சமநிலை என்பது சாத்தியமா?
சமுதாயம் (social balance), ஆண் பெண் (gender equality), வேலை மற்றும் வாழ்க்கை (work life balance), வரவுசெலவு (income and expenditure balance), படிப்பு விளையாட்டு (studies and sports) மற்றும் சத்தான உணவு (balanced food) போன்ற பல துறைகளிலும் சமநிலை (balance) இருக்க வேண்டும் என்று கூறுகிறோம்.
இப்படி எல்லாவற்றையும் கவனித்துச் சரியாக balance செய்ய வேண்டிய நாம் நமக்குள் சமநிலையோடு இயங்குகிறோமா? நமக்குள் இருக்கும் மனதிற்கும் அறிவுக்கும் இடையே இருக்க வேண்டிய சமநிலையை நாம் அறிந்துகொள்ள முடியுமா என்ற பார்வையின் பதிவு இது.
சமமும், சமநிலையும்:
சமம் என்பது வேறு சமநிலை என்பது வேறு.
சமம் என்பது இரண்டு பக்கமும் எந்த வேறுபாடும் இல்லாமல் அச்சு பிசகாமல் சரிசமமாக இருப்பது. சமநிலை என்பது எப்போதும் “இரண்டு பக்கத்திற்கும் தேவையான நியாயத்துடன்” நிர்வகிப்பது. சமநிலை என்பது எல்லா நேரமும் சரிசமமாகவே இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்பதுதான் இதில் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டிய முதல் கருத்தாக உருவாகிறது.
உதாரணமாக, சமநிலையில் இயங்குகின்ற நம்முடைய பூமியைச் சமமான சரிபாதிகளாக பிரிக்க முடியாது. இதில் உள்ள இரண்டு பாதிகளிலும் உள்ள நிலப் பகுதியும் கடல் பகுதியும்கூட சமஅளவாக இல்லை.
ஆனாலும், பூமி அந்தந்தப் பகுதிக்கான இயல்பை நிர்வகிக்கும் பொறுப்பில் சமநிலையாக இயங்குவதற்கான அமைப்பைத் தனக்குள் தக்கவைத்திருக்கிறது. இதனால், கால மாற்றத்திற்கு ஏற்ப தன்னில் சில மாற்றங்களைத் தொடர்ந்து ஏற்படுத்தி என்றும் புதிய பூமியாக சமநிலையோடு முழுமையாக இயங்குகிறது.
மேலும், சூரியனிலிருந்து பெறப்படும் ஆற்றலுக்கும் தன்னிலிருந்து வெளிப்படுத்தும் ஆற்றலுக்கும் இடையில் உள்ள சமநிலையால் பூமி சமநிலையோடு தொடர்ந்து இயங்குகிறது.
வாழ்க்கையில் சமநிலை:
நடைமுறையில், சமமாகப் பார்க்கப்படும் இடத்தில் இருக்கும் இரண்டு குழந்தைகள் ஒரே நேரத்தில் வயிற்று வலி என்று கூறினாலும், ஒருவருக்குப் பசியின் வலியாக இருக்கலாம் மற்றொருவருக்கு அஜீரணம் காரணமாக இருக்கலாம் அல்லது வேறு காரணமாகவும் இருக்கலாம்.
இருவருக்கும் சமமாக ஒரே மருந்து என்ற அணுகுமுறை சமநிலையில் இயங்காது என்பதை உணர்ந்து, அவரவர்க்குத் தேவையான கவனதுடன் சரியாகச் செயல்படும்போது மட்டுமே இருவருக்குமான முழுமையான கவனிப்புச் சமநிலையில் இயங்குகின்ற சூழ்நிலை ஏற்படுகிறது.
உறவுகளிலும் இதுபோன்ற சமநிலையான சூழ்நிலையில் உள்ளவர்கள் நடைமுறை சாத்தியங்களைப் புரிந்துகொண்டு சூழ்நிலைக்கு ஏற்றவாறு, ஒருவருக்காக மற்றொருவர் அனுசரித்துக்கொள்வதும், சமநிலையில் தன்னிலையைச் சற்று விட்டுக்கொடுப்பதும் மனமுதிர்ச்சியால் நிகழும்போது, பரஸ்பரமான அன்பின் சமநிலையாகச் செயல்படுகிறது.
பலநேரங்களில் ‘சமம்’ என நினைக்கும் பல நடைமுறைகளில், மனமும் அறிவும் சமநிலையோடு இயங்குவதும், தெளிவாக வெளிப்படுத்துகின்ற உணர்வுகளின் நிதானமும், சமநிலையாகச் செயல்படுவது அவசியம் ஆகிறது.
அதீதமாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஏற்படுகின்ற தடுமாற்றம், சமநிலையைப் பாதிப்பதோடு விளைவுகளையும் திசைமாற்றி விடுகிறது. இதனால் குரங்கு பங்கிட்ட ஆப்பம்போல, சமநிலை என்பது உணர்ச்சிகளுக்கு இரையாகி விடுகிறது. இதில் சமமான பங்களிப்பை எதிர்பார்க்கும் மனமும் அறிவும் ஆப்பத்திற்கு காத்திருந்த பூனைகளின் நிலையைச் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே, மனதில் தோன்றுகின்ற உணர்வுகளையும், அறிவு கூறுகின்ற வழிமுறைகளையும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சமநிலையோடு கையாளுகின்ற பயிற்சி, சுமுகமான நடைமுறைக்குத் தேவையான, எப்போதும் முயற்சி செய்ய வேண்டிய அணுகுமுறையாக உள்ளது.
இது, உயரமான இடத்தில் இழுத்துக் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடப்பவர் இருபக்கமும் கைகளை நீட்டி ஏற்றி இறக்கி, தன்னை சமநிலையாக்குவதற்கு செய்கின்ற முயற்சிபோல, சூழ்நிலைகளைச் சமநிலையோடு கையாளுகின்ற பயிற்சி எப்போதும் தேவைப்படுகின்ற விழிப்புணர்வாக உள்ளது.
ஆணும் பெண்ணும்:
சமூகத்தில், ஆணும் பெண்ணும் சமமாக இருக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு வலிந்து செய்யும் சில அர்த்தமற்ற செயல்கள், நாம் உண்மையான சமநிலை அடைய இன்னும் எத்தனை காலம் ஆகுமோ என்ற எண்ணத்தையே இப்போது ஏற்படுத்துகின்றன.
ஆண், பெண் மட்டுமல்ல எந்தப் பாலினத்தவராக இருந்தாலும் மனிதன் என்னும் ஒரே இனத்தவராக, ஒவ்வொரு தனிநபரும் மனிதத் தன்மையோடு, சுயமரியாதையோடு நடந்துகொள்வதும், மற்றவர் சுயமரியாதையை மதிப்பதும், அன்பை உணர்ந்து அன்பை வெளிப்படுத்தி வாழ்வதுதான் அடிப்படையான நாகரிகம்.
இந்த அடிப்படை நாகரிகத்தின் விளைவாக, தானும் அடிமையாகாமல் மற்றவரையும் அடிமை ஆக்காமல், உண்மையான மரியாதையும், அன்பும் இயல்பாக வெளிப்படுகின்ற நேர்மையான சூழ்நிலையே அனைவருக்கும் ஏற்ற நிலையாக, குறிப்பாக ஆணுக்கும் பெண்ணுக்கும் உகந்த சமநிலையாக சமூகத்திலும் வெளிப்படும்.
சமநிலை என்பது சூழ்நிலையைப் புரிந்துகொண்டு உணர்வுகளை நெகிழ்வு தன்மையோடு மேலாண்மை செய்கின்ற சிறந்த அணுகுமுறை. இது அனைவருக்கும் பொதுவான அக்கறையோடு அரவணைத்து செயல்படுகின்ற பொறுப்பான அணுகுமுறை.
தனி மதிப்பு:
ஒரு நாணயத்தின் இரு பக்கங்களுக்குள் ஒன்றுக்கொன்று எந்த வேறுபாடும் இல்லாமல் சமமாக இருந்தாலோ, ஒரு நாணயத்தின் மறுபக்கம் மற்றொரு நாணயத்தின் மறுபக்கமாக இருந்தாலோ அது புழக்கத்திற்கு பயன்படாத செல்லாக்காசு ஆகிவிடும்.
எனவே, ஒரு நாணயத்தின் இருபக்கங்களில் சமமாக இருக்க வேண்டிய சில அம்சங்களில் சமமாகவும், அந்தந்த பக்கத்திற்கான சிறப்புத் தன்மைகளோடு தனித்துவமான அம்சங்களும் சரியாகப் பொருந்தி, இணைந்து இயங்கும் நிலையில்தான் அந்த நாணயத்தின் மதிப்பு முழுமை பெறுகிறது.
ஒவ்வொரு நாணயமும் அதன் மதிப்புக்கு ஏற்ற பொருத்தமான இருபக்கங்களுடன் சமநிலையோடு இயங்குவது அந்த நாணயத்தின் சமநிலையாக இருக்கிறது.
நிலத்தில் வாழும் மானும், நீரில் வாழும் மீனும் அதனதன் தேவையும் பலமும் அறிந்து, அதில் வளமாய் வாழும் வழியை ஏற்படுத்தித் தருவதுதான் இயற்கையான வாழ்க்கையின் சமநிலை.
ஏற்கனவே இருக்கும் நேற்றைய பழக்கத்திற்கும், எதிர்நோக்கும் நாளைய முன்னேற்றத்திற்கும் இடையில், இன்றைய நடைமுறைகள் பாலமாகச் செயல்படுகின்றன. இவற்றை நேர்மறையான திசையில் நிர்வகிக்கும் திறன் வாய்ந்த அறிவார்ந்த நடைமுறையே சமநிலையான சமூகச் சூழலை உருவாக்கும்.
நடைமுறையில் சந்திக்கும் எல்லா சூழ்நிலைகளும், அந்தந்த நிலைக்கான உண்மையான நியாயத்தோடு இயல்பாகப் பொருந்தி, சமநிலையில் இயங்கும் நிலையில் அது மதிப்புமிக்க நிலையாக வெளிப்படுகிறது.
# நன்றி.