ஆளுமை தன்மைகள் (Personality Types):
பொதுவாக, மக்கள் இயங்குகின்ற இயல்பைப் பொறுத்து, அவர்கள் பழகும் தன்மையில் பதினாறு வகையான ஆளுமை தன்மைகள் உள்ளதாகக் கூறுகிறார்கள். இவற்றுள் இருக்கும் ஒற்றுமைகள் மற்றும் மாறுபாடுகளின் அடிப்படையில் இவை முக்கியமான நான்கு பிரிவுகளாக வேறுபடுத்துகின்றனர்.
1. உள்முகம் பழகும் தன்மை (Introvert), 2. வெளிமுகம் பழகும் தன்மை (Extrovert), 3. நடுநிலை பழகும் தன்மை (Ambivert), 4. இருநிலை எல்லைகளில் பழகும் தன்மை (Omnivert) என நான்கு விதமான ஆளுமை தன்மைகளாக வகைப்படுத்திக் கூறுகின்றனர். இந்தத் தன்மைகளைப் பற்றி ஆய்வுகள் கூறுகின்ற கருத்துகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
உள்முகம் பழகும் தன்மை (Introvert):
இந்தத் தன்மை உள்ளவர்கள் பெரும்பாலும் குறைவாகப் பேசும் இயல்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதனால் இவர்களுடைய நட்பு வட்டமும் குறைவாகவே இருக்கிறது. ஆனால், தேர்ந்தெடுத்துப் பழகுகின்ற ஒருசில நண்பர்களிடம் ஆழமான நட்பைக் கொண்டிருப்பார்கள் என்று கூறுகிறார்கள்.
வெளிஉலகத்தில் இருக்கும் மிகுதியான இரைச்சலில் இவர்களுடைய சத்தம் அதிகம் கேட்பதில்லை. ஆனால் இவர்கள், மற்றவர்கள் பேசுவதை நுட்பமாகவும், சூழ்நிலைகளைக் கூர்ந்து கவனிக்கும் இயல்பும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
சிக்கலான சூழ்நிலைகளைச் சந்திக்கும்போது தங்களுக்குள் சிந்தித்து, உள்ளுணர்வின் வழியில் செயல்படும் இவர்கள், மனதோடு நெருக்கமான தொடர்பு உடையவர்களாக இருக்கின்றனர்.
புத்தகம் படிப்பது, ஓவியம் வரைவது போன்ற தற்சார்பு பழக்கங்களைக் கொண்டிருப்பதால் தனியாக இருக்கும் சூழ்நிலைகளிலும் தனிமையை உணர்வதில்லை. தங்களது நிறை குறைகளைத் தாங்களே அறிந்து ஒழுங்குபடுத்திக்கொள்வது, எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் தங்களுக்குள் அலசி ஆராய்வது என, இவர்கள் ஆழ்ந்த சிந்தனைகளின் துணையோடு அமைதியாக வெளிப்படுகிறார்கள். மேலும், பிறருடைய பாராட்டுகளோ விமர்சனங்களோ, இவர்களை ஆழமாகப் பாதிப்பது இல்லை என்றும் கூறுகிறார்கள்.
தனிமையில் இருப்பதிலேயே ஆற்றலைப் பெறுகின்ற இவர்கள், தனியாகச் செயல்படுவதைத் தங்கள் பலமாகக் கொண்டிருக்கிறார்கள். பலரோடு கலந்து, குழுவாகச் செயலாற்றுகின்ற சூழ்நிலைகளில் மிகவிரைவில் சோர்வடைவதால் பலரோடு பழகும் வாய்ப்பை விரும்புவதில்லை.
படைப்பாற்றல் மிக்க பலர் தங்களையோ, தங்கள் வேலைகளையோ விளம்பரப்படுத்துகின்ற பல வாய்ப்புகளை மறுப்பதினாலும் இவர்களின் கருத்துகள் வெளிவருவதில்லை. இதனால் இவர்களுடைய அமைதி அவரவர் புரிதலுக்கு ஏற்ப நினைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
எனவே, பேசவேண்டிய இடங்களில் தங்களுக்கான வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்துவது மேலும் நல்ல வாய்ப்புகளை இவர்கள் பெறுவதற்கு துணைசெய்யும் என்பது முக்கியமான கருத்தாக உள்ளது.
வெளிமுகம் பழகும் தன்மை (Extrovert):
கலகலப்பாகப் பேசுபவர்கள் என்ற அடையாளத்துடன் பலரால் கவனிக்கப்படும் இவர்கள். யாருடனும் உடனடியாகப் பழகுவதால், எளிதாக நட்பு வட்டத்தை அமைத்துக்கொள்கிறார்கள்.
பெரும்பாலும் இவர்கள் நண்பர்களோடு குழுவாக இயங்குவதையே விரும்புகிறார்கள். இதனால் வேலைகள் பொழுதுபோக்குகள் என எல்லாமே மற்றவர்களோடு கலந்து, மற்றவர்களைச் சார்ந்து அமைத்துக்கொள்கிறார்கள். நட்பு வட்டத்தை விரிவாக்குவதில் தேர்ந்தவர்களாக இருக்கும் இவர்களுக்கு இதுவே சிறந்த பலமாகச் செயல்படுகிறது.
தங்களையோ, தங்களது வேலையையோ விளம்பரப்படுத்தத் தெரிந்த இவர்கள் வியாபாரம், வணிகம் போன்ற துறைகளில் தங்களை முன்னிலைப்படுத்துகிறார்கள். தங்களைப்பற்றிய கருத்துக்களை எதிர்ப்பார்க்கும் இவர்கள், பாராட்டுகள், விமர்சனங்கள் போன்றவற்றை எதிர்கொள்ளும் சூழ்நிலைகளில் தங்களுடைய இருப்பைச் சத்தமாக வெளிப்படுத்துகிறார்கள்.
பலரோடு பழகும்போது மிகவும் ஆற்றலோடு செயல்படும் இவர்கள், தனித்து செயல்பட வேண்டிய சூழ்நிலைகளில் மிகவும் சோர்வடைந்து விடுகிறார்கள். இதனால் பெரும்பாலும் தனிமையைத் தவிர்க்கவே விரும்புகிறார்கள்.
சிக்கலான சூழ்நிலைகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதன் மூலம் அதனுடைய நேரடியான தாக்கத்திலிருந்து விடுபடுகிறார்கள். தனித்துச் செயல்படவேண்டிய சூழ்நிலைகளை மிகக்கடினமாக உணரும் இவர்கள் ஆழமாக சிந்தித்துச் செயல்பட வேண்டிய நிலையில் எளிதில் கவனச்சிதறலுக்கு உள்ளாகிறார்கள்.
நடுநிலையாகப் பழகும் தன்மை (Ambivert):
Introvert மற்றும் Extrovert என்ற தனித்தனியான இரண்டு தன்மைகளின் இடையில் அமைந்து, இரண்டு தன்மைகளின் மையப்புள்ளிகளையே எல்லைகளாகக் கொண்ட, புதிய தன்மையாக நடுநிலையாகப் பழகும் தன்மை Ambivert இருக்கிறது.
இது introvert மற்றும் extrovert என்ற இரு தன்மைகளைப் பல்வேறு விகிதங்களில் சேர்த்துக்கொள்வதால் இரண்டின் தன்மைகளும் இணைந்து சூழ்நிலைக்கேற்ப, தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப அந்தத் தன்மைகளைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
அதாவது, இந்தத் தன்மை உள்ளவர்கள், தனித்துச் செயல்படும் சூழ்நிலையிலும் தனிமையை உணராமல் கவனத்துடன் செயல்படுகிறார்கள். குழுவாகச் செயல்படுகின்ற நிலையிலும் மற்றவர்களோடு கலந்து சிறப்பாக செயல்படுகிறார்கள்.
ஆனால், இவர்களுடைய ஆற்றலுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. நீண்டநேரம் தனிமையாகவே இருப்பது அல்லது கூட்டமாகவே இருப்பது என்று ஒரே சூழ்நிலையில் தேங்கி இருப்பது இவர்களால் இயலாது. எனவே, அவ்வப்போது தங்கள் சூழ்நிலைகளை மாற்றுவது மற்றும் புதுமையான முயற்சிகளைச் செய்வது போன்ற வழிகளில் இவர்கள் தங்கள் ஆற்றலைத் தொடர்ந்து அதிகரித்துக்கொள்கிறார்கள்.
மேலும், இவர்கள் தங்களிடம் பேசுகின்றவர்களின் பேச்சை முழுமையாகக் கவனித்துக் கேட்பதிலும், பேசுகின்றவர்களின் தன்மைக்கு ஏற்ப தங்களுடைய பேச்சை அமைத்துக்கொள்வதிலும் சிறப்பாக இயங்குகிறார்கள். மிக அமைதியாக இருப்பதோ, கட்டுப்படுத்த முடியாமல் அதிகமாகப் பேசுவதோ இல்லாமல், அவசியத்திற்கு ஏற்ப பேசும் இயல்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
இத்தகைய இயல்பால் அனைவரிடமும் இயல்பாகப் பழகக்கூடியவராகவும், தங்களுக்கென்ற சிறிய நட்பு வட்டமும், மிக நெருக்கமான ஒருசில நண்பர்களும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மற்றவர் கருத்துகள், பாராட்டுகள், விமர்சனங்கள் போன்றவற்றிற்கு மிகையாக எதிர்வினையாற்றாமல் மிதமான நிலையில் அணுகுகிறார்கள்.
இவ்வாறு, இயல்பாகவே Ambivert தன்மை உள்ளவர்களோடு, Introvert மற்றும் Extrovert தன்மையில் உள்ளவர்கள் தங்களது தன்மைகளில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களும் இணைவதால் பெரும்பாலானவர்கள் Ambivert தன்மை உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.
இருநிலை எல்லைகளில் பழகும் தன்மை (Omnivert):
Introvert தன்மையின் மையத்திலிருந்து வெளிப்பக்க எல்லையும், Extrovert தன்மையின் மையத்திலிருந்து அதன் வெளிப்பக்க எல்லையும் என்ற இரண்டு எல்லைகளையும் இணைத்து, இரண்டிலும் இயங்குகின்ற தன்மையே Omnivert என்று கூறுகிறார்கள்.
இத்தன்மை உள்ளவர்கள், மாறுகின்ற தங்கள் மனநிலைக்கு ஏற்ப சில நேரங்களில் உள்முகம் பழகும் தன்மையின் எல்லையிலும், சில நேரங்களில் வெளிமுகம் பழகும் தன்மையின் எல்லையிலும் என்று மிகவேகமாக மாறக்கூடிய தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
இந்தத் தன்மையினர், ஒருமுறை மிக சகஜமாகப் பேசுவதும் மறுமுறை மிக அமைதியாக இருப்பதும் என உடனடியாக இரண்டு எல்லைகளை வெளிப்படுத்துகின்ற தன்மை உள்ளதால், மனநிலைக்கு ஏற்ப இரண்டு நிலைகளிலும் அதீதமாகச் செயல்படக்கூடிய திறனும் இருக்கும் என்று கூறுகிறார்கள்.
இவ்வாறு அவ்வப்போது இருவேறு எல்லைகளுக்கு மிகவும் வேகமாக மாறுகின்ற இவர்களின் அணுகுமுறை மற்றவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள்.
ஒற்றுமையும் வேற்றுமையும்:
நடுநிலையாகப் பழகும் Ambivert தன்மையும், இருநிலை எல்லைகளில் பழகும் Omnivert தன்மையும், introvert மற்றும் extrovert என்ற இரு ஆளுமை தன்மைகளை ஒத்திருப்பதுப்போல அவ்வப்போது தோன்றினாலும், இவ்விரு தன்மைகளில் உள்ள வேறுபாடுகள், இந்த இரு தன்மைகளையும் வெவ்வேறாக வேறுபடுத்துகின்றன.
இவற்றை எளிதாகப் புரிந்துகொள்ளும் பொருட்டு ஒரு “உதாரணத்திற்காக”,
Introvert தன்மையை, 1 2 3 4 5 6 7 8 9 10 என்ற பத்து எண்களாக இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.
Extrovert தன்மையை, 1′ 2′ 3′ 4′ 5′ 6′ 7′ 8′ 9′ 10′ என்ற பத்து எண்களாக இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். இப்போது,
Ambivert தன்மை என்பது 1 2 3 4 5 1′ 2′ 3′ 4′ 5′ என்ற பத்து எண்களாக அமைந்திருக்கிறது.
Omnivert தன்மை என்பது 6 7 8 9 10 6′ 7′ 8′ 9′ 10′ என்ற பத்து எண்களாக அமைந்திருக்கிறது.
ஆளுமைகளின் தன்மைகள்:
அனைத்து வகையான தன்மைகளிலும் வெற்றிபெற்றவர்கள், புகழ்பெற்றவர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக, மகாத்மா காந்தி, நெல்சன் மன்டேலா, ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின், ஐசக் நியூட்டன், எலன் மஸ்க், பில் கேட்ஸ், ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் போன்ற புகழ்பெற்ற மனிதர்கள் introvert தன்மை உள்ளவர்கள் என்ற குறிப்பு இந்தத் தன்மையின் சிறப்பை வெளிப்படுத்துகிறது.
மார்கரெட் தாட்சர், ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கிளின்டன் போன்ற புகழ்பெற்ற மனிதர்கள் Extrovert தன்மையைச் சிறப்பாகப் பயன்படுத்தி வெற்றிபெற்று, தம்முடைய புகழால் இத்தன்மையின் சிறப்புக்கு சான்றாக இருக்கிறார்கள்.
ஓபரா வின்பிரே, பராக் ஒபாமா போன்றவர்கள், இரண்டு தன்மைகளையும் தங்கள் வாழ்க்கையில் முறையாகப் பயன்படுத்துவதால் ambivert என்று ஆளுமை தன்மையின் சிறப்புக்கு உதாரணமாக விளங்குகிறார்கள்.
டேனியல் ராட்கிலிஃப், ஜெனீபர் லாரன்ஸ் போன்றவர்கள் omnivert தன்மை உள்ள பிரபலங்களாக புகழ்பெற்று இருக்கிறார்கள்.
எனவே, எந்தத் தன்மை உடையவராக இருந்தாலும் அவற்றுள் எந்த உயர்வும் தாழ்வும் இல்லை. இவை தங்களை வெளிப்படுத்தி மற்றவர்களோடு பழகும் தன்மை மட்டுமே. ஒவ்வொரு தன்மையும் அவற்றிற்கே உரிய சிறப்பு பண்புகளோடும் வளர்ச்சிக்கு ஏற்ப மாறுகின்ற நெகிழ்வுத் தன்மையோடும் இருப்பதால், இவை ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதத்தில் பயன் தருவதாக இருக்கின்றது.
ஒருவர் தான் தொடர்ந்து பழகுகின்ற மற்ற மனிதர்களின் தன்மைகளின் சராசரியைப் பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதால், தேர்ந்தெடுக்கும் நண்பர்களும், சூழ்நிலைகளும் அவருடைய தன்மைகளை மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
எனவே, ஒருவருக்குத் தன்னுடைய தன்மை பற்றிய புரிதலும் அதில் உள்ள நன்மைகளைச் சுயபலமாகப் பயன்படுத்துகின்ற பழக்கமும் நிலைத்த பண்பை உருவாக்குகிறது. இதனால்தான், காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப, இயங்குகின்ற சூழ்நிலைக்கு ஏற்ப ஒருவருடைய இயல்பான தன்மையில் உண்மையான நேர்மறையான மாற்றங்கள் ஏற்படுகின்றன. வளர்ச்சிக்குத் தேவையான இத்தகைய மாற்றங்களைச் சுயசிந்தனையோடு ஏற்றுக்கொள்வதும், மேம்படுத்திக்கொள்வதும் வெற்றியைச் சாத்தியமாக்குகின்றன.
எந்தத் தன்மை உள்ளவராக இருந்தாலும் தன்னுடைய இயல்பில் எவையெல்லாம் உறுதியாகக் கடைபிடிக்க வேண்டியவை என்ற தெளிவும், எவற்றை தன்னுடைய குறிக்கோளுக்கு உகந்த வகையில் சிறப்பாக வடிவமைக்க வேண்டும் என்ற நுணுக்கமும் அறிந்து முறையாக முயற்சி செய்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
# நன்றி .