ஒளவையார்:
ஒருநாள் உண்ணாமல் இரு என்றாலும் கேட்க மாட்டேன் என்கிறாய், இரண்டு நாட்களுக்குத் தேவையானதை இப்போதே எடுத்துக்கொள் என்றாலும் செய்ய மாட்டேன் என்கிறாய், என்நிலை தெரியாமல் தினமும் பசிக்கின்ற வயிறே உன்னோடு வாழ்வது மிகக் கடினமாக இருக்கிறது.
ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் – ஒருநாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!
உன்னோடு வாழ்தல் அரிது.
என்ற ஒளவையின் இந்தப் பாடல், பசியை உணர்ந்தவர்களின் நடைமுறை அனுபவமாக இருக்கிறது.
முதன்மை:
உணவினால் உருவாக்கப்படும் இந்த உடல்தான் உயிரைத் தாங்குகின்ற கலமாக இருக்கிறது. ஒரு பிடி அன்னம், அன்னையாக உயிர் காத்து இயக்கச் சக்தியாகச் செயல்படுகிறது.
அள்ளஅள்ள குறையாத அட்சயப் பாத்திரத்தில் அன்னமே வளர்ந்து, பசிப்பிணி போக்கும் அமுதசுரபி ஆனது. ஆகவேதான் ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’, என்கிறது மணிமேகலை. ‘அருந்தியது அற்றது போற்றி’ உண்பதற்கு உணவு உயிர்த் தேவையாக இருக்கிறது.
தனிப்பெருங்கருணை:
‘உண்ணீர் உண்ணீர்’ என்று உபசரித்துப் பசித்த வயிற்றுக்குச் சோறிடும் பண்புதான் அடிப்படையான மனிதப்பண்பு. அன்பான உணவால் நெஞ்சம் நிறைந்தவர்களைக் காணும்போது மகிழ்ச்சியும் மனநிறைவும் கிடைக்கும் என மேன்மக்கள் அறிந்திருந்தனர். எனவே, பகிர்ந்து அளித்து உபசரித்ததோடு மட்டுமல்லாமல் அன்னச்சத்திரம் அமைத்தும் மக்களின் பசித்துன்பத்தைப் போக்கினர்.
தருமமிகு சென்னையில் வாழ்ந்த வள்ளலார், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினார். கருணையே வடிவான இவர், வாடிய வயிற்றின் பசிநெருப்பை அணைக்க, அணையா அடுப்பு ஏற்றிவைத்துத் தருமசாலை அமைத்தார். தானத்தில் முதன்மையானது அன்னதானமே என்று கருணை பொங்க வழிகாட்டினார்.
வயிறுதான் மனிதனின் இரண்டாவது மூளையாகச் செயல்படுகிறது என்று உணர்ந்த பெருமக்கள் செவிக்குணவாக அறிவைப் புகட்டும் கல்விச் சாலைகளிலும் உணவுச்சாலைகள் அமைத்து ஆங்கே வயிற்றுக்கும் ஈந்து பசியாற்றினர்.
ஆந்திராவின் அன்னபூரணி:
1841 அக்டோபரில், (Madras Presidency District) இன்றைய ஆந்திராவின் கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமுந்திரியில் பிறந்தவர் டொக்க சீத்தம்மா. இவர் இயற்கையிலேயே மற்றவர்களுக்கு உணவளித்து மகிழும் அன்புள்ளம் கொண்டவர்.
தான் தொடர்ந்து செய்யக்கூடிய அன்னதானத்திற்குத் தன் கணவர் தரும் ஒத்துழைப்பையே, தன்னுடைய திருமணத்திற்கான விருப்பமாகக் கணவர் டொக்க ஜகன்னாவிடம் தெரிவித்தார்.
நேரம் காலம் பார்க்காமல் பாதசாரிகளுக்கும், எளிய மக்களுக்கும் தொடர்ந்து நாற்பது வருடங்களாக அந்தத் தாய் உணவளித்து வந்தார். தனது கணவரின் காலத்திற்குப் பிறகு, தன்னுடைய இறுதி நாட்களை வாரணாசியில் கழிக்க எண்ணி ஒரு வண்டியை ஏற்பாடு செய்து, அதில் பயணம் செய்துகொண்டிருந்தார். செல்லும் வழியில் சிறிது ஓய்வெடுக்க நினைத்து ஒரு சத்திரத்தில் இளைப்பாறினார்.
அந்தச் சத்திரத்தில் பக்கத்து அறையில் இருந்தவர்கள் பேசிக்கொண்டது சீத்தம்மாவின் காதில் விழுந்தது. அடுத்த அறையில் இருந்தவர்களில் ஒருவர் மிகவும் பசிக்கிறது என்று கூற அதற்கு மற்றொருவர், “பக்கத்து ஊரில்தான் டொக்க சீத்தம்மாவின் வீடு இருக்கிறது, நாம் சீக்கிரம் அங்கே சென்று சாப்பிடலாம், சற்றுப் பொறுத்துக்கொள் ” என்று கூறினார்.
இதைக் கேட்ட அந்த அன்னபூரணி, மக்கள் சேவையே மகேசன் சேவை என்று தீர்மானித்துத் தன்னுடைய வண்டியை வீட்டிற்குத் திருப்பி, வேகமாக உணவு தயாரிக்கும் பயணத்தைத் தொடர்ந்தார்.
இவ்வாறு இவர் தாயன்போடு தொடர்ந்து செய்து வரும் தர்மத்தை அறிந்த பிரிட்டிஷ் அரசாங்கம், டெல்லியில் நடக்கும் (மன்னர் ஏழாம் எட்வார்ட்டின் ஆண்டுவிழா) பாராட்டு விழாவில் கலந்துகொள்ள அவரை அழைத்தது.
தான் செய்யும் பணி பாராட்டுக்காக அல்ல என்று கூறி அந்த வாய்ப்பை அன்போடு மறுத்தார் சீத்தம்மா. ஆனால், அப்போதைய சென்னை மாகாண செயலர் மூலமாக சீத்தம்மாவின் புகைப்படத்தைப் பெற்ற பிரிட்டிஷ் அரசாங்கம், அதைப் பெரிதாக்கம் செய்து, அந்தப் புகைப்படத்தை டெல்லி விழாவின் இருக்கையில் வைத்து மரியாதை செய்தது.
டொக்க சீத்தம்மாவின் அன்னமிட்ட கைகள் கொடுத்தே பழக்கப்பட்டவை என்பதால் இன்றும் அவரை ஆந்திராவின் அன்னபூரணி என்று மக்கள் அன்போடு நினைவுகூர்கிறார்கள்.
அறம் சார்ந்த சமூகம்:
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.
என்று நன்கு தெரிந்த நம் மக்கள் ஊரெங்கும் உணவுச்சாலைகள் ஏற்படுத்தி அன்னதானத்தின் வழியாக, சமூகத்தின் செயல்பாட்டை நல்ல நிதானத்தில் வைத்திருந்தனர்.
நல்ல சிந்தனைகளின் விளைவாக நல்ல செயலைத் தொடங்கி விடலாம். ஆனால், அச்செயலை எல்லாச் சூழ்நிலைகளிலும் தொடர்ந்து செய்வதற்கு அசாதாரணமான மனஉறுதி இருந்தால் மட்டுமே அவ்வாறு செயலாற்ற முடியும். அத்தகைய நல்ல சிந்தனைகளும் அதைச் செயலாக்கும் மனஉறுதியும் ஒருங்கே அமைந்தப் பெரியோர்கள், உணவே மனிதனின் அடிப்படை தேவை என உணர்ந்து அதை அன்போடு அளித்தனர்.
மருந்தும், விருந்தும்:
வியர்வை நீரில் நனையும்படி கடுமையாக உழைத்த அந்தக் காலத்து மக்கள் பெரும்பாலும் நடைப்பயணமாகவே எங்கும் சென்றனர். இத்தகைய நீண்ட பயணங்களில் ஆங்காங்கே இருந்த சத்திரங்களும், உணவு விடுதிகளும் மக்களுக்குப் பெரும் உதவியாக இருந்தன. பசித்த பின்னே புசிப்பதற்குக் கிடைத்த உணவு பசிப்பிணியைப் போக்கிய மருந்தாக இருந்தது.
அன்றைய சமூகத்தின் பண்டிகைகள், அந்தந்த நிலத்துக்கேற்ற உணவுகளோடு தொடர்புகொண்ட எளிமையான கொண்டாட்டமாகவே இருந்தன. திருவிழாக்களிலும், பண்டிகைகளிலும் காலநிலைக்கேற்ற உணவே விருந்தாகவும் இருந்தது.
முகம் தெரியாத வழிப்போக்கர்களுக்காக, ஓய்வு திண்ணைகளும், நீர்மோர் பானைகளும் அமைத்து அன்பு காட்டிய அவர்களுடைய விசாலமான மனம், அனைத்து வீடுகளின் கட்டமைப்புகளிலும் தெரிந்தன.
உழைப்பும், உணவும் சரியாக இருந்த மக்களின் சிந்தனையும், செயலும் நேர்மையாக இருந்தன. இதனால் நம்நாடு அமைதியான மக்கள் வாழ்ந்த பாதுகாப்பான சமூகமாக உயர்ந்து இருந்தது.
# நன்றி.