👍எண்ணம்போல் வாழ்வு என்பது உண்மையா? Ennampol Vaazhvu Enbathu Unmaiya? Is It True Life Is As Thought?

எண்ணம்:

உலகத்தில் பெரும்பாலான மக்கள் தங்கள் நிலையிலிருந்து மேலும் முன்னேறவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் மிகக் கடினமாக உழைக்கிறார்கள்.  இருந்தாலும் எண்ணியது போன்ற முன்னேற்றத்தை எல்லோராலும் பெறமுடிவதில்லையே, இதற்கு என்ன காரணம்?  

மேலும், குறிக்கோளை நோக்கி உழைப்பதில் அவர்களுக்குள் பெரிதாக எந்த வேறுபாடும் இல்லாவிட்டாலும்கூட, உழைப்புக்கு ஏற்ற வெற்றி என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகக் கிடைக்கிறது.  இந்த வேறுபாடு எதனால் ஏற்படுகிறது?  

முன்னேறுவதற்கான எண்ணம், கடின உழைப்பு போன்றவற்றில் எந்த வேறுபாடும் இல்லாத நிலையில் அவர்களிடம் காணப்படும் சிந்தனையின் மாறுபாடுகள்தான், எதிர்பார்க்கும் விளைவுகளில் வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  

மனதில் தோன்றும் ஒரு எண்ணத்தைச் செயல்படுத்தும் திறனுள்ள சிந்தனைகள் வெற்றியை நோக்கி எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்று இன்றைய பதிவில் காண்போம்.    

சிந்தனைகள்:

* ஆழ்மனதில் தோன்றிய வலிமையான எண்ணத்தைச் சிந்தித்து, அதனுடைய விளைவுகளை ஆராய்ந்து, அவற்றில் உள்ள சாதக, பாதகங்களைச் சந்திக்க உண்மையாகவே தயாராக இருக்கிறோமா, அல்லது விளைவுகளை  நினைத்து அஞ்சுகிறோமா என்ற கேள்விக்கு உண்மையான விடையைக் கண்டறிதலே முதல்நிலையாகும். 

* ஒருவேளை விளைவுகளை எதிர்கொள்வதில் அச்சம், தயக்கம் ஏதேனும் இருந்தால், அதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை சரி செய்வது, தவிர்க்க முடியாதவற்றை ஏற்றுக்கொண்டு அவற்றை கையாளும் அளவுக்கு மனதை ஆரோக்கியமானதாக மாற்றுவது வெற்றியை நோக்கிய முதற்படியாகும்.   

* அதே நேரத்தில் திட்டமிட்டபடி  செயல்களை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என்ற நேர்மறையான அச்சம், எச்சரிக்கை உணர்வாகச் செயல்பட்டு அச்செயலைக் கவனமாக நிறைவேற்றும் பொறுப்புணர்ச்சியாக வெளிப்படும்.  

* எத்தகைய செயல்களுக்கு எத்தகைய விளைவுகள் ஏற்படும், அதன் பின்விளைவுகள் எவை என்பதை ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும்.  விளைவுகள் புதிதாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்குத் தேவையான புதிய மாற்றங்களை முதலில் நம்முடைய சிந்தனையில் கொண்டுவர வேண்டும்.  ஒருவருடைய சிந்தனையின் அமைப்பு எப்படி இயங்குகின்றது என்பதே அவருடைய வாழ்க்கையாக இயங்குகின்றது.

* நாம் எதிர்ப்பார்க்கும் வெற்றி, நம்முடைய உழைப்பையும் கடந்து நம்மிடம் சிலவற்றை எதிர்பார்க்கிறது.  அந்த எதிர்பார்ப்பு என்பது அணுகுமுறை, தொடர்புமொழி, உடல்மொழி, செயல்முறை போன்றவற்றில் மாற்றம் அல்லது முன்னேற்றமாக இருக்கலாம்.  

* புதிதாகத் தேவைப்படுகின்ற அல்லது மேம்படுத்த வேண்டிய புதிய மாற்றங்களைத் தொகுத்து, சிறப்பாகத் திட்டமிட்டு, புத்தம்புது செயல்திட்டத்தின் வரைபடமாக மூளையில் பதிவேற்றம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

* இது, ஒரு கட்டடம் கட்டுவதற்கு முன்பே உருவாக்கப்படும் blueprint வரைபடத்தைப்போல, நம்முடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற செயல்களைச் சரியாகத் திட்டமிடுவதற்கு உதவும்.  இவ்வாறு உருவாக்கப்பட்ட இந்த வரைபட அமைப்பை அப்படியே நடைமுறைபடுத்துவதற்கு ஏற்ற ஆற்றலோடு மூளையும் தயாராகிவிடும்.

* பெரும்பாலானவர்கள் இந்த வழிமுறைகளைச் சரியாகச் செய்திருந்தாலும், தங்கள் மூளையில் எப்போதோ உருவாக்கப்பட்ட blue printஐ  இன்றைய எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி மாற்றம் மற்றும் புதுப்பித்தல் (update & refresh) செய்யாததும்கூட குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

* ஏற்கனவே நிகழ்ந்த விளைவுகளுக்கான பழகிய செயல்முறையை, மேம்படுத்தாமல் அப்படியே பின்பற்றி இப்போது எவ்வளவு கடினமாக உழைத்தாலும் புதிய கட்டடத்தில் புதுமையை எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே ஏற்படுத்தும்.  

* பழைய அமைப்புகளை மூளையில் அப்படியே வைத்துக்கொண்டு, பழைய செயல்களை அப்படியே செய்துகொண்டு, விளைவுகள் மட்டும் புதியதாக வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி சாத்தியமாகும்? வாய்ப்புகளைப் புதிதாகக் கண்டறியும் புத்தம் புதிய சிந்தனைகளின் வரைபடமே புத்தம்புது விளைவுகளைச் சாத்தியப்படுத்தும்.

* இந்தப் புதிய விளைவு நாம் எதிர்பார்க்கும் வகையில் வெற்றியாக இருக்க வேண்டுமெனில், அந்த வெற்றிக்குத் தேவைப்படும் நம்முடைய தகுதிகளைத் தயக்கமில்லாமல் வளர்த்துக்கொள்ள வேண்டும்.  இது விதைக்கும் முன்பே நிலத்தைப் பக்குவப்படுத்துதல் போல மிகமிக முக்கியமானது.

* சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளில் நியாயமான மற்றும் நேர்மையான ஒழுங்கு முறையை மிகவும் விழிப்போடு நடைமுறைப்படுத்தும்போது அவற்றின் விளைவு நிச்சயம் நாம் எதிர்பார்க்கும் புதிய வெற்றியாக விளையும். 

*சிந்தனைகளின் செயல்திட்ட வரைபடம் வலிமையாக இருக்கும்போது அதன் அறிவுறுத்தல்களும் வலிமையாக இருக்கும்.  இதனால் வெளிப்படும் ஆற்றல் மிகுந்த செயல்பாடுகள் எதிர்பார்க்கும் விளைவை நோக்கி வேகமாக முன்னோக்கி இயக்கும்.  

* இந்தக் கட்டமைப்பு ஒவ்வொரு புதிய குறிக்கோளுக்கும், நாம் எதிர்பார்க்கும் புதிய விளைவுக்கும், வெற்றிக்கும் ஏற்றபடி அவ்வப்போது மாற்றி அமைக்கப்பட்டுத் தொடர்ந்து refresh செய்யவேண்டியது அவசியமானதாக இருக்கும். 

வெற்றி எனும் விளைவு:

* எண்ணத்தின் அடிப்படையில் உருவாகும் சிந்தனைகளை வலிமையாகக் கட்டமைத்து, அதில் உருவாகும் ஆற்றல் மிகுந்த சக்தியை முழுமையாகப் பயன்படுத்தி, செய்யப்படும் கடின உழைப்பே வளமான நிலத்தில் விதைக்கப்பட்ட திரட்சியான விதைபோல நிறைந்த பலனைத் தருகிறது.  

* எந்தச் செயலுக்கும் அடிப்படை கருவியான எண்ணம் உயர்வாக இருந்தால், அதைத் தெளிவான சிந்தனையால் வலிமையாக்கலாம்.  வெற்றிக்குக் காரணமாக இருக்கும் சிந்தனைகள் நேர்மையான வரைமுறைகளோடு இருக்கும்போது, விளைவுகள் நிச்சயம் நேர்மறையான பலன்களாக இருக்கும். 

* எதிர்பார்க்கும் புதிய விளைவை நோக்கி செயல்படுத்தும் சக்தியுள்ள புத்தம் புதிய  சிந்தனைகளின் வரைபடமே வெற்றியின் வழித்தடம் ஆகிறது. இந்த வழிமுறையில் ஒவ்வொரு நகர்வையும் விழிப்போடு அணுகும்போது எண்ணம்போல் வாழ்வு என்பது உண்மையில் சாத்தியமாகும். 

#  நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *