தன்னம்பிக்கை தேவதை ஹெலன் கெல்லர். Thannambikkai Dhevathai Helen Keller. Power of Positiveness.

தனிமை:

உடல்நிலையில், மனநிலையில், வாழ்க்கை அமைப்பில் என மனிதர்கள் எதிர்கொள்ளும் சில சவால்கள், வாழ்நாள் போராட்டமாகவும் அமைந்து விடுவதுண்டு.  சந்திக்கும் ஒருநாளைகூட சாதாரண நாளாகக் கடந்து செல்ல முடியாத இந்தச் சவாலான வாழ்க்கையில், திடமான தன்னம்பிக்கையும், மலைபோன்ற மனஉறுதியும்தான்  சுவாசமாகச் செயல்படுகிறது. 

தன்னுடைய ஒன்றரை வயதில், பார்வைப் புலனையும், செவிப்புலனையும், (அதன் விளைவாக) பேசும் வாய்ப்பையும் உறைய வைத்துவிட்டக் காய்ச்சலுடன் போராடி, தன்னைக் காப்பாற்றிக்கொண்ட போராளி ஹெலன் கெல்லர்.  

மிக அமைதியான, இருண்ட உலகில் சிக்கிக்கொண்ட ஹெலன் கெல்லருக்கு வெளி உலகம் என்பது தொட்டுப் பார்க்கும் தூர அளவு மட்டுமே இருந்தது.  

ஹெலனின் பெற்றோர்களே தங்கள் குழந்தையிடம் தொடர்புகொள்வதற்கு பலவகையான சிறப்பு நிபுணர்களின் துணை தேவை என்று உணர்ந்தனர்.  எனவே, சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியை நடத்திக்கொண்டிருந்த  அலெக்சாண்டர் கிரகாம் பெல்லின் (தொலைபேசியைக் கண்டுபிடித்தவர்) உதவியை நாடினர்.  அங்குதான் Anne Sullivan (ஆன்னி சல்லிவன்) எனும் நம்பிக்கை ஒளியைக் கண்டனர்.

அன்பு தேவதை:

யாரும் நெருங்க முடியாத தனிமையிலும், குழப்பத்திலும் சிக்கித் தவித்த ஹெலனிடம், மிகப் பொறுமையாகக் கனிவோடு அணுகி தூய அன்பின் ஸ்பரிசத்தால் கரம்பிடித்த தேவதை ஆன்னி சல்லிவன்.  ஹெலன் கெல்லருக்கு ஒவ்வொரு பொருளாக அறிமுகப்படுத்தி, தொட்டுத்தொட்டு புரிய வைத்தார்.  பின்னர் ஒவ்வொரு எழுத்தையும், வார்த்தையையும், பொருட்களோடு தொடர்பு படுத்தி அதை ஹெலனின் கைகளில் எழுதி கல்வியையும் அறிமுகப் படுத்தினார். 

ஹெலனுக்குள் இருந்த உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவருடையச் சிந்தனைகள் செயல் வடிவமாக வெளிப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஆன்னி.  இவர் ஹெலனுக்கும் இந்த உலகத்துக்கும் இடையில்  உணர்வு பாலமாகச் செயல்பட்டார்.

‘நிமிர்ந்து இலக்கை நோக்கி முன்னேறி நடந்தால் கீழே இருக்கும் இயலாமை எனும் நிழல் தெரியாது’, என்று இயலாமைகளைப் புறக்கணித்துவிட்டு செல்வதற்கு வழி சொல்லும் ஹெலன் தன்னம்பிக்கையின் தன்னிகரற்ற வடிவம்.

தொட்டுப்பார்த்து மட்டுமே புரிந்து கொண்ட உலகில், தொடமுடியாத நிழலைப் பற்றி கூறிய அவருடைய வார்த்தைகள் ஹெலனின் மனவுறுதிக்கு மட்டுமல்ல ஆன்னியின் அசாத்திய உழைப்புக்கும் சான்றாக இருக்கிறது.

 “All that I am, or hope to be, I owe to my angel mother.” என்று ஆபிரகாம் லிங்கன் தன் தாயைப் பற்றி கூறிய வார்த்தைகள், ஹெலன் கெல்லரை உருவாக்கிய Anne Sullivan என்ற அன்பு தேவதைக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது.

உணர்வின் ஒலி:

ஹெலன் கெல்லர் என்ற தன்னம்பிக்கை ஓவியத்தைத் தன் அன்பு தூரிகையால் வரைந்து, உணர்வுகளால் வண்ணம் தீட்டியவர் ஆன்னி.  அந்த அழகு ஓவியம், தன் உணர்வுகளைத் தானே வாய் திறந்து பேசும் சக்தியைக் கொடுத்தவர் Sarah Fuller (சாரா பியுல்லர்). 

இவர் நாக்கின் அசைவால் ஒலியை உண்டாக்க ஹெலனுக்குக் கற்று தந்தவர்.  பேச்சு உருவாக்கும் முயற்சியில், தொண்டை அசைவையும், உதட்டின் வடிவமைப்பையும், நாக்கின் அசைவையும் கையினால் தொட்டு உணரவைத்து ஹெலனை பேசச் செய்த அன்பின் தூதுவர்.

சாதனைத் தாரகைகள்:

Anne Sullivan, Sarah Fuller இவர்கள் இருவரும், ஹெலன் கெல்லரின் கற்றல் ஆர்வத்தையும், புத்திக்கூர்மையும் மிகச் சரியாகப் புரிந்துகொண்டு, மிகப் பொறுமையாகவும், மிகக் கடினமாகவும் உழைத்தவர்கள்.  பரந்த உலகில் ஹெலனுக்குச் சிறப்பான அடையாளத்தைப் பெற்று தந்து, உலகம் முழுதும் தன்னம்பிக்கையின் தேவதையாக உலா வரச்செய்தவர்கள். 

ஹெலனிடம் இருக்கின்ற வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்திய இவர்கள், இல்லாத வாய்ப்புகளையும் வெல்லும் வழி காட்டினார்கள். இந்தச் சாதனைப் பெண்களின் சலியாத ஒத்துழைப்பால், தடைகளைக் கடந்த ஹெலன், இருளை வென்ற ஒளியாக, அமைதியில் தவழும் ஒலியாக, நம்பிக்கையின் வெளிப்பாடாக வாழ்ந்து சரித்திரம் படைத்தார். 

பிறவி பெரும்பயன்: 

நம்மிடம் இருக்கும் வாய்ப்புகளை முன்னிறுத்தி, தனிப்பட்ட இயலாமைகளை வென்று, மற்றவர்களும் பயன்படும்படியாக வாழ்வதுதான் பிறவி பெரும்பயன் என்று வாழ்ந்து காட்டிய வீராங்கனை ஹெலன் கெல்லர்.

‘சகிப்புத் தன்மையே உயர்ந்த அறிவு’ என்று கூறும் ஹெலன், படித்து முதுகலை பட்டம் பெற்று, பல மொழிகளைக் கற்று, தான் பெற்ற தன்னம்பிக்கையை, மனவுறுதியை உலக மக்கள் அனைவரும் பெறவேண்டும் என நினைத்தார். 

எனவே பல புத்தகங்கள் எழுதி, பல நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து, உலக மக்கள் நலன் பெற தன்னுடையத் திடமானக் கருத்துக்களை வெளியிட்டார்.  மேலும், தனது அரிய முயற்சியால் சிறப்புக் கூட்டங்களில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ஹெலன், குன்றிலிட்ட விளக்காக, நம்பிக்கையின் பேரொளியாக விளங்குகிறார்.

சவால்களோடு போராடித் தவிப்பவர்களுக்குத் தோழியாகக் கைகோர்க்கும் ஹெலன், சவால்களை வென்று சாதனைகளாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை தருபவர்.  

“கடவுள் என்னைப் படைத்ததற்கு ஏதாவது காரணம் இருக்கும்.  அந்தக் காரணம் தெரியவரும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்” என்று கூறிய ஹெலனின் வாழ்க்கை, உணர்வு பூர்வமானது மட்டுமல்ல ஆழமான அர்த்தம் உள்ளதும்கூட.  

மனவுறுதியின் மொத்த வடிவமாக வாழ்ந்த ஹெலன் கெல்லர், தான் பெற்ற நம்பிக்கையைத் தரணிக்கும் தந்து, தன்னுடைய வாழ்க்கையைச் சரித்திரமாக மாற்றிய தன்னம்பிக்கை தேவதை.

#  நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *