1837ல் இங்கிலாந்தில் பிறந்த ராபர்ட் (Robert Augustus Chesebrough) தன் இளவயதில் எண்ணெய் பிரித்தெடுக்கும் வேதியியல் துறையில் பணி செய்துகொண்டிருந்தார். கெரசின் என்ற எரிபொருளைச் சுத்தம் செய்யும் வேலை செய்துகொண்டிருந்த ராபர்ட் அப்பணியைச் சில காரணங்களால் இழக்க நேரிட்டது.
அப்போது, பெட்ரோலியம் என்ற புதிய எரிபொருள் எண்ணெய் அறிமுகம் செய்யப்பட்டுப் பிரபலமாக இருந்தது. எனவே, அந்தப் பெட்ரோலியக் கிணறு எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள நினைத்த ராபர்ட் தன் சேமிப்பு மொத்தமும் திரட்டிக்கொண்டு, தாய் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் அமெரிக்காவில் குடியேறினார். பின்னர் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள எண்ணெய் சுரங்கத்தில் பணிக்குச் சேர்ந்தார்.
அங்கு, பெட்ரோலியம் எண்ணெய் பிரித்தெடுக்கும்போது உபப்பொருளாக வெளிவரும் ஜெல்லியைக் கழிவு என்ற நிலையில் பிரித்து அதை வெளியே கொட்டிக்கொண்டிருந்தனர்.
சுரங்கத்தில் இருந்தவர்கள் எப்போதேனும் அந்த ஜெல்லியைத் தோலில் ஏற்படும் காயங்களுக்கும், புண்களுக்கும் மேற்பூச்சாக தடவிக்கொண்டார்கள். ஆனாலும் பெருமளவில் வரும் ஜெல்லியை வீண்கழிவு என்றே அனைவரும் நினைத்தார்கள்.
இதைக் கவனித்த ராபர்ட் உடனே தன்னுடைய காயங்களுக்கும், வெடிப்புகளுக்கும் அந்த ஜெல்லியைப் பயன்படுத்திப் பார்த்தார். கழிவுப்பொருளாக வீணாகும் ஜெல்லியில் காயங்களை ஆற்றும் மருத்தவத் தன்மை இருப்பதாக நினைத்தார்.
எனவே, கரிய நிறத்தில் ஒருவித வாடையுடன் இருந்த ஜெல்லியை, சுமார் பத்து ஆண்டுகள் கவனமாகச் செயல்பட்டு நிறமற்ற, மணமற்ற களிம்பாக மாற்றினார். தனது அயராத முயற்சியில் உருவான தூய்மையான அந்த ஜெல்லிக்கு வாசலின் என்று பெயரிட்டார்.
பின்னர் அந்த வாசலினை சிறிய டப்பாக்களில் அடைத்து, மாதிரி முயற்சியாக மருந்தகங்களில் விலை இல்லாமல் கொடுத்தார். இதை வாங்க மறுத்தவர்களிடம் தானே தனக்கு ஏற்படுத்திய காயங்களுக்கு வாசலினை தடவி விரைவில் குணமாவதை ஆதாரமாகக் காட்டினார்.
ராபர்ட் கண்டுபிடித்த வாசலினை காயங்களின் மேல் தடவியதும், அது சுற்றுப்புறத்தில் இருக்கும் கிருமிகளும், தூசுகளும் புண்களின் மேல் படாமல் இதமான பாதுகாப்புத் தருவதால் காயங்கள் விரைவில் குணமடைந்தன.
இதை வெற்றியின் தொடக்கமாக நினைத்துச் செயல்பட்ட ராபர்டின் மிகப்பெரிய முயற்சிக்குப் பிறகு வாசலின் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வாசலின் கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை பெற்ற ராபர்ட் அதை உலகமெங்கும் விற்பனை செய்யும் வகையில் பெரிய அளவில் விளம்பரப்படுத்தினார்.
கழிவு என்று நினைத்து வீணாக்கப்பட்ட பெட்ரோலியம் ஜெல்லிக்குள் நல்ல வாய்ப்பு ஒளிந்திருப்பதைக் கண்டுபிடித்த, ராபர்டின் அயராத முயற்சியே அவருக்கு மிகப்பெரிய செல்வத்தை அள்ளித் தந்தது. பின்னாளில் தவிர்க்க முடியாத வேதிப்பொருளாக மாறிய பெட்ரோலியம் ஜெல்லி இன்றும் பல்வேறு பொருட்களின் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
சாதனையாளர்கள் என்ற அடையாளத்தோடு தனியே எவரும் பிறப்பதில்லை, எதிர்மறையான சூழ்நிலையிலும் விழிப்போடு இருந்து, அதில் ஒளிந்துள்ள புதிய வாய்ப்புகளை நேர்மறையாகக் கூர்ந்து கவனித்துத் துணிச்சலோடு செயல்படுபவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பதற்கு ராபர்ட் ஒரு சிறந்த உதாரணம்.
# நன்றி.