விவேகம்:
கண்களின் தன்மைகளை உணர்ந்து, தெளிவான பார்வைக்காக அணியப்படும் மூக்குக் கண்ணாடிகள், வெப்பத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கும் குளிரூட்டும் கண்ணாடிகள், பொருளைப் பெரிதுபடுத்திக் காட்டும் தொழில்சார்ந்த பூதக்கண்ணாடிகள், என சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் பலவிதமான கண்ணாடிகள் பார்வைக்குத் துணை செய்யும் கருவிகளாகப் புழக்கத்தில் இருக்கின்றன.
ஆனால், இயல்பாக இயற்கையைப் பார்க்க வேண்டிய நிலையில் பூதக்கண்ணாடியைப் பயன்படுத்துவதுபோல, சூழ்நிலைக்குப் பொருந்தாத கண்ணாடிகள் பார்வையில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும். இதுபோலவே ஒருசில எண்ணங்களையும், சிந்தனைகளையும் பொருத்தமற்ற சூழ்நிலைகளில் பயன்படுத்துவதால் விளைவுகள் எதிர்மறையாக மாறுவதற்கும் காரணமாகும்.
எனவே, சூழ்நிலைகளின் தன்மைகளை உணர்ந்து, தெளிவான சிந்தனைகளால் மனதை அமைதியாக வைத்துக் கொள்வதும், சூழ்நிலைக்குப் பொருத்தமான எண்ணங்களைக் கையாள்வதும் மிகவும் அவசியமாகிறது.
அமைதிதருகின்ற குளிர்ந்த சிந்தனைகள், ஆராய்ந்து செயல்பட உதவும் ஆழமான சிந்தனைகள் போன்றவை வாழ்க்கையை எதிர்நோக்கும் பார்வைக்குத் துணை செய்யும் கருவிகளாக இருக்கின்றன.
செய்யவேண்டியவை, தவிர்க்கவேண்டியவை என்று செயல்களின் தரமறிந்து வகைப்படுத்தும் சிந்தனைகள் வாழ்க்கையை முன்னோக்கிச் செலுத்தும் திறனுள்ளக் கருவிகளாகச் செயல்படுகின்றன.
சூழலின் ஒவ்வொரு நிலையிலும் விரிகின்ற பலவிதமான சிந்தனைகளுள் (mature) முதிர்ச்சியானதைத் தேர்ந்தெடுத்துச் சூழ்நிலைக்குப் பொருத்தமாக, சரியான நேரத்தில், முறையாகப் பயன்படுத்தும்போது, அதுவே விவேகமான வாழ்க்கைக்குப் பலமாக அமைகிறது.
நாள்தோறும் பயிற்சி:
மிகச் சாதாரண மரத்தாலான சிறியப் பொறியில் சிக்கிக்கொண்ட எலி, உறுதியான மரப்பொருளையும் தூள்தூளாக்கக்கூடிய தன்பலத்தை மறந்து, பொறிகலங்கி தவித்துக் கொண்டிருக்கும்.
இவ்வாறே, சூழ்நிலையில் உள்ள சிக்கலை மட்டும் காணும் மனம், பயத்தையும் பதட்டத்தையும் மேலும் பெரிதாக்கி, வெற்றிக்கான வாய்ப்புகளைப் பார்வையிலிருந்து மறைத்து விடுகிறது. பெரும்பாலும், தனிப்பட்ட பலத்தை மறந்த வினாடிகளே பலவீனத்திற்குக் காரணமாக அமைகின்றன.
நடைமுறையில் நாள்தோறும் சந்திக்கும் சூழல்களே, சுயபலத்தை மேம்படுத்தவும், பலவீனத்தைக் கையாளவும், இயல்பான பயிற்சிகளாக அமைகின்றன. இந்த அனுபவங்களும், சுயசிந்தனையால் ஏற்படும் விவேகமும் சவாலான சூழ்நிலைகளுக்கு உள்ளே மறைந்திருக்கும் சாதகமான வழிகளைப் புலப்படுத்தும் சக்திகளாக விளங்குகின்றன. தொடர்ந்து நடக்கும் இத்தகைய அணுகுமுறையே செறிவான வாழ்க்கைக்குக் கூடுதல் பலமாக விளங்குகிறது.
சவால்கள் ஏன்?:
பளுதூக்கும் பிரிவில், நூறு கிலோவை எளிதில் தூக்குபவரை, அதைவிட அதிகமான பளுவைத் தூக்கச் செய்வது, அவரை அடுத்த நிலைக்கு முன்னேற்றுவதற்கான சவாலாகப் பார்க்கிறோம். ஒருதுறையில் திறமை உள்ளவருக்கு அந்தத் துறையிலேயே தொடர்ந்து ஏற்படும் சவால்கள், அவரைச் சாதனையாளராக உயர்த்தி விடுகின்றன.
அதுபோலவே நல்ல பண்புகள் உள்ளவர் எந்தச் சூழ்நிலையிலும் அந்தப் பண்புகளை வைராக்கியத்துடன் திடமாகக் கடைப்பிடிக்கும்போது, அவர் சிறந்தப் பண்பாளராக உயர்ந்து நிற்கிறார்.
சவால்கள் பலவீனத்தை வெளிப்படுத்துமோ என நினைக்காமல், பலத்தை அதிகரிக்கும் நிலைக்கான வாய்ப்பாக ஏற்றுக்கொள்ளும்போது அவற்றை சந்திக்க மனம் தயார் நிலையை அடைகிறது. மேலும், திறமையை மேம்படுத்தவே சவால்கள் ஏற்படுகின்றன என்று உறுதியாக நினைக்கும்போது, அதற்கான வாய்ப்புகளும் பார்வைக்கு வந்துவிடுகின்றன.
# நன்றி.