைத்து தேர்ந்தேடுத்தபின் அவருடையச் செயல்களில் உள்ள நன்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்று உலகப் பொதுமறை கூறுகிறது.
மனிதர்களின் வெளிதோற்றத்தை மட்டும் கண்டு விலகவோ, அணுகவோ நினைக்காமல், உள்ளபடியே அவர் எத்தகையவர் என்ற நுண்ணறிவோடு ஆராய்ந்து, தக்கவர் யார், தகாதவர் யார் என அறிந்து பழக வேண்டும் என்கிறார்கள்.
மயில் என்றதும் அது தன் நீண்ட தோகையை விரித்தாடும் அழகைக் காட்சியாக நினைக்கும் நாம், பெண்மயிலின் அழகைக் கருத்தில் கொள்வதில்லை.
இவர்கள் இப்படித்தான் என முன்கூட்டியே உறுதியாக நினைத்துச் சிந்தனைகளுக்குப் பகுதியாகத் திரையிட்டுக் கொள்ளாமல், முழுமையான விளக்கங்களைத் தடையின்றி தெளிவாகப் பெறுவதுதான் ஓரளவு பொருத்தமான மதிப்பீடாக இருக்கும்.
# நன்றி.