எண்ணம்:
வெளிப்படும் சூழ்நிலையைப் பொருத்தும், வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பொறுத்தும், எண்ணத்தின் மதிப்புத் தீர்மானிக்கப்படுகிறது. வாழ்க்கையின் போக்கையே மாற்றும் சக்தி வாய்ந்த இத்தகைய எண்ணங்களைப் பற்றிய நம்முடைய பார்வைகளைச் சற்று வேறு கோணத்தில் பார்க்கும்போது, அந்த எண்ணங்களில் பல வண்ணங்கள் இருப்பது நம் பார்வைக்குப் புலப்படுகின்றன.
வழக்கமாகத் தீமையை ஏற்படுத்தும் ஒரு சில எண்ணங்களும், சில சூழ்நிலைகளில் அதன் தீமையை மாற்றி நன்மை செய்வதை நடைமுறையில் அறியமுடிகிறது.
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
என்பதுபோல, நாம் தவிர்க்க வேண்டிய ஒருசில எண்ணங்களின் மீதுள்ள நமது பார்வையைச் சற்று மாற்றினால், அதுவே அந்தச் சூழ்நிலைக்கு மருந்தாகவும் பயன்படுவதை அறியலாம்.
ஒப்பீடு என்ற எண்ணம், தாழ்வு மனப்பான்மை, பொறாமை, கர்வம், வெறுப்பு, போன்ற இழிவான குணங்களுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. ஆனால், அதையே சற்று மாற்றி யோசித்தால், அதுவே மனதில் பக்குவத்தை ஏற்படுத்தி அமைதியைத் தருகின்ற அரிய தன்மையும் கொண்டுள்ளது எனத் தெரிகிறது.
சோதனைகளால் தாக்கப்பட்டு மனம் சோர்வடைந்த மனிதன், தன்னைவிட அதிகமான சோதனைகளை சந்தித்தவர்கள், அவற்றை மனவுறுதியோடு எதிர்கொண்டு, அவர்களுடைய தன்னம்பிக்கையாலும், விடா முயற்சியாலும் அவற்றைக் கடந்து சென்று, வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு முன்னேறினார்கள் என்று தெரிந்து கொள்ளும்போது, அவர்களுடைய மனத்துணிவை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளும் எண்ணம் மனதில் புதிய நம்பிக்கையை நிச்சயம் ஏற்படுத்துகிறது.
அடுத்ததாக,
தன்னையே பெரிதாக நினைத்துத் தலைக்கனம் ஏறி நிலைத் தடுமாறும் மனிதனும், இவ்வாறு கர்வத்தால் கவனம் ஈர்த்தவர்கள், முடிவில் தங்கள் மரியாதையை இழந்து கீழ்நிலை அடைந்ததை எண்ணிப்பார்த்து எச்சரிக்கையாக வாழ்வதற்கும் உதவுகிறது.
மேலும், தனக்கும் மேலே உள்ளவர் கோடி என நினைத்துப் பார்த்து, தன்னுடைய நிலையை உணர்ந்து அடக்கமாக இருக்கவும், உயர்ந்தவர்களின் சிறப்பைப் பார்த்து, தன்னை வளர்த்துக்கொள்ளவும் உதவுகிறது.
அறிவிற் சிறந்த முன்னோர்கள் கூறிய பொதுவான நல்லியல்புகளும், மேன்மக்களின் அணுகுமுறைகளும், மனிதன் தன்னைத்தானே நெறிப்படுத்திக்கொள்ள உதவும் நிலையான அளவுகோல்களாக உள்ளன. அவற்றோடு, தனிமனிதனின் தனிப்பட்ட இயல்புகளைக் காலத்துக்கு ஏற்றபடி, அவ்வப்போது ஒப்பீடு செய்வது, தன்னுடைய எண்ணங்களைச் சீர்படுத்தி, சிந்தனைகளை உயர்த்திக்கொள்ள உதவுகிறது.
நாம் பார்க்கும் பார்வையைச் சற்று மடைமாற்றினால் ஒப்பீடு கூட நமக்கு உதவும் நல்ல எண்ணமாக பயன்படும் வாய்ப்பு உள்ளது. மனபதட்டத்தைக் குறைத்து, மனத்தெளிவைத் தரும் எண்ணம் எதுவோ அதைப் பொருத்தமாகத் தேர்ந்தெடுப்பதற்கு விசாலமான பார்வை நமக்கு உதவுகிறது.
பாதுகாப்பு:
தெளிவில்லாத நிலையில் மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணமே பெரும்பாலான பயத்திற்கும், குழப்பத்திற்கும் காரணமாக இருக்கின்றது. பதட்டத்தையும், தயக்கத்தையும் தருகின்ற இந்த எதிர்மறை எண்ணத்தை, சற்று கவனித்து, அதையே எச்சரிக்கை உணர்வாக மாற்றும்போது, அதுவே முதல்கட்ட பாதுகாப்பாகச் செயல்பட்டு மனதிற்கு வலுசேர்க்கிறது.
இந்த எச்சரிக்கை உணர்வே எந்தச் செயலையும் கூடுதல் கவனத்துடன் செய்வதற்கு உதவும் பாதுகாப்பு வளையமாக இருக்கிறது. இது இன்றைய சூழலில் குழந்தைகளும் தெரிந்திருக்க வேண்டிய முதல்நிலை தற்காப்புக் கலையாகும்.
வீதியில் இருக்கும் கல்லும் முள்ளும் காலில் குத்தும் என்று வீட்டில் அடைபடுவது செயல்பாட்டைத் தடுக்கும் எதிர்மறை எண்ணம். அதையே சற்றுச் சிந்தித்து, வெளியில் இருக்கும் கல்லையும் முள்ளையும் கடந்து செல்ல, முன்னெச்சரிக்கையாகக் காலில் செருப்பு அணியலாம் என்பது பாதுகாப்போடு செயல்பட வைக்கும் ஆரோக்கியமான நேர்மறை எண்ணமாகும்.
ஒவ்வொரு சூழ்நிலையிலும் அதில் உள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து, நன்மைகளை முறையாகப் பயன்படுத்துவதும், தீமைகளில் எச்சரிக்கையாக இருப்பதும் வாழ்க்கைக்குத் தேவையான ஒன்று. இந்த எச்சரிக்கை உணர்வு எந்தச் செயலையும் பாதுகாப்போடு செயல்படுவதற்கு உதவும் நேர்மறையான உணர்வு.
தவிர்க்க முடியாதப் பிரச்சனைகளைத் தகுந்த பாதுகாப்புடன் எதிர்கொள்ளவும், முக்கியமான செயல்பாடுகளில் மாற்று திட்டங்களை வைத்துக்கொள்ளவும் முன்னெச்சரிக்கை உணர்வே காரணமாக இருக்கிறது. எனவே, எதிர்மறையான எண்ணத்தையும் எச்சரிக்கை தரும் பாதுகாப்புக் கருவியாக மாற்றும் மனப்பக்குவம், சூழலை எதிர்கொள்ளும் பார்வையில்தான் இருக்கிறது.
மனிதர்களின் பார்வைகள் பலவிதமான கோணங்களில் இருக்கலாம். ஆனால், அவை ஏற்படுத்தும் எண்ணங்கள் தரத்தில் ஒருபடி மேலே உயர்ந்தால் அதுவே ஏணியாக நின்று வாழ்க்கையைப் பலபடிகள் உயர்த்தும் என்பது உண்மையே.
# நன்றி.