எண்ணங்கள்:
பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டிகளில் கலந்துகொள்ள பல்வேறு ஊர்களிலிருந்து மாணவர்கள் வந்திருந்தார்கள். அவர்களுள் ஒரு மாணவன், அன்று நடந்த போட்டியில் தன்னுடைய அணியின் தோல்விக்குத் தானே முக்கியக் காரணம் என்று தன் நண்பர்களிடம் கூறி மிகவும் வருத்தப்பட்டான்.
அவனுக்கு ஆறுதலாக நண்பர்கள் கூறிய வார்த்தைகள் அவனுடைய வருத்தத்தைப் போக்கவில்லை. அப்போது எதிர் அணியில் இருந்த மாணவர்களின் பேச்சு அவனை மேலும் வேதனைக்கு உள்ளாக்கியது. இதைக் கவனித்துக்கொண்டிருந்த கோச், ஓய்வு நேரத்தில் அவன் மனநிலையைச் சரிசெய்வதற்கு அவன் தங்கியிருந்த அறைக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த ஒரு பலகையில்
I can’t do anything
Don’t tell me again
I have the ability to do
I know about me
என்று எழுதியிருந்தது.
இதைப் பார்த்த கோச் அந்த மாணவனின் மனநிலையை உணர்ந்து கொண்டார். பின்னர் அவனிடம், “இன்று நடந்தப் போட்டியில் நம்முடைய அணி தோற்றுப்போனதற்கு நீ காரணம் அல்ல” என்று கூறினார். இதைக்கேட்ட மாணவன் அவரை ஆச்சரியமாகப் பார்த்தான். அவரோ அந்தப் பலகையில் இருந்த வாக்கியங்களின் அருகில் 1,2,3,4 என எண்களை எழுதினார்.
4. I can’t do anything
3. Don’t tell me again
2. I have the ability to do
1. I know about me
முன்பு எழுதியிருந்த வாக்கியங்களில் எந்த வார்த்தையையும் நீக்கவும் இல்லை, சேர்க்கவும் இல்லை. ஆனாலும் இந்த வாக்கியங்களை முறைப்படுத்துவதில் உள்ள வேறுபாடு சிந்தனையின் தன்மையை மாற்றுகிறது என்பதை மாணவன் கவனித்தான்.
அதே வாக்கியங்கள் இப்போது
என்று நம்பிக்கையைத் தரும் வகையில் மாறியிருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த அவனிடம், “ஆமாம் தோல்விக்கு நீ காரணமல்ல, நீ தவறவிட்ட சில தருணங்களே காரணம். எனவே தோல்வியின் வலியை நீ சுமக்காமல், தவறுகள் மீது சுமத்திவிடு. இப்போது தோல்விக்குக் காரணமான அந்தத் தவறுகளை எச்சரிக்கையுடன் நீயே விலக்கிவிடுவாய். இதனால் மனத்தெளிவோடு நாளைய சூழலை நம்பிக்கையோடு எதிர்கொள்வாய்” என்றார்.
குற்ற உணர்ச்சியில் தவித்துக்கொண்டிருந்த மாணவனுக்கு, கோச் கூறிய வார்த்தைகளால் புத்துணர்ச்சி வந்தது. நம்முடைய செயல்கள் நம்மால் கையாளக்கூடியவைதான் என்ற நம்பிக்கையையும் தந்தது.
அப்போது அவர், “எதிர் அணியினர் ஏற்படுத்தும் தடைகளுக்கு இடையில்தான் உன் முன்னேற்றத்தின் வழி இருக்கிறது. அவர்கள் இல்லாவிட்டால் விளையாட்டில் சுவாரசியம் கிடையாது. எனவே, எப்போதும் தாக்குதலைத் தகர்ப்பதற்கு, நீ எப்படி செயலாற்ற வேண்டும் என்பதில் கவனம் வைத்துக்கொள்” என்றார்.
மேலும், “உன்னை மற்றவர்கள் கைவிட்டாலும், எந்நிலையிலும் நீ உன்னை கைவிடாதே. எப்போதும் நம்பிக்கையோடு இரு” என்று அவனை ஊக்கப்படுத்திய கோச் மறுநாள் போட்டிக்கு அவனைத் தயார் ஆகுமாறு கூறிச் சென்றார்.
மனத்தெளிவு பெற்ற அவன், மறுநாள் போட்டியில் சிறப்பாக விளையாடினான். அந்த மாணவன் தன் கோச்சிடமிருந்து கால்பந்தாட்டப் பயிற்சியும், குழுவாக இணைந்து செயல்படும் அணுகுமுறையை மேம்படுத்தும் பயிற்சியும் தொடர்ந்து பெற்றுக்கொண்டிருந்தான். சில நாட்களுக்குப் பின்னர், அவனுடைய அறைக்குச் சென்ற கோச் அங்கிருந்த அதே பலகையில்
I have the ability to play well
for the success of my team
என்று எழுதியிருப்பதைப் பார்த்தார். மாணவனின் மனம் நல்ல ஆரோக்கியமான நிலையில் இருப்பதால் இனிமேல் அவன் எந்தச் சூழலையும் எதிர்கொள்வான் என்ற நம்பிக்கை அவருக்கு உருவாகியது.
இதுபோலவே, ஒவ்வொரு சூழலிலும் மனதில் மோதும் எண்ண அலைகளை வரிசைப்படுத்தும்போது, முடியாது என்ற எதிர்மறையான நம்பிக்கைக் குழப்பத்தை ஏற்படுத்தலாம். அதையே சற்றுச் சிந்தித்து, முக்கியத்துவத்தின் அடிப்படியில் முன்பின்னாக மாற்றி, சரியாகத் திட்டமிட்டு, முடியும் என்ற நேர்மறையான நம்பிக்கையாக மாற்ற முடியும். இந்த நேர்மறையான நம்பிக்கையே மனதில் பதிவு செய்யப்பட்டு, செயல்களையும் நேர்மறையாக மாற்றும்.
கால்பந்து ஆட்டத்தில் எதிரணியில் யாரும் இல்லை என்றால் எல்லோராலும் சுலபமாகக் கோல் போடமுடியும். அவ்வாறு எதிர்ப்பில்லாத நிலையில் எத்தனை கோல் போட்டாலும் அது மகிழ்ச்சி தரும் வெற்றியாகுமா? எத்தனை இடையூறுகள் வந்தாலும் ஒரே குறிக்கோளாகப் பந்தைக் கோல்போஸ்ட் நோக்கி செலுத்துவதுபோல, தன்னம்பிக்கையோடு முயன்று செயலாற்றுபவர்கள் மகிழ்ச்சியோடு உயர்ந்த நிலையை அடைகிறார்கள்.
# நன்றி.