அனுபவம் என்றால் என்ன?
ஒரு சூழ்நிலையில் நடக்கும் ஒரு நிகழ்வு பலருக்குப் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அதிலிருந்து கற்றுக்கொள்வதும் அனைவருக்கும் ஒரே விதமாக இல்லாமல், அவரவர் புரிதலுக்கேற்ப ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவமாகப் பதிவாகிறது. இதை எளிமையாக விளக்குவதற்குத் துணையாக ஒரு கதையைச் சற்று சுருக்கமாக நினைவுபடுத்திக் கொள்வோமா?
நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த குல்லா வியாபாரி ஒருநாள் மிகவும் களைப்படைந்ததால் குல்லாக்கள் இருந்த கூடையை ஒரு மரத்தடியில் வைத்துவிட்டு, அவரும் அங்கே படுத்து ஓய்வெடுத்தார். சிறிது நேரம் சென்றபின்னர் விழித்த அவர் கூடை காலியாக இருப்பதை கண்டார். பின்னர், கூடையில் இருந்த குல்லாக்களை எல்லாம் மரத்திலிருந்த குரங்குகள், தலையில் அணிந்து இருப்பதைப் பார்த்த அவர், சமயோசிதமாகச் சிந்தித்துத் தன்னுடைய தலையில் இருந்த குல்லாவை கீழே போட்டதும் குரங்குகளும் அவரைப்போலவே குல்லாக்களைக் கீழே போட்டன. உடனே அந்தக் குல்லாக்களை எடுத்துக்கொண்டு வியாபாரி மகிழ்ச்சியாகச் சென்றுவிட்டார்.
(நமக்கு நன்கு தெரிந்த இந்தக் கதையின் தொடர்ச்சியாக நீளும் இந்தப் பகுதி அனுபவங்களின் விளைவுகளைக் கூறுகிறது.)
மகிழ்ச்சியாகச் சென்ற குல்லா வியாபாரி தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைத் தன்னுடைய சந்ததிகளிடம் பெருமையாகப் பகிர்ந்துகொண்டார். ஆனால், அதே நிகழ்வு அந்தக் குரங்குகளுக்கு ஏமாற்றத்தைத் தந்ததால், மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு தங்களது சந்ததிகளிடம் அனுபவப்பாடம் சொல்லிக்கொடுத்தன.
இப்போது இருதரப்பிலும் அவர்களுடைய சந்ததிகள் மீண்டும் அதே சூழ்நிலையைச் சந்திக்க நேரிட்டது. அவர்கள் அனைவருமே தங்களுடைய முன்னோர் கூறிய அனுபவத்தின் அடிப்படையில் நடந்துகொண்டார்கள். ஆனால் இப்போது, இளைய வியாபாரி குரங்குகளிடமிருந்து குல்லாக்களைப் பெறுவதற்குத் தனது குல்லாவைக் கீழே எறிந்தவுடன் தலையில் குல்லாவோடு மரத்தில் அமர்ந்திருந்த குரங்குகளில் ஒரு குரங்கு மட்டும் கீழே வந்து, கீழே கிடந்த அந்தக் குல்லாவையும் எடுத்துக்கொண்டு மரத்தில் வேகமாக ஏறியது.
இதைக் கண்ட இளைய வியாபாரி, முன்னோர் அனுபவம் பயனற்றது என்ற முடிவுக்கு வந்தான். குரங்குகளோ முன்னோரின் அனுபவம் தெரிந்ததாலேயே தாங்கள் ஏமாறாமல் இருந்ததாக நினைத்தன. மேலும், இப்போது வியாபாரியின் குல்லாவையும் எடுத்துக்கொண்டதால் அவனுடைய தந்திரத்திற்குச் சரியான பாடம் கற்பித்துவிட்டதாகவும் நினைத்து மகிழ்ந்தன.
வெற்றி என்றாலும் தோல்வி என்றாலும் அது தருகின்ற அனுபவம் என்பது மிகச் சிறந்த பாடம். ஆனால், அது புரிந்துகொள்வதற்கு ஏற்ப பலன் தரக்கூடியது. “தோல்வியின் அனுபவத்தில் ஏற்படும் எச்சரிக்கை உணர்வு, வெற்றியின் அனுபவத்தைப் பெறும்போது இருப்பதில்லை”.
அனுபவம் என்பது சுயமாக அனுபவித்துப் பெற்ற பாடமாகவும் இருக்கலாம், அல்லது மற்றவர் அனுபவத்தை உணர்ந்ததால் கிடைத்தப் பாடமாகவும் இருக்கலாம். ஆனால் அந்த அனுபவமே இன்றைய சூழலுக்குத் தேவையான “முழுமையான செயல்முறை திட்டமாக இருந்துவிட முடியாது”.
பெறப்பட்ட அனுபவங்கள் யாவும் இப்போது நாம் சந்திக்கும் சூழ்நிலைக்குத் தேவையான வகையில் சுயமாகச் சிந்திப்பதற்கான தூண்டுதல்கள் மட்டுமே. சந்திக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் சுயஅறிவை பயன்படுத்தி சிந்தித்து, காலத்திற்கும் சூழ்நிலைக்கும் மட்டும் அல்லாமல் தனிப்பட்ட வகையிலும் பொருத்தமாக இயங்கும் செயல்பாடுகளே சிறந்த அனுபவங்களாக மாறுகின்றன.
வலிமை:
சந்திக்கின்ற சூழ்நிலை, மனிதர்கள் போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், பெறுகின்ற அனுபவத்திலும் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை என்ற அலட்சியமான மனநிலையே சுயசிந்தனையைத் தடை செய்கிறது.
நிகழும் மாற்றங்கள் என்பது புதிய சூழ்நிலை, புதிய மனிதர்கள் என்று உடனடியாக வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், வினாடிக்கு வினாடி மாறுகின்ற இந்தப் புதிய உலகில் மாற்றங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால், மாற்றங்களை உணராமல் அவற்றை ஏற்கனவே இருக்கும் பழைய அனுபவங்களோடு அப்படியே பொருத்தி விடுவதால்தான் எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் ஏற்படுகிறது.
மாற்றம் என்பது, எங்கும், எவற்றிலும், எப்போதும், நிகழலாம் என்ற எண்ணமே எந்தச் சூழலையும், எத்தகைய மனிதர்களையும் புதிய அனுபவத்தின் வாய்ப்புகளாக எதிர்கொள்ள உதவும். இவ்வாறு சந்திக்கும் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை விரைவாகத் தயார்படுத்திக்கொள்ளும் மனநிலைக்கு அனுபவத்தின் வலிமையே பெரிதும் துணை நிற்கும்.
கவனம்:
நம்முடைய நினைவுகளில் ஆழமாக இருக்கும் பதிவுகள், கடந்தகாலத்தின் நல்ல அனுபவங்களாக மட்டும் இல்லாமல், சில எதிர்மறையான நிழல்களும் இணைந்தே இயங்குகின்றன.
அனுபவங்கள் என்ற பெயரில் இந்த நிழல்களையும் சேர்த்தே தூக்கி சுமப்பதால் அவை சில மனத்தடைகளை உருவாக்கிவிடுகின்றன. இந்த மனத்தடைகள் நாம் சூழ்நிலையை விழிப்போடு கவனிக்காதச் சமயங்களில் நம்மிடமிருந்து தன்னிச்சையாக வெளிப்பட்டு, நிகழ்காலத்தின் இயல்பான நடவடிக்கைகளையும் எதிர்மறையாகத் தீர்மானித்து விடுகின்றன.
இதனால், ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய நாளாக நமக்குக் கிடைத்தாலும், அதை வழக்கமான அணுகுமுறையால், பழைய அனுபவத்தோடு சேர்த்து வைத்துவிடுகிறோம். இதனால் ஏற்படும் விளைவுகளும் எந்தப் புதுமையும் இல்லாத ஏமாற்றத்தின் சலிப்பை ஏற்படுத்துகின்றன.
நாம் பெற்றுக்கொண்ட சிறந்த அனுபவங்கள்தான் நம்மை உயர்த்தி, நாம் அடுத்த நிலை நோக்கி செயல்படுவதற்குப் பெரிதும் உதவுகின்றன. ஆனால், ஏறுவதற்குப் பயன்படும் ஏணியே இறங்குவதற்கும் காரணமாவதுபோல மதிப்பை உயர்த்தும் அனுபவங்களே சில சமயங்களில் அதற்கு எதிரான விளைவுகளுக்கும் காரணமாகின்றன.
தேவையறிந்து, அளவறிந்து விழிப்போடுப் பயன்படுத்தும்போது மட்டுமே அனுபவங்கள் மிகவும் மதிக்கப்படுகின்றன. எந்தச் சூழ்நிலையிலும் அதன் வரம்பு நிலையறிந்து அனுபவங்களைக் கவனமாகக் கையாளும் திறன் மிகமிக அவசியம் ஆகிறது.
அனுபவத்தை எப்படி பயன்படுத்துவது:
நடைமுறையில் அனுபவங்களை எப்படி பயன்படுத்துவது என்பதுதான் வாழ்க்கையின் மிக முக்கியமான விழிப்புணர்வு.
சென்ற வருடம் படித்த பாடம், இந்த வருடத்தின் புதிய பாடத்திற்கு அடிப்படையாக இருந்து உதவுகின்றன. ஆனால் பழைய பாடத்திட்டத்தையே இன்றைய படிப்பிற்கும் பயன்படுத்த நினைப்பதுதான் நடைமுறைக்குப் பொருந்தாமல் போகிறது.
நேற்றைய அனுபவத்தை மனதில் இருத்தி, புதிதாக வரும் ஒவ்வொரு நாளையும் புது புத்தகத்தின் வாசனையாக வரவேற்று, புதிய (பாடத்) திட்டத்திற்கான புதிய அனுபவமாக எதிர்கொள்வது வளர்ச்சியைத் தரும்.
ஒரு மரம் செழுமையாக வளர்வதற்கும் நிலையாக நிற்பதற்கும் அம்மரத்தின் வேர் வலிமையாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் அந்த வேர் மட்டுமே முழுமையான மரம் ஆகிவிடாது. வேரைப் பயன்படுத்தி வளரும் மரத்தின் பூக்களும் கனிகளும்தான் மரத்தின் பயனாகப் பார்க்கப்படும். எனவே, அனுபவத்தின் பலனாக என்ன விளைகிறது என்பதுதான் அனுபவத்தின் மதிப்பு.
பயன்பாடுகளைப் பொறுத்தே அனுபவங்களின் தேவைகளும், மதிப்பும் உயர்கின்றன. மாறும் காலத்துக்கேற்ப, மாறிக்கொண்டே இருக்கும் சூழ்நிலைக்கேற்ப அனுபவங்களை நேர்த்தியாகப் பயன்படுத்தும்போது அவை சிறப்பைத் தருகின்றன.
இவ்வாறு, முதிர்ந்த அனுபவத்தைப் பயன்படுத்தி இன்றைய சூழலுக்குப் பொருத்தமான அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்துச் செய்யும் சிறப்பான செயல் என்பது, தரமான பழைய தங்கத்தைப் பயன்படுத்தி, அதன் மதிப்புக் குறையாமல் செய்யப்பட்ட புதிய வடிவமைப்புப்போல மதிப்பு மிக்கதாகவும், நடைமுறையில் பயனுள்ளதாகவும் இருக்கும்.
# நன்றி.