ஏணியாகும் எண்ணங்கள்: Eniyaagum Ennangal. Thoughts Raising the Quality.

நம்முடைய எண்ணங்களே நம்முடைய உயர்வுக்கும் பின்னடைவுக்கும்  காரணமாக இருக்கின்றன.  தீதும் நன்றும் பிறர் தருவதால் வராது  என்றும், அவை நம்முடைய எண்ணங்களின் விளைவால் ஏற்படுகின்றன என்றும் கற்றறிந்த, அனுபவமிக்கப் பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள்.

அப்படியானால் நம்முடைய வாழ்க்கையில் பிறருடைய தாக்கங்கள் இருக்காதா என்று யோசிக்கலாம், அது நியாயமே. ஆனால், பிறரால் ஏற்படும் அந்தத் தாக்கங்களை நன்மையாகவோ தீமையாகவோ ஏற்றுக்கொள்வது அவரவர் எண்ணத்தைப் பொறுத்து விளைவதுதான் என்கிறார்கள்.

ஆசிரியர் ஒருவர் தான் நடத்தியப் பாடத்தில் மறுநாள் சிறியதாக  வகுப்புத்தேர்வு வைக்கப்போவதாக மாணவர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம்.  நன்கு படித்து எழுதுபவனும், அதைத் தவிர்க்க விடுப்பு எடுப்பவனும் அவர்களுடைய எண்ணங்களால் அதன் விளைவுகளை சந்திக்கிறார்கள்.

ஆனால், மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தவேண்டும் என்ற தீயநோக்கத்தில் உருவாகும் எதிர்மறை எண்ணம், பலமடங்காக வளர்ந்து, அவ்வாறு  நினைத்தவர்களுக்கே காலத்தால் வினைபுரியும்.  

அதனால்தான் எண்ணத்தில் கவனம் வேண்டும் என்று உணர்த்த, கெடுவான் கேடு நினைப்பான் என்று நம் முன்னோர்களும்  எச்சரிக்கைச் செய்தார்கள்.  

எனவே, எண்ணங்களை நேர்மையாகக் கவனித்து எப்போதும் எந்த நிலையிலும் நல்ல எண்ணங்களையே பழக்கமாகச் செயல்படுத்த வேண்டும்.  இதனால் மனம் அமைதியின் இருப்பிடமாகத் திகழ்வதோடு அதுவே வாழ்க்கையின் உயர்வுக்கும் அடிப்படை காரணமாக அமையும்.

ஆகவே, நேர்மறையான எண்ணம் ஏணியாகச் செயல்பட்டுத் தன்னம்பிக்கையோடு உயர்வதற்குப் பயன்படுகிறது.  ஆனால், தாழ்வு மனப்பான்மையால் கட்டப்பட்ட எண்ணம் பரமபத பாம்பு போல கீழே இறங்குவதற்குக் காரணமாகிறது.  

மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதிர்மறை எண்ணம் பூமராங் போல நினைத்தவர்களையே திருப்பி அடிக்கிறது.  எனவே, நன்மை தீமை என்ற விளைவுகள் எதுவாயினும் பெரும்பாலும் அவரவர் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன.

ஆரோக்கியமான மனதில் தோன்றும் எண்ணம், சிக்கலான சூழலிலும் சிந்தித்துச் செயல்படும் மனஉறுதியை அளிக்கும்.  அத்தகைய உறுதி இல்லாதத் தளர்ந்த மனம், எந்தச் சூழ்நிலையையும் கடினமானதாக நினைத்து அதையே சிக்கலாக மாற்றி விடும்.  

தெளிவற்ற மனதில் தோன்றும்  அதிகப்படியான பயமும், அதனால் வெளிப்படும் தேவையற்ற செயலும்  எதிர்மறையான விளைவையே  ஏற்படுத்துகிறது.  இதனால் ஏற்படும் குழப்பம் மனநிலையையும் பாதிக்கிறது.

இதிலிருந்து விடுபட்டு, மனம் தெளிவாகச் சிந்திக்க வேண்டுமானால் நேர்மறையான எண்ணமும், தன்னம்பிக்கையும் அவசியம் தேவை.  எண்ணம் எப்போதும் நேர்மறையாக இருப்பதற்கு வழிகாட்டும் நல்ல நூல்களைப்  படிப்பதும், உயர்ந்த நல்ல பண்புகள் உள்ளவர்களோடு பழகுவதும், மனஉறுதியோடு சுயமுயற்சியால் உயர்ந்த மேன்மக்களின் வாழ்க்கை அனுபவங்களை உள்ளபடியே அறிந்து கொள்வதும் மனதிற்குத் தொடர்ந்து சக்தியளிக்கும் செயல்களாக உதவுகின்றன.  

நிலத்தில் ஊன்றி இருக்கும் வேரில் தண்ணீர் ஊற்றினால் வெளியில் தெரிகின்ற மரத்தில் பூக்கள் பூப்பதைப்போல, உள்ளிருக்கும் மனம் நேர்மறையான எண்ணங்களால் தெளிவடையும்போது, ஒவ்வொரு செயலும் தன்னம்பிக்கையாக வெளிப்படுகிறது.  இதனால் நம்முடைய மனமே மகிழ்ச்சி அடைகிறது.   

#   நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *