ஓர் ஊரில் வீரன் என்பவன் இருந்தான். அவனுடைய ஊருக்கு அருகில் இருக்கும் அடர்ந்த காட்டில் விலங்குகள் அதிகமாக இருந்ததால் பாதுகாப்புக்காக எப்போதும் அவன் வில்லும் அம்பும் தோளில் வைத்திருப்பான்.
அவனுக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். அவர்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதையே தன்னுடைய குறிக்கோளாக வைத்திருந்தான்.
வீரனின் மூன்று மகன்களும் திறமைசாலிகள். எனவே, வெளியூரில் உள்ள, அபூர்வமான கலைகள் பயிற்றுவிக்கும் பெரிய பயிற்சிக்கூடத்தில் அவர்களைச் சேர்த்து விட்டான். அவர்களும் சில வருடங்கள் அங்கேயே தங்கியிருந்து கலைகளை நன்கு கற்றுத் தேர்ந்தார்கள்.
ஒருநாள், பயிற்சி முடிந்து வெளிவரும் தன் மூன்று மகன்களையும் அழைத்து வருவதற்கு வீரன் மிகவும் மகிழ்ச்சியாகச் சென்றான். அவர்கள் அங்கு என்ன கற்றுக்கொண்டார்கள், எந்தக் கலையில் திறமை உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள மிகவும் ஆவலாக இருந்தான்.
அப்போது வீரனின் மகன்கள் மூவரும், வில்லும் அம்பும் தோளில் மாட்டிக்கொண்டு நிற்கும் தந்தையைப் பார்த்து, “இன்னும் இந்தப் பழைய கருவியைத் தூக்கிப்போடவில்லையா? நாங்கள், கற்றக் கலையை மனதில் நினைத்து மந்திரம் செய்தாலே பல மாயங்கள் நிகழும்!”, என்று தங்கள் பெருமையைக் கூறினார்கள்.
வீரனுக்கு, மகன்கள் தங்கள் திறமையைக் கூறும்போது மட்டவற்றை மட்டம்தட்டுவது பிடிக்கவில்லை என்றாலும் புன்னகையை மாற்றாமல், மகன்களை அழைத்துச் சென்றான்.
அவர்கள் மூவரும் சுதந்திரமாக வெளியில் வந்து, ஊருக்குச் செல்கிறோம் என்னும் மகிழ்ச்சியில் காட்டுவழியில் நடந்துகொண்டிருந்தார்கள்.
அப்போது அவர்கள், ஒரு விலங்கின் எலும்புகள் ஒரு இடத்தில் குவியலாக இருப்பதைப் பார்த்தார்கள். உடனே வீரனின் மூன்றாவது மகன் தான் கற்ற அறிவால் அந்த எலும்புகளைச் சரியாகப் பொருத்தி ஒரு எலும்புக்கூட்டை நிற்க வைத்தான்.
உடனே இரண்டாவது மகன் தன் திறமையால் அந்த எலும்பு கூட்டுக்குத் தசை, தோல் போன்றவற்றை உருவாக்கி, அதை ஒரு புலிபோலவே தத்ரூபமாக வடிவமைத்தான்.
மூன்றாவது மகன் இவர்களை விட மிகவும் திறமை வாய்ந்தவன். எனவே அவன் தான் கற்றக் கலையின் சிறப்பால், பொம்மையாக நின்றிருந்த புலிக்கு உயிர் கொடுத்தான்.
அப்போது அந்தப் புலி, மெல்ல வாலை அசைத்தது. அதைக் கண்ட மூவரும் மகிழ்ந்தார்கள். நாம்தான் இதை உருவாக்கி உயிர் கொடுத்தோம் என்று தெரிந்து அது நம்மிடம் அன்போடு வாலாட்டுகிறது என்றார்கள்.
அப்போது கண்திறந்து பார்த்தப் புலி, பலநாள் பசியைத் தீர்த்துக்கொள்ள அவர்கள் மீதே பாய்ந்ததைக் கண்டு மூவரும் அலறினார்கள். ஆனால் அந்தப் புலி பாதிலேயே அம்பு தைத்துக் கீழே வீழ்ந்தது. அம்பு வந்தத் திசையைத் திரும்பி பார்த்த மூவரும், கையில் வில்லோடு நிற்கும் தந்தையைக் கண்டு, மகிழ்ச்சியோடு ஓடிப்போய்க் கட்டிக்கொண்டார்கள்.
அபூர்வமான திறமைகளைக் கற்றுக் கொண்டோம் என்ற கர்வத்தால் நிதானம் இல்லாமல் ஆபத்தை உருவாக்கிய தங்களுடைய அறியாமையை எண்ணி மூவரும் வருந்தினார்கள்.
அவர்களைத் தேற்றிய வீரன், “எந்தச் செயலும் அது ஏற்படுத்தும் விளைவுகளினாலேயே அதன் பெருமையும், சிறுமையும் அறியப்படும். உங்களுக்குக் கிடைத்த சிறப்பானக் கல்வி ஒரு அரிய வாய்ப்பு. அதை முறையாகப் பயன்படுத்துவதே உங்கள் தலையாயப் பொறுப்பு”.
“நமக்கும் மற்றவர்களுக்கும் நல்ல விளைவுகளைத் தரக்கூடிய செயல்களே நல்ல செயல்கள். இதை உணர்ந்து செயல்படும் அறிவே உண்மையான அறிவு”, என்று கூறிய வீரனின் வார்த்தைகள் அவர்களுடைய மனதில் கல்லில் செதுக்கிய எழுத்துப்போல நன்றாகப் பதிந்தன.
# நன்றி.