இறைவனின் உலகம்.
மதிய நேரத்துப் பள்ளி மணி,
ஒலித்தது உணவு இடைவேளை.
மலர்ந்து சிரித்து ஓடி வந்து
கூடி அமர்ந்தனர் குழந்தைகள்.
பிஞ்சு விரல்கள் உணவை எடுக்க
நழுவி விழுந்தன சில பருக்கைகள்.
சிந்திய சோறு பூமாதேவிக்கு! என்று,
குறுநகை பூத்தது ஒரு குழந்தை.
இன்னும் கொஞ்சம் எடுத்து வைத்தது,
இறைக்கும் இன்பம் பகிரும் குழந்தை.
சோர்வு நீக்கும் தோழமையோடு
சேர்ந்தே உண்பது இன்னொரு குழந்தை.
படிக்க வந்த பள்ளிக்கூடத்தில்
பாடம் சொல்லும் சின்ன குழந்தைகள்.
இங்கே இருக்கும் இறைவனின் உலகில்
இனிதே நடப்பது அன்பின் பகிர்வு.
மனமே துணை.
துளை உள்ள மூங்கில்தான்
இசை வழியும் குழலாகின்றது.
நிலம் விழுகின்ற விதைதான்
புது மரமாக முளைக்கின்றது.
வாழுங்காலப் பொறுப்புகள் யாவும்
வருங்காலத்தில் சிறப்புகள் ஆகும்.
துணிந்து நிற்கும் உறுதியின் முயற்சி
தலைமுறை போற்றும் சாதனையாகும்.
நிஜமாகும் வெற்றிகள் முதலில்
நினைப்பில்தான் நிகழ்கின்றன.
நல்லதே நடக்கும் என்றே நினைத்து
நம்பிக்கையோடு வாழ்க்கையை நடத்து.
அடுத்த வீட்டுச் சங்கதி.
புழக்கடையில் தெரிகின்ற
பூங்காவின் மரத்தில்
கீச் கீச்சென்று சத்தமிட்டு,
கிளைக்குக் கிளைமாறி
ஓடிப் பறந்தன கிளிகள்.
என்னதான் பேசுகின்றன!
ஓயாமலேன் ஓடுகின்றன!
திகைப்போடு பார்க்க வைக்கும்
இந்தச் சத்தம்,
அன்பின் வேகமா!
அதிகார அதட்டலா!
விருந்தினர் வருகையா!
விழாக்கால வேலையா!
குழந்தைகள் விளையாட்டா!
குதூகலக் கொண்டாட்டமா!
அது சரி,
கிளியின் வீட்டுச் சங்கதியெல்லாம்
நமக்கேன்! என்று,
ஆவலை அடக்கி அகன்று வந்தாலும்,
மனதை ஈர்த்து இன்பம் தருகிறது,
தொடர்ந்து பேசும் கிளிகளின் சத்தம்.
இயற்கையின் அழகில் இனிக்கும் நித்தம்.
# நன்றி.