கல்வி:
தேர்வுகள் என்றதும் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பள்ளிகளில், கல்லூரிகளில் நடைபெறுகின்ற Examinations எனப்படும் தேர்வுகளே. அதே போல தேர்ச்சிகள் என்றதும் அந்தத் தேர்வுகளின் முடிவுகளாக வெளிவருகின்ற (Pass செய்தவர்களின்) தேர்ச்சி விவரங்கள். உண்மையில் இத்தகைய தேர்வுகளும் தேர்ச்சிகளும் கல்விக்கூடங்களோடு மட்டும் நின்று விடுவதில்லை.
ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கின்ற பலவிதமான சூழ்நிலைகளும், செயல்பாடுகளும், அவற்றின் விளைவுகளைக் கூறுகின்ற நிகழ்வுகளும் நம்முடைய வாழ்க்கையில் தொடர்ந்து நடைபெறுகின்ற தேர்வுகளும் தேர்ச்சிகளுமாக இடைவிடாமல் இயங்குகின்றன.
இத்தகைய தேர்வுகளைக் கல்விக்கூடங்களில் நடைபெறுவதுபோலக் குழுவாக இணைந்து எதிர்கொள்ளும் சூழ்நிலைகளாக இல்லாமல், வாழ்க்கையில் அவரவர் சூழ்நிலை தேர்வுகளை அவரவர் நேரடியாக சந்திக்கும் வாய்ப்புகளே பெரும்பாலும் ஏற்படுகின்றன.
இவ்வாறு நாம் ஒவ்வொரு நாளும் சந்திக்கும் தேர்வுகளையும் தேர்ச்சிகளையும், Examinations and Results என்ற கல்விக்கூடங்களின் மொழியாக எதிர்கொள்வது அவ்வளவு பொருத்தமாக இருக்காது. எனவே நடைமுறை வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் தேர்வுகளை Selections என்றும், தேர்ச்சிகளை Skills அதாவது திறன்கள் என்றும் பொருள் கொள்வது சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
மதிப்பு :

ஒவ்வொரு வினாடியும், நமக்கு முன்னே இருக்கும் பல வாய்ப்புகளில் எவற்றைத் தேர்வு செய்வது, எவற்றில் தேர்ச்சி பெறுவது என்கிற தெளிவுதான் வாழ்க்கையின் வெற்றிக்குத் தேவையான அறிவாக இருக்கிறது.
“நன்றின்பால் உய்ப்பது அறிவு”, என்று தெரிந்து, மனதை நல்லவை இருக்கும் இடத்திற்குச் செலுத்துவது அறிவு என்று புரிந்தாலும் நடைமுறையில் இதை எப்படிச் செயல்படுத்துவது?
“Ο” என்ற வடிவம் தன்னை எதனோடு பொருத்திக்கொள்கிறதோ அந்த இடத்திற்கான அடையாளத்தைப் பெற்று, ஆங்கில எழுத்து, பூஜ்யம் அல்லது வட்டம் என்று வெவ்வேறு மதிப்பைப் பெறுகிறது. அதுபோலவே நம்முடைய ஒவ்வொரு சூழ்நிலையும் பல வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது. அவற்றுள் நாம் தேர்வு (selection) செய்யும் வாய்ப்பே நம்மை வடிவமைக்கும் வார்ப்படமாக அமைகின்றது.
நாம் தேர்ந்தெடுக்கும் இத்தகைய தேர்வில் (selectionல்), நாம் தொடர்ந்து செயல்படுகின்ற முயற்சியிலும் பயிற்சியிலும் நம்முடைய தேர்ச்சி (Skill, திறன்) உயர்வு பெறுகிறது.
இத்தகைய புரிதலோடு வாழ்க்கையை நேர்மறையாக அணுகும் நிலையில், ஒவ்வொரு சூழ்நிலையிலும் வளரும் திறன்களுக்கு ஏற்ற வாய்ப்புகளைத் தேர்வு செய்வதும், அதில் தொடர்ந்து முயற்சி செய்வதும் வாழ்க்கையில் இயல்பான செயல்பாடுகளாகக் பழகிவிடுகின்றன.
அளவுகோல்:

சாதாரணமாக, ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலை இருபது ரூபாய் என்றால், மழை வெள்ளம், வறட்சி போன்ற கடுமையான சூழ்நிலைகளில் அதே விலைக்குக் கிடைப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். அதுபோலவே வாழ்க்கைக்குத் தேவையான திறன்களைப் பெறுவதற்கும், தேர்ச்சிப் பெறுவதற்கும் விலையாகக் கொடுக்கப்படும் உழைப்பு எல்லோருக்கும், எல்லா சூழ்நிலைகளிலும் நிரந்தரமான அளவைக் கொண்டிருப்பதில்லை.
இயல்பை மீறிய சூழ்நிலையில் உள்ளவர்கள் அல்லது எதிரான சூழ்நிலையில் உள்ளவர்கள் அத்தகைய திறன்களைப் பெறுவதற்கு மேலும் அதிகமான தீவிரத்தன்மையோடு கடினமான உழைப்பைத் தரவேண்டியது தவிர்க்க முடியாத நடைமுறையாக இருக்கிறது என்பதும் உண்மை.
எனவே, தேர்வு (selection) என்பது தனிநபர் வாய்ப்பாக இருப்பது போலவே, தேர்ச்சி (Skill) என்பதும் அவரவர் முயற்சியின் அளவீடாக, வெவ்வேறு நிலைகளில் காணப்படுகின்ற வளர்ச்சியாக இருக்கிறது.
அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையான கல்வியும், வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கும் தேர்வுகளும், தேர்ச்சிகளும் வாழ்நாள் முழுவதும் உதவும் கருவிகளாகச் செயல்படுகின்றன. எனவே, வாய்ப்புகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்வுகளில் கவனமாகவும், வாழ்க்கையில் வளர்ச்சியைத் தருகின்ற தேர்ச்சியில் முனைப்பாகவும் இயங்குபவர்கள் வெற்றிக்குத் தேவையான தகுதியைப் பெறுகிறார்கள்.
வாழ்க்கை:
இத்தகைய சிறந்த கருவிகளின் துணையோடு, தன்னை உணர்ந்து, தன் நிலை அறிந்து எந்நிலையிலும் தன்னம்பிக்கையோடு செயல்பட்டு முன்னேறுவதுதான் சிறந்த வாழ்க்கை.
வாழ்க்கை என்பது வெற்றிகளை மட்டுமே தேர்ந்தெடுத்துத் தயாரிக்கப்பட்ட பூங்கொத்து அல்ல. கிளைகளும், இலைகளும் உள்ள செடியில் பூத்திருக்கும் பூக்கள். சில நேரங்களில் முட்களும், எறும்புகளும்கூட வெற்றி எனும் பூக்களோடு சேர்ந்து இருக்கலாம்.
முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம், ஆனால் முயற்சியின் நீளம்தான் சற்று கூடுதலாக இருக்கக்கூடும். இத்தகைய சூழ்நிலையில் மேலும் கவனமாகச் செயல்படுவதுதான் வெற்றிப்பெறுவதற்கான புத்திசாலித்தனம். இந்நிலையைச் சந்திக்கும் ஒருவன் அந்தச் சூழ்நிலையைத் தன்னம்பிக்கையோடு எப்படி அணுக வேண்டும்?
ஒருவன் நல்ல நிலையில் தன்னை நிலைநிறுத்துபவனும் தான்தான்.
தன் நிலைமையை நிலைகலங்கச் செய்து கீழ்நிலைக்குத் தள்ளுபவனும் தான்தான்.
இருக்கும் தன் நிலைமையிலிருந்து மேன்மேலும் உயர்த்திக் கொள்பவனும் தான்தான்.
தன்னைத் தலைமகனாகச் செய்துகொள்பவனும் தான்தான். – இது நாலடியார் (248) பாடலின் பொருள் .
இவ்வாறு, சிறப்பாக இயங்குகின்ற நிலையான மனதின் தன்னம்பிக்கையால், எந்தச் சூழ்நிலையிலும் தன்னைத் தலைமகனாகச் செய்துகொள்ள முடியும் என்பதே, தனது வாழ்க்கையைத் தலைமை ஏற்று நடத்துபவனின் உயர்ந்த வாழ்க்கை நெறியாகும்.
# நன்றி.