மிகப்பெரிய அடர்ந்த காட்டில் முனிவர் ஒருவர் நீண்ட வருடங்களாக தவம் செய்து கொண்டிருந்தார். ஒருநாள் அவர் தவம் கலைத்துக் கண் விழித்தபோது அவருக்கு முன்னால் ஒரு பெரிய உறைவாள் இருப்பதைப் பார்த்தார்.
அழகான வேலைப்பாடுகள் கொண்ட உறையில் இருந்த அந்த வாள், நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட கைப்பிடியுடன் கண்ணைப் பறிக்கும் அழகில் இருந்தது. யார் இதை இங்கே வைத்திருப்பார்கள் என்று யோசித்த முனிவர், பளபளவென மிகவும் கூர்மையாக இருந்த நீண்ட வாளைக் கையில் எடுத்தார்.
தன்னைச் சுற்றிப் புதர்போல மண்டியிருந்தச் செடிகளை அந்த வாளால் வெட்டினார். அந்த வாள் மிகமிக வேகமாக, மிக எளிதாகப் புதர்களை வெட்டியதால் முனிவருக்கு உற்சாகம் வந்தது. எனவே செல்லும் வழியில் இருந்த செடி, கொடிகளை, மரக்கிளைகளை, மரங்களை என கண்ணில் கண்டதை எல்லாம் தொடர்ந்து வெட்டிக்கொண்டே சென்றார்.
கூர்மையான வாள் தந்த உற்சாகத்தால் தன்னுடைய நியம காரியங்களை மறந்து, தொடர்ந்து மரங்களை வெட்டினார். இதனால் மிகவும் களைத்துப்போன முனிவர் உடல் அசதியால் தூங்கிவிட்டார்.
மறுநாள் காலை கண் விழித்த முனிவருக்குத் தன்னிலை புரிந்தது. தன்னுடைய உயர்ந்த நோக்கத்தை மறந்து விட்டு, நேற்று முழுவதும் பயனற்ற வேலை செய்ததை நினைத்து வருந்தினார். தன்னுடைய கவனம் திசை திரும்பியதால், பல ஆண்டுகள் தவம் செய்து கிடைத்தப் பலன்கள் அனைத்தும் ஒரேநாளில் வலிமை இழந்து விட்டதை உணர்ந்தார்.
தன்னுடைய தவறை ஒருநாளில் உணர்ந்தாலும் இழந்த சக்தியை மீண்டும் பெறவேண்டும் எனில் மீண்டும் ஆரம்பத்திலிருந்து பல ஆண்டுகள் கடுமையான தவத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டார்.
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார். அதாவது, ஒரு திரையரங்கத்திற்குப் படம் பார்க்க வருபவர்கள் தனித்தனியாகவோ, சிறிய குழுவாகவோ வெவ்வேறு நேர இடைவெளிகளில் வருவார்கள். எனவே, திரையரங்கம் நிறைவதற்கு நீண்ட நேரம் ஆகும். ஆனால் படம் முடிந்த பின்னே அனைவரும் ஒரேநேரத்தில் எழுந்து வெளியே சென்றுவிடுவார்கள். இதனால் சில நிமிடங்களில் திரையரங்கமே காலியாகிவிடும் என்று செல்வத்தின் நிலையாமைக்குத் திருவள்ளுவர் கூறும் உவமை பொருட்செல்வத்திற்கு மட்டும் அல்ல என்று தோன்றுகிறது.
நல்ல செயல்களை ஒவ்வொன்றாகச் செய்து உயர்ந்த நிலையை அடைவதற்குப் பல ஆண்டுகள் ஆகும். அவ்வாறு உயர்ந்தவர்கள் தங்களுடைய கொள்கையிலிருந்து சில நிமிடங்கள் கவனம் திசை திரும்பினாலும் அதன் விளைவு அத்தனை வருட உழைப்பையும், நல்லபேரையும் ஒரே நிமிடத்தில் கலைத்துப்போட்டு விடும். பின்னர் அதை உணர்ந்தாலும், மீண்டும் தன்னிலை பெறுவதற்கு முன்பை விட கூடுதலான கவனத்தோடு கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும்.
முனிவரின் கவனத்தைத் திசைதிருப்பிய கூர்மையான வாளைப்போல, துள்ளல் தரும் தூண்டில்கள், பாசாங்கு செய்யும் சுயநலவாதிகள், இயல்பை மீறிய சூழல்கள் என உலகில் ஏராளமான கூர்மையான வாட்கள் இருக்கின்றன. இவற்றால் கவனம் திசை திரும்புவதால் இயல்பான வாழ்க்கையில் ஏற்படும் இழப்புகளும், தொந்தரவுகளும் மிக மிக அதிகமாகப் பெருகிவிட்டன.
திசைதிருப்பும் காரணங்கள் எந்த வடிவிலும் இருக்கலாம். எனவே, எதையும் வியத்தலும் இல்லாமல், அலட்சியமாக நினைத்தலும் இல்லாமல், ஒரு கவனிப்போடு இருக்க வேண்டியது அவசியம் ஆகிவிட்டது. இப்படி, கருமமே கண்ணாயினார் என தங்கள் கடமையில் கருத்தாக இருப்பவர்கள், மக்கள் நலனையே கொள்கையாகக் கொள்ளும்போது, அவர்கள் தங்களுடைய கொள்கையிலும் உயர்நிலை அடைகிறார்கள், அவர்களால் மக்களும் உயர்நிலை பெறுகிறார்கள்.
# நன்றி.