ஐஸ்க்ரீம் கோன்.
இத்தாலியைச் சேர்ந்த Italo Marchiony என்பவர் ஒரு ஐஸ்க்ரீம் வியாபாரி. இவர் சிறிய கண்ணாடி கோப்பைகளில் ஐஸ்கிரீம் நிரப்பி விற்பனை செய்து வந்தார். அந்த ஐஸ்கிரீம் கோப்பைகளை அவ்வப்போது சுத்தம் செய்வதும், சிலசமயங்களில் அவை உடைந்து விடுவதும் அவருடைய வியாபாரத்திற்குப் பெரிய பிரச்சனையாக இருந்தது.
அத்தகைய சமயங்களில் ஐஸ்கிரீம் கடைக்கு அருகில் waffles என்ற ஒருவகை அப்பளம் விற்றுக்கொண்டிருந்த Ernest Hamwi என்பவர் தன்னிடமிருக்கும் அப்பளத்தைக் கூம்பு வடிவத்தில் (பொட்டலம் போல) சுருட்டிக் கொடுப்பார். அதில் ஐஸ்கிரீம் நிறைத்துக் கொடுக்கும்போது சில வினாடிகளில் அந்த அப்பளம் குளிர்ந்து அதையும் சேர்த்து உண்ணும் வகையில் இருந்தது.
கண்ணாடி கோப்பையினால் ஏற்படும் பிரச்னைக்குத் தீர்வு கண்டுபிடித்த இவர்கள், waffles கோன் மேலும் சுவையாக இருக்கும் வகையில் தயாரித்து, கோன் ஐஸ்க்ரீம் என்ற புதுமையை அறிமுகப்படுத்தினார்கள். இதனால் ஐஸ்க்ரீம் வாங்குபவர்கள் ஒரேநேரத்தில் கூடுதல் எண்ணிக்கையில் வந்தாலும் அவர்களை எளிதில் கையாள முடிந்தது.
மேலும், கண்ணாடி கோப்பைகளைச் சுத்தம் செய்வது, அவை உடைவதனால் ஏற்படும் இழப்பு, உடைந்தவற்றை அப்புறப்படுத்துவது என்ற பிரச்சனைகளும் தீர்ந்துவிட்டன. மாற்றுச் சிந்தனையால் பிறந்த கோன்ஐஸ்க்ரீம் என்ற புதிய கண்டுபிடிப்பு வெற்றிகரமான வியாபாரத்திற்குப் புதிய வழியாகப் பிறந்தது.
கூல் காப்பி, ஐஸ் டி:
கோடைக்காலங்களில் அனைவரும் குளிர்ச்சியான பானங்களையே நாடி அவற்றை விரும்பி அருந்துவது இயற்கை. எனவே சூடான காபியும், டீயும் கவனிப்பார் யாருமின்றி இருந்தன. இதைக் கண்ட நல்ல சிந்தனையாளர் காபியும், டீயும் சூடாகத்தான் அருந்த முடியும் என்ற எண்ணத்தை முற்றிலும் மாற்ற நினைத்தார்.
இதனால் சூடான காபிக்கும் டீக்கும் மாற்றுவழியாக கூல் காபி மற்றும் ஐஸ் டீ என்று உருவாக்கினார். இவருடைய புதுமையான முயற்சியால் காபியும் டீயும் மட்டுமல்ல அதை விற்பவர்களும் எக்காலமும் கூலாக வாழ வழி பிறந்தது.
ஜீன்ஸ்:
வெளிநாட்டில் சுரங்கங்களில் வேலை செய்பவர்களுக்காக, அவர்களின் கடின உழைப்பைத் தாங்கும் வகையில் வன்மையாகத் தயாரிக்கப்பட்ட உடையே ஜீன்ஸ். இதன் பராமரிப்பு மிக எளிது என்பதால் உலகம் முழுவதும் இந்த உடை வாங்கப்பட்டு அனைவராலும் விரும்பி அணியப்பட்டது. மக்களுக்கு ஜீன்ஸ் உடையின் மேல் ஏற்பட்ட மோகம் அதன் விற்பனையை அமோகமாக உயர்த்தியது.
வாங்கிய உடை எந்தப் பழுதும் இல்லாமல் நீண்ட காலம் உழைத்ததால் இதுவே நாளடைவில் விற்பனைக்குப் பிரச்சனையாக மாறியது. எனவே, மீண்டும் அனைவரும் தொடர்ந்து ஜீன்ஸ் வாங்க வேண்டும் என்பதற்காக மக்களை கவரும் வகையில் புதிய வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டன. அடிக்கடி மாற்றப்பட்ட வடிவமைப்புகள் புத்தம்புது மாடலாகத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டன.
அத்தகைய சிறப்பான வடிவமைப்புகளில் ஒன்றுதான் கிழியாத துணியில் கிழிக்கப்பட்ட உடை. இந்தக் கண்டுபிடிப்பு ஜீன்ஸ் விற்பனைக்கு மட்டுமல்ல புதுமையை விரும்புபவர்களின் நவநாகரிகத்தை வெளிக்காட்டும் புதிய வழியாகவும் பிறந்திருக்கிறது.
புதிய வழிகள்:
இப்படி நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருளும் புதிய சிந்தனையாகவோ, ஏதோ ஒரு பிரச்னைக்குப் தீர்வாகவோ, யாரோ ஒருவரின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் சிறந்த முயற்சியாகவோ இருக்கலாம்.
இன்னும் கண்டுபிடிக்கப்பட வேண்டிய பல பொருட்களும், புதிய வழிகளும், முன்னேற்றத்தை வரவேற்கும் நம் தேடல்களை எதிர்பார்த்தே காத்திருக்கின்றன. பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் உள்ள சரியான சிந்தனைகளே தெளிவான பாதைகளைக் காட்டுகின்றன.
வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ நினைப்பவர்கள், அதற்கு இடையூறாக இருக்கும் பிரச்சனையை முதலில் சரியாக அடையாளம் காண்கிறார்கள். பின்னர் அதற்கான தீர்வுகளுள் பொருத்தமான ஒன்றை தேர்ந்தெடுத்து, முறையாகச் செயல்படுத்துகிறார்கள்.
கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்ப்பவர் விருப்பத்திற்கு ஏற்றபடி தன்னை திருத்திக்கொள்வாரே தவிர பிம்பத்தைக் குறைகூறுவது அறிவுடைமை ஆகாது. சில சமயங்களில் திருத்தம் செய்யமுடியாத நிலையான அமைப்புகளை அப்படியே ஏற்றுக்கொண்டு நம்பிக்கையோடு நடைபோடுவதும் வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஏற்ற வழியாக இருக்கும்.
தொடர்ந்து நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நம்பிக்கையோடு ஒரு காலைத் தூக்கி முன்னோக்கி நகர்த்தி தரையில் வைப்பதை மாற்றி மாற்றி தொடர்ச்சியாகச் செய்துகொண்டே இருக்கிறார்கள்.
வாழ்க்கையை முழுமையாக வாழ நினைப்பவர்களின் எண்ணங்கள் நேர்மையாக இயங்கும் நிலையில், தொடர்ந்து செய்யப்படும் துணிச்சலான முயற்சிகள் அனைத்தும் வெற்றிக்கான வழிகளாகப் பிறக்கின்றன.
# நன்றி.
.