உழைப்பின் பரிசு:
ஓர் ஊரில் சிவில் இன்ஜினீயர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு பெரிய கட்டுமான நிறுவனத்தின் பொறுப்பு மிக்க பதவியில், மிகவும் உண்மையாக உழைத்து வந்தார். கட்டுமானத்திற்காக அவர் அக்கறையுடன் தேர்ந்தெடுக்கும் பொருட்களின் தரமும், வேலையில் அவருடைய திறமையும் அந்த நிறுவனத்திற்கு மிகவும் நல்ல பெயரையும், மிகுந்த லாபத்தையும் பெற்றுத் தந்தது.
இந்நிலையில், அந்த இன்ஜினீயர் நிறுவனத்தின் முதலாளியைச் சந்தித்துத் தான் வேலையிலிருந்து ஓய்வெடுத்துக்கொள்ள விரும்புவதாகக் கூறினார். ஆனால் அவரை விடுவதற்கு மனமில்லாத முதலாளி பலவகையில் மனதை மாற்ற முயன்றும் அந்த இன்ஜினீயர் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.
இனி இவர் மனதை மாற்ற முடியாது என்று தெரிந்துகொண்ட முதலாளி என்ஜினீயரிடம், சரி பரவாயில்லை கடைசியாக ஒரே ஒரு வீடு மட்டும் கட்டிக்கொடுங்கள் என்றார்.
ஓய்வெடுக்க முடிவு செய்த பின்னர் இதை மட்டும் செய்துவிட்டுச்செல் என்று முதலாளி கூறுவதைக் கேட்ட இன்ஜினீயருக்கு மிகவும் சலிப்பாக இருந்தது. இருந்தாலும் முதலாளியின் வார்த்தையை மறுக்க முடியாமல் வேறுவழியின்றி ஒத்துக்கொண்டார்.
ஆனால், அவரால் பொருட்களைத் தேர்வு செய்வதிலும், வீட்டின் வடிவமைப்பிலும் சரியாகக் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே தரையில் பதிக்கும் கல், மரவேலை, வர்ணம் என்று எதிலும் அவர் முன்புபோல அக்கறை செலுத்தவில்லை. எப்படியோ ஒருவழியாக அந்த வீட்டு வேலைகள் எல்லாம் முடிந்த பின்னர், அந்த வீட்டின் சாவியை நிறுவனத்தின் முதலாளியிடம் கொடுத்தார்.
அப்போது அந்த முதலாளி சிரித்தபடியே இன்ஜினீயரைப் பார்த்து, இதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், இத்தனை வருடங்களாக இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பொறுப்பாக உழைத்த உங்களுக்கு என்னுடைய பரிசு என்று கூறியபடியே அந்த வீட்டின் சாவியை இன்ஜினீயரின் கையில் மகிழ்ச்சியோடு கொடுத்தார்.
நிறுவனம் தன் மீது வைத்திருக்கும் அன்பையும் மரியாதையையும் கண்டு இன்ஜினீயருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஆனால், தான் சரியாக கவனம் செலுத்தாமல் சலிப்போடு செய்த வேலையே தனக்குப் பரிசாக வந்ததை நினைத்து வருத்தமாகவும் இருந்தது.
வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில், பலவகையான சூழ்நிலைகளை சந்திக்கிறோம். அவ்வாறு சந்திக்கும் சூழ்நிலைகளில், எதிர்கொள்ளும் வாய்ப்புகளில், தேர்ந்தெடுத்த சில வாய்ப்புகள் இயற்கையின் முக்கியமான சர்ப்ரைஸ் பரிசுகளாக அமைகின்றன.
எனவே, ‘வாழ்க்கையின் பொறுப்புகளிலும், கடமைகளிலும் எல்லா சூழ்நிலைகளிலும் நம்மால் இயன்ற அளவு முழுமையான அக்கறையோடு உண்மையாகச் செயல்படும் குணமே நமக்கு நிரந்தரமான மகிழ்ச்சியைப் பரிசளிக்கும்’ என உணர்த்தும் சிறிய கதை.
# நன்றி.