மனநலம்.
சத்து குறைபாட்டினால் ஏற்படுகின்ற உடல் அயர்ச்சியைப் போக்குகின்ற விட்டமின்களைப்போல, சில உணர்வுகளில் ஏற்படுகின்ற குறைபாடுகளைப் போக்கி, அவற்றை தன்னம்பிக்கையோடு கையாள உதவும் நேர்மறை சிந்தனைகள் வலிமை தருகின்ற விட்டமின்களாகச் செயல்படுகின்றன.
1.சலிப்பு (Demotive):
தன்னுடைய முயற்சி மற்றும் உறவுகள், நண்பர்கள், குழுவினர் என யாருடைய முயற்சிகளிலும் நம்பிக்கை இல்லாமல் துவளுகின்ற மனநிலை. இது பெரும்பாலும் எதிர்மறை சிந்தனையின் தாக்கத்தால் ஏற்படுகின்ற நிலை என்பதால், சிறிய எதிர்ப்போ, தடையோ, சிக்கலோ ஏற்பட்டதும் அவற்றை எதிர்கொள்ள முடியாத வலி மனதைப் பாதிக்கிறது.
சுயசந்தேகம் என்கிற நெருப்பை மனதில் வைத்தபடி, அதன் புகையினால் உடல்நிலையிலும், உறவு நிலையிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்ற மனநிலை. விளைவுகள் சாதகமாக வரவேண்டும் என்று வேகமாக நினைத்தாலும், அதற்கு பொருத்தமான முயற்சிகளில் சுணக்கம் காட்டுவது. விடாமுயற்சியோடு மீண்டும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து, துணிந்து செயல்படுவதற்கு முடியாமல் சலிப்பை ஏற்படுத்துகின்ற சோர்வு நிலை.
விட்டமின்கள்:
முதலில், Comfort zoneலிருந்து வெளியே வந்து திறன்களின் எல்லையை விரிவுபடுத்துவது. தனது உழைப்பை உணர்ந்து நம்பிக்கையோடு செயல்படுவது. ஒத்துழைப்புத் தருகின்றவர்களின் உழைப்பை மதித்து நட்பாகப் பழகுவது.
எதிர்பார்க்கும் விளைவுகளை நேர்மறையாகக் கவனப்படுத்திக்கொண்டு, அதையே தெளிவாக வெளிப்படுத்தி, பொறுப்பேற்றுச் செயல்படுவது. நேர்மறையான மனிதர்கள், புத்தகங்கள் போன்ற நல்ல தொடர்புகள் மூலம் மனதில் ஊக்கத்தை அதிகரித்துக்கொள்வது. இவ்வாறு, தொடர்ந்து அளிக்கப்படும் பயிற்சிகள் மனதில் சோர்வு நீக்கி, தன்னம்பிக்கையைத் தருகின்ற விட்டமின்களாகச் செயல்படுகின்றன.
2.பலவீனம் (Fragile):
கண்ணாடிப் பொருட்களைப் பார்க்கும்போதே Handle with care என்ற எச்சரிக்கையும் கூடவே தோன்றுவது போல, ஏதெனும் ஒரு சிறிய காரணத்தோடு எளிதில் உடைவதற்கு தயாராக இருக்கின்ற நிலை.
எப்போதும் தன்னுடைய உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து முன்னிலைப்படுத்துவது. அத்தகைய வாய்ப்பு இல்லாத சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பொறுமை இல்லாமல் உடனே உடைந்து போவது. பாதுகாப்பற்ற உணர்வால் ஏற்படுகின்ற இந்த இயலாமை, எப்போதும் தயக்கத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக வெளிப்படுகிறது.
விட்டமின்கள்:
சூழ்நிலையை நேர்மறையாகக் கவனிப்பது. தன்னுடைய உணர்வுகளைப்போலவே அனைவரின் நேர்மையான உணர்வுகளுக்கும் மனதார மதிப்பு அளிப்பது. அனைவரும், நிறையும் குறையும் உள்ள மனிதர்கள்தான் (தன்னைப்போலவே) என்று உணர்ந்து, சிறிய விஷயங்களை மன்னிப்பது.
மற்றவரிடம் எதிர்பார்க்கும் மனமுதிர்ச்சியை முதலில் தானே முயன்று வெளிப்படுத்துவது, இயல்பான அன்போடு விட்டுக்கொடுத்து நடப்பது. இதுபோன்ற அணுகுமுறைகள் மனதை பாதுகாக்கும் கவசமாகச் செயல்பட்டு, சுயமதிப்பையும் உயர்த்துகின்ற விட்டமின்களாகச் செயல்படுகின்றன.
3.ஊஞ்சல் (Swing):
மனதை ஒரு நிலையில் நிலையாக வைக்க முடியாமல், அங்குமிங்கும் தாவுகின்ற பதட்டத்தால் வெளிப்படுகின்ற குழப்பமான நிலை. புதியவற்றில் ஆர்வம் காட்டுவது, பின்னர் அதில் உள்ள சவால்களை அறிந்து விலகுவது, என அடிக்கடி மனநிலையை மாற்றுகின்ற தன்மை.
தான் செல்லவேண்டிய பேருந்தா என்று விசாரித்து அறியாமல், பார்க்கின்ற பேருந்தில் எல்லாம் வேகவேகமாக ஏறி ஏறி இறங்குவது போன்ற நிலை.
விட்டமின்கள்:
எண்ணங்கள் தோன்றும் வேகத்திலேயே உடனடியாக வெளிப்படுத்துவதும் பின்னர் மாற்றுவதுமாக இல்லாமல், அதை சற்று நிறுத்திவைத்து, விளைவுகளைச் சிந்தித்து, உணர்வுகளின் நியாயங்களை நிதானமாக வெளிப்படுத்துவது.
ஆர்வம் ஏற்படுகின்ற ஒவ்வொரு புதிய துறையிலும், தொடர்ந்து ஆர்வத்தைத் தரக்கூடிய பல புதிய நிலைகள் (stages) இருக்கும் என்பதை உணர்வது. அதில் தொடர்ந்து பயிற்சி பெற்று, திறனை வளர்த்துக்கொள்வது. இவ்வாறு பெறுகின்ற புதிய திறன்கள் புதிய வெற்றியைத் தருகின்ற விட்டமின்கள் ஆகும்.
4.எதிரொலி (Echo):
ஒரே ஒரு வார்த்தை, அது பாராட்டாக இருந்தாலும் சரி, விமர்சனமாக இருந்தாலும் சரி, அதையே மனதில் பலமுறை ஒலிக்கச் செய்து அதீத சிந்தனையில் ஓய்ந்துவிடுகின்ற நிலை. அடுத்த எதிரொலிக்கான வார்த்தை வரும்வரை இதுவே மனதில் தொடர்ந்து ஒலிப்பதால் செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்துகின்ற நிலை.
விட்டமின்கள்.
இத்தகைய எதிரொலிகள் நேர்மறையாக ஒலிக்கும்போது உற்சாகத்தைத் தருகின்றன. மேலும், உண்மையான அக்கறையோடு இருந்தால் அவை செயல்பாடுகளை நெறிப்படுத்தி வளர்ச்சிக்கு வலிமை சேர்க்கின்றன.
அவ்வாறு இல்லாத எதிர்மறையின் எதிரொலிகளை நம்முடைய அலைவரிசைக்குக் கீழானவை என்ற எல்லையை நிர்ணயித்து ஒதுக்கிவிட்டு, தொடர்ந்து கவனமாகப் பயணிப்பது மனவலிமையை அதிகரிக்கும் விட்டமின்களாகச் செயல்படுகின்றன.
5.இறுக்கம் (Tough):
தன்னுடைய மனம் பாதிப்பு அடைந்துவிடக் கூடாது என்கிற அதிஜாக்கிரதை எண்ணத்தால் இறுக்கத்தை வெளிப்படுத்துகின்ற நிலை. உணர்வுகளால் உருவாகும் உறவுகள், மனதை நெகிழச் செய்துவிடும் என்ற அச்சத்தால் எளிதில் அணுகமுடியாதபடி வெளிப்படுகின்ற கடினமான நிலை.
அன்பைக் கொடுப்பதும் பெறுவதும் பலவீனம் என நினைத்து, வெளிப்பார்வைக்கு இறுக்கமாகத் தெரிந்தாலும், உள்ளூர அன்பின் ஏக்கங்கள் உள்ள நிலை.
விட்டமின்கள்.
நியாயமான உணர்வுகளைப் பக்குவமாகப் பரிமாறுவதில் உள்ள பற்றாக்குறையை நீக்குவது முதன்மையானது.
இதில், உண்மையான அன்பை நிதானமாகத் தெளிவாக வெளிப்படுத்துவது, தன்னிடம் பரிமாறப்படுகின்ற அன்பான உணர்வுகளை ஈகோவின் தடையில்லாமல் உணர்வது, போன்றவை சுவாசத்தைத் தளர்த்தி மனதை இலகுவாக மாற்றுகின்ற வழிகள்.
இவ்வாறு, நேர்மையான வழியில் உள்ளத்தின் உணர்வுகளைப் பரிமாறுகின்ற அணுகுமுறை மனதின் வளமையை வலிமையாக்கும் விட்டமின்கள் ஆகும்.
6.தண்ணீர் (Water):
தனக்கென்று நிலையான எந்த வடிவமும் இல்லாமல் இடத்துக்கேற்ற வடிவம் பெற்று, தனக்கே பாதிப்பு ஏற்படுத்துகின்ற சூழ்நிலையிலும் தயங்காமல் கலந்து மாசுபடுகின்ற தண்ணீர் போல, பாதிப்பு அடைந்து குழம்புகின்ற மனநிலை.
மனதை ஈர்க்கும் சூழ்நிலைகளின் தாக்கத்தில் நிதானம் இன்றி இரண்டற கலந்து, தானே தனக்குப் பாதிப்பை ஏற்படுத்திக்கொள்ளும் நிலை.
விட்டமின்கள்.
எதனோடு கலந்து எத்தன்மை பெற்றாலும், மீண்டும் தெளிந்து, தூய நீராகத் தன் பயணத்தைத் தொடர்கின்ற மேன்மையான தகுதி தண்ணீருக்கு உள்ளது. மாறுகின்ற வெப்பத்தில் வினையாற்றி, பனியாக உறைந்தாலும், நீரே ஆவியானாலும் மீண்டும் தன் நிலையான இயல்புக்கு மாறுகின்ற தண்ணீரின் ஒப்பற்ற தன்மையால், தன்னிலை இழக்காதத் தண்ணீர் தனித்திறன் காத்து உயிர்காக்கும் உறுபொருள் ஆகிறது.
அந்தத் தண்ணீரைப்போலவே சூழ்நிலைகளின் தன்மை உணர்ந்து, தனது பயணத்தில் விழிப்போடு பயணிக்கும் தொடர்முயற்சியும், கடுமையான மாற்றங்களுக்கு உட்படுகின்ற சக்தியும், தூய்மையான இயல்பை நிலையாகக் கொள்ளும் வலிமையும் திடமான மனவுறுதிக்குத் துணை நிற்கும் தன்னம்பிக்கையின் விட்டமின்கள் ஆகும்.
தன்னம்பிக்கை:
தட்டச்சு செய்கின்ற keyboardல் உள்ள எழுத்துகள் ABCD…என்று வரிசையாக இல்லை என்றாலும், அதை வரிசைப்படுத்தி type செய்வதற்கான பயிற்சியை முயற்சியினால் பெறுகிறோம்.
அதுபோல சில சூழ்நிலைகளின் சிந்தனைகள் நாம் எதிர்பார்ப்பதுபோல வரிசையாக இல்லாவிட்டாலும், அவற்றைப் பொறுமையாக அணுகுகின்ற, முறையான பயிற்சியின் மூலம் அழகாக வேகமாகச் செயல்பட்டு, சரியான விளைவுகளைப் பெறமுடியும்.
எதுவுமே நிரந்தரமில்லாத மனித வாழ்க்கையில் எந்த உணர்வுகளும் நிரந்தரமாக நீடித்து இருப்பதில்லை. ஆனாலும், அவ்வப்போது மாறுகின்ற சூழ்நிலைகளும், அவற்றில் மேலிடுகின்ற உணர்வுகளும்தான், வாழ்க்கை எனும் ஆழமான கடலுக்கு அழகு தரும் அலைகளாக இருக்கின்றன.
இந்த உணர்வுகளின் அழகை அனுபவித்து, அவற்றை நிதானமாகக் கையாளுகின்ற பயிற்சியே மனதை மென்மையாக உணர வைக்கும் வலிமையான விட்டமின்கள் ஆகும்.
அதுபோலவே, நாம் வெளிப்படுத்துகின்ற தன்னம்பிக்கையின் சிந்தனைகள், அனைவருக்கும் ஊக்கத்தை அளித்து, வலிமை சேர்க்கும் சிந்தனைகளாகப் பரிமாறப்படுகின்றன என்பதும் மகிழ்ச்சியைத் தருகின்ற விட்டமின்கள் ஆகும்.
# நன்றி .