ஓர் ஊரில் பண்ணையார் ஒருவர் இருந்தார். அவரிடம் ஒரு குதிரைவண்டி இருந்தது. அவருடைய வீட்டின் முன்பக்கத் தோட்டத்திலேயே அதை நிறுத்துமிடமும் இருந்தது. பண்ணையார் வெளியில் எங்குப் போகவேண்டும் என்றாலும் அந்தக் குதிரை வண்டியிலேயேதான் போய்வருவார். இதனால் அந்தக் குதிரைக்குச் சற்றுக் கர்வமும் இருந்தது.
அதேநேரம் அந்த வீட்டில் இருக்கும் நாய், பசு ஆகியவற்றைக் கண்டால் குதிரைக்கு ஒரு அலட்சியமும் இருந்தது. “அந்த நாய் உருப்படியாக எந்த வேலையும் செய்வதில்லை, இங்கும் அங்கும் வெட்டியாக நடந்து கொண்டே இருப்பதும், தெரிந்தவர்கள் வந்தால் மட்டும் வேகமாக வாலாட்டுவதும், மேலே தாவுவதும் என்று அவர்களையே சுற்றிச்சுற்றி வருகிறது. காவலுக்காக அதை வளர்ப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், புதியவர்களைக் கண்டால் அதுவே பயத்தில் குரைக்கிறது”, என நினைத்து, அந்த நாயை வெறுத்தது.
மேலும், “என்னதான் இருந்தாலும் தன்னைப்போல அந்த நாய் ஓடி ஓடி உழைக்க முடியுமா? அல்லது குதிரைவண்டி மாதிரி நாய்வண்டியில் நம் எஜமானர்தான் செல்ல முடியுமா?” என்று தன்னைப் பெரிதாக நினைத்தபடியே கர்வமாக இருந்தது.
அதேபோல, “நாள் முழுவதும் தொழுவத்திலேயே அமைதியாக இருக்கும் அந்தப் பசுவை இந்த வீட்டில் உள்ளவர்கள் கொண்டாடுவதற்கு ஏற்றபடி அது அப்படி ஒன்றும் செய்வதாகவும் தெரியவில்லை. ஒய்யாரமான தன்னுடைய நடைக்கு முன்னால் அது ஒன்றுமே இல்லை” என்று அலட்சியமாக நினைத்தது.
அந்த நேரத்தில் (ஹாரன்) ஒலிப்பான் சத்தம் கேட்டதும் குதிரைவண்டிக்காரன் கேட்டைத் திறந்தான். அழகான பெரிய கார் உள்ளே நுழைந்தது. அதனுள்ளிருந்த பண்ணையாரும் அவரது குடும்பத்தினரும் காரிலிருந்து இறங்கினார்கள். வழக்கம் போல நாய் வாலாட்டியபடியே வீட்டின் உள்ளிருந்து ஓடிவந்தது. புதிய கார் வாங்கிய அவர்களுடைய மகிழ்ச்சியில் அதுவும் சேர்ந்து கொண்டது.
பண்ணையார் வண்டிக்காரனை அழைத்துக் குதிரையையும் வண்டியையும் வீட்டின் பின்பக்கம் நிறுத்தச் சொன்னார். குதிரைவண்டி இருந்த இடத்தில் புதிய காரை நிறுத்திவிட்டு, காரை தினமும் துடைத்துச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.
தன்னுடைய இடம் பின்னுக்குத் தள்ளப்பட்டதை நினைத்துக் குதிரைக்குக் குழப்பமாக இருந்தது. இரவு முழுவதும் தன்னுடைய நிலையை நினைத்து நீண்ட யோசனையிலேயே இருந்த குதிரை, ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தது.
அங்கு ஒரு திருடன் பின்பக்கச் சுற்றுச்சுவர் மேலிருந்து உள்ளே குதித்து, வீட்டை நோக்கி மெல்ல நடந்தான். அந்த நிமிடமே வீட்டின் முன்பக்கம் படுத்திருந்த நாய், குரைத்தபடியே வேகமாக ஓடிவந்து திருடனின் காலைக் கவ்வியது. அவனை அங்கிருந்து நகர விடாமல் தொடர்ந்து சத்தமாகக் குறைத்தபடியே இருந்தது. சத்தம் கேட்டுக் கதவைத் திறந்தப் பண்ணையார் நடந்ததைப் புரிந்துகொண்டு, திருடனைப் பிடித்துக் காவலரிடம் ஒப்படைத்தார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த குதிரை, நாய் எந்த நேரத்திலும் விழிப்போடு இருந்து துரிதமாகச் செயல்படுகிறது என்பதைத் தெரிந்து கொண்டது. வீட்டிற்குப் பாதுகாப்பு எந்த நிமிடமும் தேவைப்படும் என்று எப்போதும் எச்சரிக்கை உணர்வோடு இருக்கும் நாயின் சிறப்புக் குணமும், அதை நினைத்துக் கர்வப்படாமல் தன்னுடைய குடும்பத்தினருடன் அன்பாகப் பழகும் நாயின் உயர்ந்த தன்மையும் குதிரைக்கு அப்போதுதான் புரிந்தது.
இதெல்லாம் நடந்து முடிந்தபோது காலைப்பொழுது விடிய ஆரம்பித்து விட்டது. அப்போது பால்கார வேலன் பெரிய பாத்திரத்தோடு அங்கு வந்தான். அந்தப் பாத்திரம் நிறைய பசுவின் பாலைக் கறந்து எடுத்துப் பண்ணையாரின் வீட்டில் கொடுத்துவிட்டுச் சென்றான். நடந்தை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த குதிரை, தன் இரத்தத்தையே பாலாக்கிக் கொடுக்கும் இந்தப் பசு, தன் தியாகத்திற்காக எந்த அலட்டலும் இல்லாமல் இந்தத் தொழுவத்திலேயே இவ்வளவு அமைதியாக இருப்பதை ஆச்சரியமாகப் பார்த்தது.
இவர்கள் செய்யும் வேலை, தான் செய்யும் வேலையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்று குதிரை புரிந்துகொண்டது. இதுநாள்வரை அவர்களைத் தன்னோடு ஒப்பிட்டுக் கர்வப்பட்ட தனது அறியாமையை உணர்ந்து திருந்தியது.
வெளியூர் செல்வதற்கும், குடும்பத்தோடு வெளியே செல்வதற்கும் காரைப் பயன்படுத்திய பண்ணையார், தன்னுடைய வேலைகளுக்கு வழக்கம்போலவே குதிரை வண்டியிலேயே போய்வந்தார். இப்போது கர்வம் இல்லாமல் மகிழ்ச்சியாகத் தன் வேலையைச் செய்த குதிரை நிம்மதியாக நலமாக இருந்தது.
நேர்மையான முறையில் அவரவர் வேலையை அவரவர் சரியாகச் செய்வதுதான் தொழில். அதில் உயர்வு தாழ்வு கருதாமல் அந்த வேலையின் சிறப்பை உணர்ந்து நடந்து கொள்வதுதான் தொழில்தர்மம்.
பலவிதமான வேலைகள், ஒன்று சேர்ந்தும், ஒன்றை ஒன்று சார்ந்தும்தான் ஒரு சமுதாயத்தை இயக்குகின்றன. இதில் ஒருவர் தொழிலை மற்றவரும் மதித்து நடப்பது மிகவும் அவசியம். ஒருவர் தான் எதிர்பார்க்கும் மதிப்பை மற்றவருக்கு ஆக்கபூர்வமான முறையில் பரிமாறும்போது இருவருக்கும் மகிழ்ச்சி உண்டாகும்.
ஒவ்வொருவரின் தனிப்பட்ட பங்களிப்பும் இணைந்து செயல்படும்போது செயலின் தரம் மேலும் உயரும். மற்றவர் தொழிலையும் மதிக்கும் இந்தப் பண்பாடு, சமுதாயம் நாகரிகத்தில் சிறந்து வளர்வதற்குப் பெரிதும் துணையாக நிற்கும் தொழில் தர்மம் ஆகும்.
# நன்றி.