மனவளமே மதிப்பை உயர்த்தும்:
ஓர் ஊரில் வாழ்ந்த குரு, அவருடைய சீடர்களிடம், “குருகுலத்தில், மாணவப் பருவம் முடிந்த பின்னர், உலக வாழ்க்கைக்காக வேலை, குடும்பம் என்று வாழ்வது கடமை. அதைச் செய்துகொண்டே, நம்முடைய மனதின் தகுதிகளான நல்ல பண்புகளை நாள்தோறும் வளர்த்துக்கொள்வதும், அவற்றைப் பின்பற்றுவதும்தான் உண்மையான மதிப்பை உயர்த்தும்”, என்று கூறினார்.
குரு சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த சீடர்கள், “அவ்வாறு எதற்காக செய்ய வேண்டும். நல்ல குடும்பம், வளமான பொருளாதாரம் போன்றவை இருந்தாலே மரியாதைக் கிடைத்துவிடுகிறதே!”, என்று கேட்டார்கள்.
அப்போது குரு, “நல்ல குடும்பம், வளமான பொருளாதாரம் ஆகியவற்றால் கிடைக்கும் பொதுவான மரியாதை நிலையற்றது. ஆனால், தனிப்பட்ட மனிதரின் மாறாத பண்பும், நல்ல குணநலன்களும், அவருடைய நிலையான தகுதிகளாக எந்நிலையிலும் உயர்ந்து நிற்கும். இதனால் ஏற்படும் மனநிறைவே அந்தத் தனிப்பட்ட நபரின் உண்மையான சுயமதிப்பு ஆகும்”, என்று கூறினார்.
குரு கூறும் கருத்தின் ஆழம் புரியாமல் சற்றுக் குழப்பமாகப் பார்த்த சீடர்களிடம், அவர்களுக்கு விளங்கும் வகையில் செய்முறையாக விளக்க வேண்டும் என்று குரு நினைத்தார். எனவே, நன்கு வளர்ந்த ஒரு மரத்தின், ஒரு கிளையின் சிறிய பாகத்தை எடுத்து, அதை நன்கு பளபளப்பாக இழைத்து இந்த மரத்துண்டு சந்தையில் என்ன விலைக்கு விற்கமுடியும் என்று விசாரித்து வரச்சொன்னார்.
காலையில் சந்தைக்குச் சென்ற சீடர்கள் மாலையில் மிகவும் சோர்வாகத் திரும்பி வந்தார்கள். அவர்களை விசாரித்த குருவிடம், “நீங்கள் கொடுத்த மரத்துண்டு மணம் வீசும் சந்தனமோ, மருத்துவ குணமுள்ள மூலிகையோ இல்லாத பட்சத்தில், இந்தச் சாதாரண மரத்துண்டை யாரும் விலைகொடுத்து வாங்க தயாராக இல்லை என்று சீடர்கள் அதிருப்தியாகப் பேசினார்கள்.
குரு புன்னகையோடு அவர்களைப் பார்த்து, “மணம் தரும் சந்தனம், மருத்துவ குணம் கொண்ட மூலிகையைப்போல, உலக மக்களுக்காக தன்னையே தருகின்ற பெரிய தகுதியான குணங்களை இயற்கையிலேயே பெற்ற மதிப்பு மிக்கவர்களும் உண்டு. இத்தகையவர்கள் எங்கே எப்படி இருந்தாலும் இவர்களுடைய மதிப்பு இயல்பாகவே உயர்ந்து இருக்கும்.
ஆனால் இந்தச் சாதாரண மரத்துண்டைப் போல இருக்கும் நம்மைப் போன்றவர்கள் நம்முடைய தகுதிகளை எந்த அளவுக்கு உயர்த்துகிறோமோ அந்த அளவுக்கு உண்மையான மதிப்பைப் பெறுவோம்”, என்று கூறினார்.
இதைக் கேட்ட சீடர்கள், அப்படியானால் இந்த மரத்துண்டின் மதிப்பையும் உயர்த்த முடியுமா? என்று கேட்டார்கள். “நிச்சயமாக உயர்த்த முடியும். அதற்கான எண்ணமும் உழைப்பும் இருந்தால், அதற்கேற்ற மதிப்பைப் பெற முடியும். இதையும் நீங்கள் தொடர்ந்து வரும் செய்முறையில் காணலாம்” என்று குரு கூறினார்.
சாதாரண மரத்துண்டாக இருந்ததை அழகான பறவை பொம்மையாக மாற்றிய குரு, அதை மறுநாள் காலை சீடர்களிடம் கொடுத்து, அதன் மதிப்பைத் தெரிந்து வரச்சொன்னார்.
குரு கூறியது போல அந்தப் பொம்மையை எடுத்துக்கொண்டு சந்தைக்குச் சென்ற சீடர்கள் முன்புபோலவே மாலையில் மிகவும் சோர்வாகத் திரும்பி வந்தார்கள். “சந்தைக்கு வந்தவர்கள், அதிகபட்சமாக இருபது ரூபாய்க்கு மட்டுமே கேட்டார்கள் என்று கூறினார்கள்.
மூன்றாவது நாளாக சீடர்களிடம் பொம்மையைக் கொடுத்த குரு, “இந்தப் பொம்மையின் மேல் அழுத்தினால் பறவையின் சத்தம் வரும்”, என்று கூறினார். உடனே மாணவர்கள் உற்சாகம் அடைந்து பொம்மையின் மேல் இருந்த சிறிய விசையை அழுத்திப் பார்த்தார்கள். பொம்மையில் சத்தம் வந்தவுடன் அதை எடுத்துக்கொண்டு சந்தோஷமாகச் சந்தைக்குப் போனார்கள். மாலையில் திரும்பிவந்த சீடர்கள், “சத்தம் எழுப்பும் இந்தப் பொம்மையை அதிகபட்சமாக ஐம்பது ரூபாய்க்குக் கேட்டார்கள்”, என்று கூறினார்கள்.
அடுத்த நாளும் சீடர்களைச் சந்தைக்குச் சென்று வரச்சொல்லி அந்தப் பொம்மையைக் கொடுத்தார் குரு. இதற்கு மேல் இதை என்ன செய்திருக்க முடியும் என்ற ஆவலோடு சீடர்கள் பொம்மையைப் பார்த்தார்கள். அந்தப் பொம்மையின் மேல் புதிதாகப் பொறுத்தப்பட்டிருந்த வளையத்தை இழுத்தவுடன், பக்கவாட்டில் சிறகுகள் விரிந்தன, பறவையின் சத்தமும் வந்தது.
இதைப் பார்த்த சீடர்கள் உற்சாகத்தோடு சந்தைக்குச் சென்றார்கள். “சிறகுகளை விரித்துச் சத்தமிடும் இந்தக் பறவை பொம்மையை நூறு ரூபாய்க்குக் கேட்டார்கள்”, என்று மகிழ்ச்சியாகக் கூறியபடியே மாலையில் திரும்பி வந்தார்கள்.
அப்போது அவர்களை அருகில் அழைத்த குரு, “இப்போது இதை, நூறு ரூபாய்க்கும் அதிகமான மதிப்புப் பெறுவதற்கு ஏற்றபடி நீங்கள் ஐவரும் சேர்ந்து தயார் செய்து, நாளை மறுநாள் சந்தையில் அதன் மதிப்பைத் தெரிந்து வாருங்கள் என்றார்.
சீடர்களும், இந்தப் பொம்மையை என்ன செய்து இதன் மதிப்பை உயர்த்தலாம் என்று இரவெல்லாம் யோசித்தார்கள். பின்னர் அனைவரும் சேர்ந்து பொம்மைக்குச் சிறப்பாக வண்ணம் தீட்டுவது என்று முடிவெடுத்து அதே போல செய்து முடித்தார்கள். மறுநாள் சந்தைக்குச் சென்று அந்தப் பொம்மையின் மதிப்பு நூற்றி ஐம்பது ரூபாய் என்று தெரிந்தவுடன் மிகவும் மகிழ்ச்சியாகத் திரும்பி வந்தார்கள்.
சீடர்களின் மகிழ்ச்சியைக் கண்ட குரு, அவர்களின் உழைப்பைப் பாராட்டினார். பின்னர் அவர்களிடம், “ஒரு சாதாரண மரத்துண்டு, பறவை பொம்மையாக மாறி, சிறகை விரித்து, ஒலியெழுப்பும், வண்ணமயமானதாக மாற்றி, அதன் தகுதியைப் படிப்படியாக உயர்த்தும்போது, அதனுடைய மதிப்பும் தகுதிக்கேற்றபடி உயர்ந்துகொண்டே இருந்ததைக் கவனித்தீர்களா?”.
“அதுபோலவே நாமும் உயர்ந்த கொள்கைகளின் அடிப்படையில், மனதின் தகுதியைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளும் நிலையில் நம்முடைய உண்மையான மதிப்பும் உயரும். இதுவே தனிநபரின் சிறப்புக் குணங்களுக்குக் கிடைக்கும் உண்மையான சுயமதிப்பாகும்”.
“இவ்வாறு, வாழ்நாள் முழுவதுமே நம்முடைய மனதின் தகுதியை வளர்த்துகொண்டே இருப்பதுதான் மரியாதைக்கு உரிய வாழ்க்கையாகும்”
“இத்தகைய சுயமதிப்பு உள்ளவர்கள் குடும்பம், பொருளாதாரம் என்ற எல்லைகளைக் கடந்தவர்களாக நிலையான நம்பிக்கையோடு மதிக்கப்படுகிறார்கள்”, என்று கூறிய குரு, சீடர்களின் மனதில் நல்ல பண்புகளை விதைக்கும் பணியைத் தொடர்ந்தார்.
# நன்றி.