மனவலிமையை வளர்த்துக்கொள்வது எப்படி? Manavalimaiyai Varththukkolvathu Eppadi? How to Establish the Mental Strength?

உன்னால் முடியாதென்று யார் சொன்னாலும் நம்பாதே.  உனக்குள் இருக்கும் திறமையைக் கண்டுபிடிக்க முதலில் “உன்னை நீ நம்பு”, என்று தான் வாழ்ந்து காட்டிய ஒரு வீரரின் வாழ்க்கை நிகழ்வுகளில் சிலவற்றை நம் சிந்தனையில் காண்போமா?  

காஷியஸ் மார்செல்லஸ் கிளே என்ற பத்துவயது சிறுவன் ஒரு நாள்  சாலையில் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தான்.  அப்போது  திடீரென்று திருடர்கள் சிலர் அந்தச் சிறுவனைத் தாக்கிவிட்டு அவனிடமிருந்த  சைக்கிளைப் பிடுங்கிக்கொண்டு சென்று விட்டார்கள். 

இதனால் அதிர்ச்சியடைந்த அவன் அந்தச் சாலையிலேயே உட்கார்ந்து விட்டான்.  அப்போது அந்த வழியாக வந்த காவல் அதிகாரி அவனிடம் சென்று விசாரித்தார்.  ஆனால் அந்தச் சிறுவனோ நடந்ததைச் சொல்ல முடியாத நிலையில் பதட்டத்தோடு இருந்தான்.  

அதைக் கண்ட காவல் அதிகாரி அந்தச் சிறுவனின் பயத்தை நிரந்தரமாகப் போக்க வேண்டுமானால் தனக்குத் தெரிந்த குத்துச்சண்டையை அவனுக்கும்  சொல்லித்தர வேண்டும் என்று நினைத்து, சிறுவனின் பெற்றோருடைய  சம்மதத்துடன் அவனுக்குப் பயிற்சி அளித்தார்.  தீவிரமான இந்தப் பயிற்சியினால் காஷியஸ் மார்ஷியஸ் கிளே என்ற இந்தச் சிறுவன் தனது தொடர் குத்துக்களால் பயத்தை நாக் அவுட் செய்து முகமது அலி என்ற வீரனாக உலகம் போற்ற உயர்ந்து நின்றார்.

தனது பதினாறு பதினேழு வயதில் light weight championship போட்டியில் கோல்ட் மெடல் வென்ற இவர், ஹெவி வெய்ட் சாம்பியனாக இருந்த சன்னி லிஸ்ட்டை தனது 21 ஆவது வயதில் வென்ற நுணுக்கங்கள் இன்றும் முறியடிக்க முடியாத சாதனைகளாக உள்ளன.   

ஒரு சிறந்த குத்துச்சண்டை வீரன் இன்றைய தலைமுறை  வீரர்களுக்கும் ஹாலிவுட் நாயகர்களுக்கும் மிக சிறந்த ஆதர்சன நாயகனாக திகழும் மாபெரும் வீரனாக வளர்ந்த கதைதான் மனவலிமையை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகளை கூறுகிறது.

Heavy weight champion போட்டியில், அதுவரை தோல்வியே சந்தித்திராத சன்னி லிஸ்ட்டைப் போட்டியில் சந்திக்க முகமது அலி தயாரானார்.  அப்போது அவருடைய கோச் “உன்னை நீ நம்பு” என்ற மந்திர வார்த்தையை அவருக்குள் விதைத்தார்.  அந்த வார்த்தையே முகமது அலியின் சிந்தனையில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது.  எனவே “I am the greatest champion” என்ற வாசகத்தைத் தான் பார்க்கும் இடமெங்கும் எழுதிவைத்தார்.  

அந்த வாசகம் பார்வையில் படும்போதெல்லாம் அதையே உறுதியாக மனதில் உருவேற்றினார்.  அதையே தன்னுடைய சிவப்பு நிற கிளவுஸில் வெள்ளை நிற எழுத்துக்களால் பதித்து வைத்துக்கொண்டார்.  அறிவிக்கப்பட்ட நாளில், தனது நாக்அவுட் குத்துகளின் வெற்றிகளால் புகழ்பெற்றிருந்த சன்னி லிஸ்ட் என்ற எதிராளியை முகமது அலி எதிர்த்தார்.  

அப்போது பார்வையாளர் பக்கம் பெருமளவில் கூடியிருந்த சன்னி லிஸ்டின் ஆதரவாளர்கள், “ஆம்புலன்ஸ் தயாராக இருப்பதால் பயப்பட வேண்டாம்”, என்று முகமது அலியை நோக்கி கூச்சலிட்டார்கள்.  முகமது அலியோ “அந்த வண்டி சன்னி லிஸ்ட்க்கும் அவனுடைய தோல்வியைக் கண்டு அதிர்ச்சியுறும் பார்வையாளர்களுக்கும் உதவியாக இருக்கும்”, என்று பதிலடி கொடுத்தார்.

சொன்னதுபோலவே இந்தப் போட்டியில் வென்ற முகமது அலி world heavy weight champion ஆனார்.  ஆனாலும் கடின முயற்சியால் முகமது அலி பெற்ற இந்த வெற்றியை  “ஏதோ அதிர்ஷ்டம்! அதனால்தான் வெல்ல முடிந்தது”, என்று மக்கள் பரவலாகப் பேசினார்கள்.

எனவே, மறுபடியும் சன்னி லிஸ்ட்டை மேட்சில் சந்திக்க தான் தயார் என்றும், அப்படிச் சந்திக்கும் மேட்சில் முதல் ரவுண்டிலேயே நாக்அவுட் செய்து விடுவதாகவும், அவ்வாறு செய்யவில்லை என்றால் தனது பட்டத்தைத் திருப்பி தந்து விடுவதாகவும் கூறினார்.  

இவருடைய வார்த்தைகளைக் கேட்ட மக்கள், “நடைமுறையில்  அப்படியெல்லாம் செய்ய முடியாது, இது over confident”, என்று கூறினார்கள். 

வெறும் வார்த்தைகள் over confident ஆகதான்  வெளிப்படுகின்றன.  ஆனால் அதுவே முறையாகச் செயல்படும்போது confidentக்குப் புது உயரத்தை நிர்ணயிக்கின்றன.  எனவே, தன்னுடைய வார்த்தைகளைச் செயல்வடிவமாக்க, வெற்றி பெறுவதற்குத் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்ள, தேவையான தகுந்த ஆலோசனைகளைப் பெறுவதற்குத் தன்னுடைய கோச்சை அணுகினார்  முகமது அலி. 

அப்போது அந்தக் கோச் “உன்னுடைய பலத்தை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்” என்ற உபதேசித்தார்.  ஆனால் அந்த நேரத்தில் தன்னுடைய பலம் எது என்று முகமது அலிக்குத் தெரிந்திருக்கவில்லை.  எனவே தன்னுடன் இருக்கும் பயிற்சியர்களிடம் “எது தன்னுடைய பலமாக வெளிப்படுகிறது?”, என்று கேட்டார்.

1.You float like butterfly.  எதிராளியிடம் குத்து வாங்காமல் வேகமாக நகருவது.  2. You sting like bee. அதிக வலியும் எரிச்சலும் தரும் வகையில் வலிமையான குத்துகளாகக் கொடுப்பது., போன்றவை முகமது அலியின் பலம் என்று அவர்கள் கூறினார்கள்.  

எனவே, அவர் தன்னுடைய பலத்தை எப்போதும் மனதில் பதிக்கும் வகையில் ஒரு ஸ்லோகனை உருவாக்கினார்.  “Oh rumble, young man rumble, I will float like butterfly, sting like a bee”, என்று தனக்குள் தொடர்ந்து மனதில் பதிய வைத்து, தன்னுடைய பலத்தையே மிக வலிமையாக வெளிப்படுத்தும் வகையில் ஒரு வருடம் தொடர்ந்து பயிற்சி செய்தார்.  

இந்நிலையில் இந்த மேட்சுக்கு மக்களிடையே எதிர்பார்ப்பும்  அதிகமாக  வளர்ந்தது.  அந்த எதிர்பார்ப்பைச் சிறப்பாகப் பூர்த்தி செய்யும் வகையில் முதல் ரவுண்டிலேயே சன்னி லிஸ்ட்க்கு நாக்அவுட் கொடுத்து முகமது அலி பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.  

அந்த மேட்சில் முகமது அலியின் முதல் குத்திலிருந்து தப்பித்த சன்னி லிஸ்ட்,  முகமது அலியைத் தாக்குவதற்குத் தொடர்ந்து முயற்சி செய்தார், ஆனால் அவற்றிலிருந்து வேகமாக தப்பித்த முகமது அலி, தன்னுடைய மிக வலிமையான ஒரே குத்தில் சன்னி லிஸ்டை நாக்அவுட் செய்தார்.  

இந்தப் போட்டியில் வெல்வதற்கு முகமது அலி எடுத்துக்கொண்ட குறைந்த அளவு நேரமும், தனித்துவமான பெயர்பெற்ற வலிமையான (punch) பன்சின் நுணுக்கமும் மிகப்பெரிய சாதனைகளாகக் குத்துசண்டை வரலாற்றில்  பதியப்பட்டன.

எந்தப் போட்டியாக இருந்தாலும், அதில் கலந்து கொள்பவர்கள் வெல்ல வேண்டும் என்று நினைப்பது இயல்புதான்.  ஆனால் ஆரம்ப நிலையான அந்த எண்ணம் படிப்படியாக செயல்வடிவம் பெற்று நிறைவேற வேண்டுமானால் எத்தகைய கடினமான முயற்சி வேண்டும் என்பதற்கு முகமது அலி வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்வுகள் நல்ல வழிகாட்டிகளாக உள்ளன.  

ஒரு குத்துச்சண்டை வீரனின் கைகள் எதிராளியின் சிம்ம சொப்பனமாக வலிமை பெற்றுத் திகழ்ந்ததற்கு அவருடைய உடல்வலிமை மட்டுமே காரணமல்ல.  தன்னுடைய சுயபலத்தை மனவலிமையாக மாற்றியதும்,  எண்ணத்தின் ஒருநிலைப்பாட்டை தீவிரமான உந்துசக்தியாக மாற்றியதுமே  இந்த வெற்றிகளுக்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.   

குறிப்பிட்ட குறிக்கோளை நோக்கி பயணிக்க நினைப்பவர்களுக்கு உதவும் வழிமுறைகள், 

1.முடியாது என்று தனக்குள் ஒலிக்கும் குரலுக்கு வலிமையான  நாக்அவுட் கொடுத்து,  முதலில் நம் மனதை நாம் வெல்ல வேண்டும்.  

2.சுயபலத்தைச் “சரியாகக் கண்டறிந்து”, அதை நமக்கு நாமே உறுதியாகச் சொல்லி நம் மனதை வலிமைப் படுத்த வேண்டும். 

3.ஒருநிலைப்பட்ட மனதோடு தொடர்ந்து தீவிரமாகச் செயல்படும்போது, வெளிப்படும் செயலின் சிறப்பே நம் மனவலிமைக்குச் சான்றாக அமையும். 

என்று முகமது அலி தன் வாழ்க்கையில் நிகழ்த்திக் காட்டியுள்ளார். 

#  நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *