பழையன கழிதலும், புதியன புகுதலும்.
சாதாரணமாக நம் வீடுகளில் ஏதாவது ஒரு பொருள் வாங்கினால் அந்தப் பொருளையும், அது சம்பந்தமான முக்கியமான ரசீதுகளையும் உரிய இடத்தில் பத்திரமாக வைப்போம். அதனுடைய அட்டைப்பெட்டியை உடனே வெளியில் போட்டுவிடாமல், ஒருவேளை தேவைப்படலாம் என்று நினைத்து அந்த அட்டைப் பெட்டியை ஒரு ஓரமாக வைத்திருக்க வாய்ப்பு உண்டு.
சில நாட்கள் சென்ற பின்னர் அட்டைப்பெட்டியைப் போட்டுவிடலாம் என்று முடிவெடுக்கும்போது, அதனுள்ளே வைக்கப்பட்டிருக்கும் பழைய செய்தித்தாள்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து, பழையபேப்பர் வாங்கும் நபருக்காகக் காத்திருப்பதாகச் சொல்லும்.
அப்படியே இன்னும் ஒரு மாதம் சென்ற பின்னர் அந்த அட்டைப் பெட்டியின் பக்கத்தில் மேலும் இரண்டு கட்டு செய்தித்தாள்கள் அடுக்கப்பட்டிருக்கும். அதற்குத் துணையாக உடைந்துபோன பொருட்களும் வரிசையில் சேர்ந்து இருக்கும்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரே ஒரு அட்டைப் பெட்டி மட்டும் வைக்கப்பட்ட இடம் இப்போது ஒரு மினி காயலான் கடையாக மாறியிருக்கும். இதைச் சுத்தம் செய்ய வேண்டும் என நினைத்தால் ஒரே நாளில் பளிச்சென சுத்தம் செய்து விடலாம். ஆனால், மனதை அப்படி ஒரே நாளில் சுத்தம் செய்ய முடியுமா?
மனதிலும் இப்படி தூக்கிப்போட வேண்டிய எண்ணத்தை ஏதாவது ஒரு காரணம் சொல்லி எடுத்து வைத்துக்கொண்டால், அது மனதின் மூலையில் ஓரமாக ஒதுங்கிக்கொள்ளும். தேவையற்ற இந்த முதல் எண்ணம், தன்னைப் போலவே இருக்கும் வேண்டாத எண்ணங்களை, அதற்கு ஒத்துப்போகக்கூடிய அதே வகையான சிந்தனைகளைக் காந்தம்போல இழுத்துத் தன்னோடு கூட்டுச் சேர்த்துத் தன் இருப்பைப் பலமாக்கிக் கொள்ளும்.
நாளடைவில், தனக்கு இடம் தந்த மனதையே தன்வசம் கைப்பற்றி தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டுவந்து, அந்த மனதையே ஒரு குப்பைத்தொட்டிபோல மாற்றி விடும். நாளடைவில் மனம் அவ்வாறு மாறிய நிலையைப் பேச்சு, செயல் போன்ற வெளிப்பாடுகளில் அறிவித்து விடும்.
மாறுபட்ட சிந்தனைகளைக் கொண்டுள்ள இந்த உலகில், ஒரு எண்ணம் தேவையானதா, தேவையற்றதா என எப்படி கணிக்க முடியும்?
எண்ணத்தின் நோக்கத்தையும், அதனுடைய விளைவுகளையும் சிந்தித்துப் பார்க்கும்போது, இது பாதுகாப்பாக வைக்கவேண்டியதா, மேலும் வளர்க்க வேண்டியதா, அல்லது மனதிலிருந்து அப்புறப் படுத்தவேண்டியதா என்பதை நிதானமான மனநிலையோடு முடிவெடுத்து, மனதைக் கவனித்து அவ்வப்போது சுத்தம் செய்யவேண்டியது அவசியமாகிறது.
எனவே, ஒவ்வொரு சூழலில் இருந்தும் பலவிதமாகத் தாக்கும் எண்ணங்களை ஓரளவு வடிகட்ட “விழிப்புணர்வு எனும் மனக்கவசம்” தேவைப்படுகிறது. அதன் பிறகு, மனதில் புத்தம் புதிதாக முளைக்கும் ஒரு எண்ணம் எதைச் சொல்கிறது என்பதில் கவனமாக இருப்பதும் அவசியமாகிறது.
இப்போது, வீட்டில் சுத்தம் செய்யப்பட்ட அந்த இடத்தில் தேவையான பொருட்களோ, அழகுதரும் பொருட்களோ வைத்து, அந்த இடத்தைப் பயனுள்ள இடமாக, அழகாக மாற்றுவது போல, சுத்தம் செய்யப்பட்ட மனதிலும் மாற்றுச் சிந்தனையாக நேர்மறையான, நல்ல எண்ணங்களை விதைப்பது முழுமையான பாதுகாப்பாகச் செயல்படுகிறது.
இந்தச் சிறிய முயற்சிக்குப் பிறகு மனதில் நிலைக்கும் எண்ணமே, சக்தி வாய்ந்த, நல்ல அலைவரிசைகளை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கும். இதனால் உருவாகும் செயல்பாடுகளும் நேர்மறையான விளைவுகளாக இருக்கும். இப்போது, மனதில் புதிதாக முளைக்கும் ஒவ்வொரு எண்ணமும், மனதை மலர் போல அழகாக மலரச்செய்யும் தன்மையோடு இருக்கும்.
இப்படி, மலர்போல மலர்கின்ற மனம் படைத்த மாமனிதர்கள், உலகம் போற்றும் உன்னதமான குணம் வாய்ந்தவர்களாக வாழ்கிறார்கள். இத்தகையவர்களின் வாழ்க்கை அனைவருக்கும் மனமகிழ்ச்சி தரும்வகையில், மணம் பரப்பும் பூந்தோட்டமாக விளங்குகிறது.
# நன்றி.