தன் வழியில் பொதுவழி படைத்தவர்:
வாழ்க்கை என்பது ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். ஆனால், தாகம் எடுப்பதே சோதனை என்றும், அதற்குத் தண்ணீர் குடிப்பதே சாதனை என்றும் வாழ்பவர்களும் இருக்கிறார்கள் என்பது நாம் பெரும்பாலும் மறந்து விடுகின்ற உண்மை.
பீஹாரில் கெஹலூர் என்ற கிராமத்தில் குடிப்பதற்கு மட்டுமல்ல மற்ற எந்தத் தேவைகளுக்கும் தண்ணீர் கிடையாது. இதனால் அந்த ஊர் மக்களும், சுற்றியுள்ள கிராமத்தில் உள்ளவர்களும் வசீர்கான்ச் எனும் நகரத்திற்குச் சென்றுதான் தண்ணீர் கொண்டுவருவார்கள்.
நம்நாட்டில் பல ஊர்களில் இதே நிலைதான் என்றாலும், குறிப்பிட்ட இந்த ஊர் மக்கள் வசீர்கான்ச் செல்வதற்குக் குறுக்கே இருக்கும் 300அடி உயர மலையில் ஏறி இறங்க வேண்டும் அல்லது அந்த மலையைச் சுற்றி 75 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும் என்ற கடினமான நிலை இருந்தது.
எனவே, காலையில் சென்றவர்கள் இரவுதான் தண்ணீர் கொண்டுவர முடியும் என்ற நிலையில் தாகத்திற்குத் தண்ணீர் குடிப்பது என்பதே சாதனைதானே! அதுமட்டும் அல்லாமல் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ உதவி போன்ற அடிப்படை தேவைகள் அனைத்திற்கும் மிகவும் சிரமப்பட்டு நீண்ட பயணம் செய்துதான் நகரத்திற்குச் சென்று வந்தார்கள்.
இத்தகைய நிலையில் இருந்த கெஹலூர் கிராமத்தில் வாழ்ந்துவந்த தசரத் மாஞ்சே என்பவர் வசீர்கான்ச்சில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது வழக்கமாக மதிய உணவு கொண்டுவரும் தசரத் மாஞ்சேவின் மனைவி பல்குனி தேவி, ஒருநாள் மதியம் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. பசியோடு வேலை செய்துகொண்டிருந்த தசரத் மாஞ்சே, தன் மனைவி மலையிலிருந்து இறங்கும்போது தவறி விழுந்து உடல் முழுதும் காயத்தோடு வருவதைக் கண்டதும் அதிர்ந்து விட்டார்.
அதன் பின்னர், சில நாட்களில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பல்குனி தேவிக்குச் சிகிச்சை செய்வதற்காக, அந்த மலையை ஏறி இறங்கி மருத்துவமனைக்குச் சென்றும்கூட அது பயனில்லாமல் போய்விட்டது.
ஒரு மருத்துவ அவசரத்திற்குக்கூட சரியான போக்குவரத்து இல்லாமல் தன் மனைவியை இழந்த தசரத் மாஞ்சே, தன்னுடைய ஊர் மக்களும் சுற்றியுள்ள மற்ற ஊர் மக்களும் நகரம் செல்வதற்குத் தடையாக இருக்கும் அந்த மலையைத் தகர்க்க வேண்டும் என்று உறுதியாக நினைத்தார்.
தனக்குச் சோதனையான நேரத்திலும் அந்தச் சோகத்தில் மூழ்கி விடாமல் தன்னைப்போல் வேறு எவரும் பாதிக்கப்படக் கூடாது என்று நினைத்தார். எனவே, கிராம மக்களின் அடிப்படை தேவைகளான தண்ணீர், கல்வி, மருத்துவம், வேலை போன்றவை கிடைப்பதற்கு ஏற்ற வகையில் மலையை உடைத்து நல்ல பாதை அமைக்க வேண்டும் என்று மனதில் வைராக்கியம் கொண்டார். அதை நிறைவேற்றுவதையே தன் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டார். இதற்காக அயராமல் உழைப்பதையே தன் வாழ்க்கையின் இலட்சியம் என்று நினைத்து இரவும்பகலும் உறுதியாக பாடுபட்டார்.
அவர் தன் மனைவியின் மேல் கொண்டிருந்த மாறாஅன்பும், அவரை இழந்ததனால் ஏற்பட்ட கோபமும், அத்தகையத் துன்பம் தன்னுடைய மக்களுக்கு நிகழாமல் நன்றாக இருக்க வேண்டும் என்ற பேரன்பும் ஒன்றுசேர்ந்து பெரும்சக்தியாக அவருக்குள் உருவெடுத்தது. அந்த மாவீரனின் மலையளவு மன ஆற்றலுக்கு முன்னால் மாமலையும் கடுகுபோல் தூள்தூளாகியது.
தொடக்கத்தில், கையில் சுத்தியலுடன் மலையை உடைத்துக் கொண்டிருந்தவரை பார்த்த மக்கள், சோகத்தில் அவருக்குப் பையித்தியம் பிடித்துவிட்டது என்று கூறினார்கள். ஆனால் தசரத் மாஞ்சே தனது சோதனையில் கரைந்து விடாமல், அதையே தன்னுடைய கிராமத்துக்கும், அதைச் சுற்றியுள்ள மற்ற கிராமங்களுக்கும் விமோசனம் கிடைக்கும் வகையில் சாதனையாக மாற்றி இருக்கிறார்.
விடாமுயற்சியோடு குறிக்கோளுக்காகத் தொடர்ந்து பாடுபட்டு, இருபத்தி இரண்டு ஆண்டுகள் கடினமாக உழைத்து, தடையாக இருந்த மலையைத் தகர்த்தார். இதனால் இரண்டு ஊர்களையும் இணைக்கும் தூரத்தை 75கிலோமீட்டர் அளவிலிருந்து மூன்று கிலோமீட்டர் அளவுக்குக் குறைத்துக் கிராமத்திற்கான போக்குவரத்துப் பாதையைத் தனிமனிதனாக உருவாக்கினார்.
மனவுறுதி இருந்தால் மலையளவுத் தடையையும் தகர்த்துவிடலாம் என்று உலகிற்கு எடுத்துக்காட்டிய இவர், எத்தகைய கடினமான சவால்களாக இருந்தாலும் அவற்றைத் தகர்க்க, விடாமுயற்சியும், அயராதப் போராட்டமும் அவசியம் என்று உடைத்துச் சொன்னவர்.
பல்வேறு இன்னல்களைக் கடந்து, சரித்திரம் படைத்த இந்தச் சாமான்யருடையச் செயலை அறிந்த மாநில அரசு, அவரை அழைத்து முதலமைச்சர் நாற்காலியில் (சில நிமிடங்கள்!) அமர வைத்து மரியாதை செய்தது. கிராமத்தின் அத்தகைய நிலையை அதுவரை தெரிந்துகொள்ளாமல் இருந்ததற்கு வருந்துவதாகக் கூறியது. அவருக்கு Mountain man of India என்ற விருது கொடுத்து, அவர் முகம் பதித்த தபால்தலையை வெளியிட்டுக் கவுரவித்து ஆறுதல் தேடியது.
தசரத் மாஞ்சேவின் வாழ்க்கையை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டத் திரைப்படம் அவருடைய கடுமையான விடாமுயற்சியை உலகமக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பாக இருக்கிறது.
தனக்கு ஏற்பட்ட வலியைச் செயலாற்றும் சக்தியாக மாற்றி, பொதுநலன் கருதி உழைத்து, ஊருக்கே வழி அமைத்த தசரத் மாஞ்சே, விடாமுயற்சிக்கும், கடின உழைப்புக்கும் சிறந்த உதாரணமாக இருக்கிறார்.
பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில், கண்ணுக்குத் தெரியாத பயம், தயக்கம், சோம்பல், சுயநலம், சுயபரிதாபம், கோபம், அலட்சியம், பொறுமையின்மை போன்ற ஏதாவது ஒரு மலை தடையாக இருக்கலாம்.
முன்னேற்றத்தைத் தடுக்கும் அத்தகைய மலையைச் சரியாகக் கண்டறிந்து, அதைத் தொடர்ந்து உடைப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலநேரம் ஆகலாம். அத்தகைய காலகட்டத்தில் விடாமுயற்சியோடு செய்யும் முன்னெடுப்புகள் யாவும், முன்னேற்றம் என்ற வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும் பாதைகளாகவே இருக்கும்.
# நன்றி.