A girl holding the umberlla to the brain
The proactive thoughts that gives support for mental strength.

மாற்றுச் சிந்தனைகள்.Benefit of Hope.

மாற்று சிந்தனைகள்:

அணிந்துகொள்ளும் உடைகளை சூழ்நிலைக்கு ஏற்ப தேர்ந்தெடுப்பது என்பது வழக்கமான ஒரு செயல்.  அதே நேரத்தில், அந்த வழக்கமான உடை மட்டுமே போதுமானதாக இல்லாத, சற்றுக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சிறப்பான பருவ நிலைகளையும் நடைமுறையில் எதிர்கொள்ள வேண்டியதாக உள்ளது.

அதிகமான மழை, குளிர், வெயில் போன்ற குறிப்பிடத்தக்க பருவநிலைக்கு ஏற்ப கூடுதல் பாதுகாப்புத் தருகின்ற உடைகளும், கூடுதல் ஏற்பாடுகளும் நடைமுறையில் தேவைப்படுகின்றன.  

அப்படியே,

வழக்கமான சூழ்நிலைகளைக் கையாளுவதற்கு ஏற்ற பழக்கமான சிந்தனைகள் எளிமையான அணுகுமுறைகளாக நடைமுறையில் இருக்கின்றன.  ஆனால், சற்று வேறுபட்ட, சவாலான சூழ்நிலைகளைக் கூடுதல் கவனத்தோடு எதிர்கொள்வதற்கு துணையாக இருக்கும் “மாற்றுச் சிந்தனைகள்”, அந்தச் சூழ்நிலைகளைச் சாதகமாகக் கையாளுவதற்கும் உதவுகின்றன. 

இத்தகைய மாற்றுச் சிந்தனைகள் என்பது யாருக்கும் தெரியாத புத்தம்புதிய சிந்தனைகள் அல்ல.  ஆனால் தேவையான சமயத்தில் நினைவில் கொள்ள வேண்டிய அவசியமான சிந்தனைகள்.  பெரும்பாலும், சவாலான சூழ்நிலைகளைக் கடந்துவந்த பெரியவர்களின் வாழ்க்கை வரலாறுகள் சரியான சமயத்தில் பயன்படுத்தப்பட்ட நேர்மறையான மாற்று சிந்தனைகளின் முக்கியத்துவத்தைக் கூறுகின்றன.  

நூறு சதவிகித உழைப்பை, முழுமையான பங்களிப்பை அளித்துச் செய்கின்ற ஒரு செயலின் விளைவு சாதனையாகவோ, சாதாரணமாகவோ, சரித்திரமாகவோ வெவ்வேறு வகையில் வெளிப்படுகிறது.  அதை அவ்வாறு தீர்மானிக்கும் வகையில் செயல்படுத்துகின்ற சக்தி சிந்தனைகளுக்கே உள்ளது. 

அதிலும் குறிப்பாக சாதகமற்ற சூழ்நிலையிலும் அதை நேர்மறையாக எதிர்கொள்ளும் மனநிலையைத் தீர்மானிக்கும் சக்தி கொண்ட மாற்றுச்சிந்தனைகளே வெற்றியாளர்களின் மதிநுட்பமாக வெளிப்பட்டு அவர்களுடைய செயல்பாடுகளில் ஆளுமை செய்கின்றன.

(வெற்றியும் தோல்வியும்)

1.பொறுப்பும் கூடுதல் பொறுப்பும்:

வெற்றி தோல்வி என்பவை இணைந்தே இருக்கும் இரண்டு முரண்பாடுகள் என்று மேலோட்டமாகத் தோன்றினாலும், அவை இரண்டுமே முடிவுபெற்ற முற்றுப்புள்ளிகள் அல்ல, கால் முளைத்துத் தொடர்ந்து ஓடவேண்டிய காற்புள்ளிகள் என்றே இயற்கை கூறுகிறது.  

ஆற்று நீரின் பயணத்தில் அருவியாக விழுகின்ற நிலையை நீர்வீழ்ச்சி என்று கூறினாலும் அது நீரின் வீழ்ச்சியல்ல, பாதை கண்டு ஓடுகின்ற தன் ஆற்றலை உறுதியாக வெளிப்படுத்துகின்ற ஆற்றின் அழகான பயணம். 

புயல் காற்றின் வேகத்தில் தரையோடு தொடுகின்ற மூங்கில், வளைந்தாலும் உடையாத உறுதியோடு எழுகின்ற முயற்சி, மீண்டும் நிமிர்கின்ற மீள்தன்மையின் சிறப்பு.  

மனிதர்களும் இத்தகைய விடாமுயற்சி உள்ளவர்கள்தான்.  மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெறுகின்ற ஆற்றல் உள்ளவர்கள்தான்.

ஆனால், வெற்றி எனும் வாய்ப்பை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வதைப்போலத் தவிர்க்க முடியாத நிலையில் சந்திக்கும் தோல்வியை, இயல்பான ஒரு வாய்ப்பாக யாராலும் சகஜமாக ஏற்றக்கொள்ள முடிவதில்லை என்பதுதான் உண்மையான நிலை.  

ஏனெனில், இது ஏமாற்றம் என்ற உணர்வுபூர்வமானதாக மட்டும் இல்லாமல் செலவிடப்பட்ட நேரம், உழைப்பு, பணம் என்ற புற சூழ்நிலைகளையும் பாதிப்பதால், இதை தவிர்ப்பதற்கே அதிகம் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.  இதனால், ஆரம்பத்திலேயே, தோல்வியின் வலியைத் தவிர்க்க நினைக்கும் பாதுகாப்பு உணர்வு, வெற்றிக்கான முயற்சியை மேலும் தீவிரமாக்குகிறது என்பதும் உண்மை. 

ஆனாலும், தவிர்க்கமுடியாத நிலையில் ஏற்படுகின்ற தோல்வியை அவமானமாக நினைத்து, அந்தச் சவாலான சூழ்நிலையைக் கடக்க முடியாமல் அப்படியே தேங்கி விடுவது, தன்னை வருத்திக்கொள்வது, புதிய சூழ்நிலைகளை மறுப்பது என்ற எதிர்மறை சிந்தனைகளின் வலிமிகுந்த மனக்கட்டுகளை அவிழ்த்து விடுதலை தருவதற்கு, அதைப்பற்றிய மாற்றுச் சிந்தனைகள் பெரிதும் உதவுகின்றன.

நேர்மறையான முயற்சியில் ஏற்படுகின்ற பின்னடைவு என்பது உலகில் யாரும் சந்திக்காதது அல்ல.  எல்லோருக்கும் பொதுவான தோல்வியை ஒருமுறைகூட காணாத வெற்றியாளர் என்பவர் கற்பனை கதாபாத்திரமாகவே இருக்க முடியும். 

நடைமுறையில், ஜொலிக்கும் வெற்றியாளர்கள் சந்தித்தத் தோல்விகள், அந்த வெற்றிகளின் பிரகாசத்தில் மறைந்துகொண்டிருக்கும்.  எனவே, வெற்றிக்கான முயற்சியில் ஏற்படுகின்ற தோல்வியில் அவமானப்படுவதற்கு ஒன்றும் இல்லை.  தோல்வியை வெல்பவன்தான் வெற்றியாளன் ஆகமுடியும்.  

வெள்ளை தாளில் ஒரு புள்ளி இருந்தால் அதை குறையென்று நினைத்து அஞ்சாமல், அந்தப் புள்ளியை ஒரு பகுதியாக சேர்த்து, ஓவியத்தை மேலும் சிறப்பாக்குகின்ற நேர்மறையான சிந்தனையே, குறைகளை நிறைகளாக உயர்த்துகின்ற மாற்றுச்சிந்தனை.

இதையெல்லாம் நன்கு புரிந்துகொண்டு, எதையும் எதிர்கொள்ளும் துணிவோடு இருப்பவர்கள்கூட, அபிப்பிராயங்களுக்கு அதிகம் பதட்டப்படுவது உண்டு.  இவை வெளியிலிருந்து வருவதாக மட்டும் அல்லாமல் தனக்குள்ளே ஒலிக்கும் குரலாகவும் இருக்கலாம். 

தோல்வியிலிருந்து மீள்வதிலும், வெற்றிக்கான சரியான முயற்சியில் கூடுதல் கவனத்தோடு உழைப்பதிலும், முழுமையான கவனத்தைச் செலுத்தி வெற்றி பெறுவதே, அபிப்பிராயங்களை நேர்மறையாக உருமாற்றுவதற்கான சரியான வழி. 

அதுவரை, இத்தகைய அபிப்பிராயங்கள் மீது எந்த அபிப்பிராயமும் இல்லாமல், அவற்றுள் உண்மையான அக்கறையான நுணுக்கங்களை மட்டும் ஏற்றுக்கொள்வது நேர்மறையான முயற்சிக்குத் துணையாக இருக்கலாம்.  

எனவே, வெற்றி என்பதை முன்னேற்றத்தின் “முயற்சியில் கிடைத்திருக்கும் ஒரு பொறுப்பாகவும்”, தோல்வி என்பதை அந்த “முயற்சியின் கூடுதல் பொறுப்பாகவும்” ஏற்றுக்கொள்ளும் சிந்தனையே, மனவலிமையோடு வெற்றியை நோக்கி உழைக்கும் சக்தியைத் தருகின்ற மாற்றுச்சிந்தனை ஆகும்.

(எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்)

2.அணுகுமுறையும் அனுபவமும்:

நடைமுறைக்குப் பொருத்தமான நியாயமான எதிர்பார்ப்புகள்தான் வாழ்க்கை தொடர்ந்து இயங்குவதற்கான ஆற்றலாக செயல்படுகின்றன.  அதேநேரத்தில், அத்தகைய எதிர்பார்ப்புகளில் எதிர்கொள்ளும் ஏமாற்றங்களும் தவிர்க்கமுடியாத மாற்றங்களாக சில நேரங்களில் அமைந்துவிடுகின்றன.  இதனால், வாழ்க்கை என்பது எப்போதும் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் நிறைந்தது என நினைப்பது சலிப்பை ஏற்படுத்துகின்ற எதிரான சிந்தனை. 

ஆனால், அணுகுமுறையை (attitude) மாற்றுவதன் மூலம் அனுபவங்களில் புதிய மாற்றங்களைப் பெறமுடியும் என்பது வாழ்க்கையை உற்சாகமாக எதிர்கொள்ளும் துணிவான மாற்றுச்சிந்தனை.

எதிர்பாராத சூழ்நிலைகளும்கூட எதிர்காலத்திற்கான நல்ல வாய்ப்பாகவும், வாழ்க்கையை வேறுகோணத்தில் பார்க்க உதவும் ஞானமாகவும், வாழ்க்கையின் உண்மையான நன்மைகளுக்கு அடிப்படை காரணமாகவும் இருக்கலாம் என்பது “benefit of hope” என்னும் நம்பிக்கையில் வெளிப்படும் மாற்றுச் சிந்தனை ஆகும். 

எனவே, கட்டுப்பாட்டில் உள்ளவற்றை, எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் சிறப்பாகக் கையாளுவது செயல்திறன் மிக்க “அணுகுமுறையாக” வெளிப்படுகிறது.  அதுபோலவே கட்டுப்பாட்டில் இல்லாதவற்றை, துணிவோடு எதிர்கொள்ளும் திறனே, பக்குவமான மனநிலையின் “அனுபவமாக” வெளிப்படுகிறது.

(தயக்கமும் தேக்கமும்)

3.துணிவும் தெளிவும்:

ஒவ்வொரு பயணத்தின் தொடக்கத்திலும் விளைவுகள் குறித்து ஓரளவுக்குச் சிந்தித்து முடிவெடுக்க முடியும் என்றாலும், அந்தப் பயணத்திற்கான முழுபாதையையும் முன்னரே தீர்மானிப்பதும், எதிர்பாராது சந்திக்கும் புதிய சூழ்நிலைகளையும் முன்கூட்டியே துல்லியமாகக் கணக்கிடுவதும் சாத்தியமில்லாத ஒன்று. 

இதனால் ஏற்படுகின்ற அச்சமே முன்னேற்றத்திற்கான மாற்றத்தை மறுப்பதற்கு காரணமாகிறது.  புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்வதில் ஏற்படும் தயக்கமும், பழகிய சூழலிலிருந்து (comfort zone) வெளிவர மறுக்கும் தேக்கமும் முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்தும் சிந்தனைகளாகும்.  

மாறவேண்டிய அவசியமே இல்லை என்றாலும், பழக்கமான சூழலாகவே இருந்தாலும், அதிலும் எதிர்பார்க்காத பலவிதமான மாறுதல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. எனவே, எந்தச் சூழ்நிலையிலும் மாற்றங்களைக் கையாளுவதற்கேற்ற மனநிலையில் இருப்பதும், வருவதை எதிர்கொள்ளும் மனஉறுதியோடு செயல்படுவதும் நடைமுறைக்கு அவசியமானதாக உள்ளது. 

இவ்வாறு, நாமே தேடிப்பெறுகின்ற மாற்றங்களாக இருந்தாலும், நம்மைத் தேடி வருகின்ற மாற்றங்களாக இருந்தாலும் அவற்றில் நல்ல விளைவுகளை எதிர்நோக்கி நம்பிக்கையோடு பயணம் செய்வதே சுமுகமான பயணமாக இருக்கும். 

இத்தகைய புதிய சூழ்நிலைகள், புதிய முயற்சிகள் மற்றும் புதிய மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகளை முழுமையாக கணித்துவிட முடியாது என்றாலும் மனதில் இருக்கும் நேர்மறையான நம்பிக்கை, விளக்கின் ஒளிபோலத் துணையாக நின்று தொடர்ந்து வழிகாட்டும்.

பயணம் செய்கின்ற வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் முன்விளக்கு, குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டுமே வெளிச்சம் காட்டுகின்ற நிலையிலும் அந்த வெளிச்சத்தைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் சுற்றி வரமுடியும் என்ற நேர்மறையான நம்பிக்கைத் தருகின்ற துணிவும் தெளிவும், வெற்றி பாதையில் தொடர்ந்து பயணிப்பதற்கு தேவையான மாற்றுச் சிந்தனைகள் ஆகும்.

ஆழ்மனம் என்னும் அற்புதம்: 

வாழ்க்கையின் நோக்கமாக விளங்கும் குறிக்கோளைத் தனக்கு இடப்பட்ட கட்டளையாக ஏற்று நிறைவேற்றும் அற்புத சக்தி ஆழ்மனதிற்கு உள்ளது என்று கூறுகிறார்கள்.  அத்தகைய ஆற்றல் மிக்க ஆழ்மனதின் திறனை முழுமையாகப் பயன்படுத்துகின்ற ஆக்கபூர்வமான சிந்தனைகளே மாபெரும் வெற்றிகளைச் சாத்தியம் ஆக்குகின்றன.  

இத்தகைய சக்தி உள்ள மனதில், பாதிப்பை ஏற்படுத்துகின்ற எதிர்மறை எண்ணங்களை போக்கி, மானசீகமான கட்டுகளிலிருந்து விடுவித்து, மனதிற்கு சுதந்திரமான ஆற்றலைத் தருகின்ற நேர்மறையான மாற்றுச் சிந்தனைகள், சூழ்நிலைகளை வலிமையாக எதிர்கொள்ளும் வாய்ப்புகளைக் காட்டுகின்றன.

சுயபலத்தை அறிந்து, எதை ஏற்க வேண்டும், எதை மறுக்க வேண்டும் என்று உணர்த்துகின்ற அறிவின், தெளிவான மாற்றுச் சிந்தனைகள் எனும் வாய்ப்பு, நேர்மறையான சிந்தனைகளுக்குக் கிடைக்கும் கூடுதல் பலம் ஆகும்.

மற்றவர்களின் உணர்வுகளை மதித்து, இயல்புகளைப் புரிந்துகொண்டு, அவர்களை அன்போடு ஏற்றுக்கொள்ளும் நாம், சுயஉணர்வுகளை மதித்து, ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன்னிறுத்துவதற்கு தன்னம்பிக்கையான சிந்தனைகளே காரணமாகின்றன. 

இத்தகைய சிந்தனைகளின் விளைவுகளைத் துணிவோடு பொறுப்பேற்று, வெற்றியை நோக்கி வலிமையாகச் செயல்படுவதற்கு மாற்றுச்சிந்தனைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.  இவையே வாழ்க்கையை வடிவமைக்கும் முன்னேற்றத்திற்கும், மகிழ்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கின்றன.

#   நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *