குட்டி கதை:
பெரியதம்பி, வெளியூரில் ஒரு வேலையை முடித்துவிட்டுத் தன்னுடைய ஊருக்குச் செல்வதற்காகப் பேருந்து நிலையத்திற்கு வந்தான். தான் செல்ல வேண்டிய பேருந்து வருவதற்கு இன்னும் அரைமணி நேரம் ஆகும் என்பதால் அங்கிருந்த மூவர் அமரும் வகையில் இருந்த இருக்கையில் உட்கார்ந்தான். தன்னுடைய சிறிய கைப்பையை அருகில் வைத்தான். பசித்தால் சாப்பிடுவதற்கு வாங்கிய இரண்டு வாழைப்பழங்கள், ஒரு தண்ணீர் பாட்டில் இருந்த கவரையும் அதன் அருகில் வைத்தான். பிறகு தன்னுடைய தோளில் இருந்த துண்டை எடுத்து முகம் துடைத்துவிட்டு அதையும் அந்தப் பையின் மீது போட்டுவிட்டு இருக்கையின் ஓரத்தில் நன்கு சாய்ந்து உட்கார்ந்து கண்ணை மூடி ஓய்வெடுத்தான். களைப்பில் சிறிது நேரத்தில் சற்று கண்ணயர்ந்து விட்டான்.
அப்போது திடீரென்று ஏதோ சத்தம் கேட்டதால் பதட்டத்துடன் கண் விழித்த பெரியதம்பி, இன்னும் தான் ஏறவேண்டிய பேருந்து வரவில்லை எனத் தெரிந்ததும் நிம்மதியாகச் சாய்ந்து உட்கார்ந்தான். அந்த இருக்கையில் பெரியதம்பியின் பையின் அருகில் புதிதாக ஒரு இளைஞன் உட்கார்ந்து இருப்பதை அப்போதுதான் பார்த்தான்.
அந்த இளைஞன் பெரியதம்பியைப் பார்த்துப் புன்னகைத்தபடியே அருகில் வைக்கப்பட்ட கவரில் இருந்த இரு வாழைப்பழங்களில் ஒரு பழத்தை எடுத்துச் சாப்பிட்டான். இதைப் பார்த்த பெரியதம்பிக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘என்ன தைரியம்? என் எதிரிலேயே பழத்தை எடுத்துச் சாப்பிடுகிறான்’ என்று நினைத்தபடி முறைத்துப் பார்த்தான்.
ஆனால் அந்த இளைஞனோ, அடுத்தப் பழத்தையும் சாப்பிட்டுவிட்டுப் பாட்டிலில் இருந்த தண்ணீரையும் குடித்தான். பெரிய தம்பிக்குக் கோபமாக வந்தது. ‘இப்படியும் ஒருவன் அநாகரிகமாக நடந்து கொள்வானா? நான் வாங்கி வைத்தப் பழங்களையும் சாப்பிட்டு, தண்ணீரையும் குடித்துவிட்டு இப்படி சாதாரணமாக இருக்கிறானே’ என்று அவனை ஆச்சரியமாகப் பார்த்தான்.
அந்த நேரத்தில் பெரியதம்பி ஏறவேண்டிய பேருந்து வந்தது. உடனே அதில் ஏறுவதற்காக எழுந்து தன்னுடைய துண்டை எடுத்து தோளில் போட்டான். அப்போதுதான் கவனித்தான், அவன் வாங்கிய இரண்டு வாழைப்பழங்களும், தண்ணீர் பாட்டிலும் இருந்த கவர் கைப்பையின் அருகில் அப்படியே இருந்து.
ஒரு காட்சியைக் கண்டவுடன் கொஞ்சமும் யோசிக்காமல் எவ்வளவு அவசரமாக ஒருவரைத் தவறாக எடைபோடுகிறோம் என்று நினைத்துத் தன்னுடையத் தவறை உணர்ந்து வருந்தினான் பெரியதம்பி. இதுபோன்ற தவறு இனி ஏற்படாதிருக்கத் தன்னை மேலும் கவனமாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்தான்.
இந்த நிகழ்வை அப்படியே அந்த இளைஞனின் பார்வையில் யோசித்தால், தன் அருகில் இருந்தவருக்கு இப்படி ஒரு எண்ணம் இருந்ததையே அறியாதவன் அந்த இளைஞன். எனவே அந்தச் சூழ்நிலைக்குப் பொறுப்பேற்கவோ, சரிசெய்யவோ இயலாத நிலையிலும் தேவையற்ற வெறுப்பையோ எதிர்ப்பையோ சந்திக்கவும் நேரலாம். இம்மாதிரியான சூழ்நிலைகளில் அடுத்தவர் தானாக உணரும்வரை இதைத் தீர்க்கவும் வழி இல்லை.
இந்தக் கதையில் வரும் பெரியதம்பியைப் போன்ற அவசரக்காரர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில், தங்களுடையக் கருத்துப் பிழையினால் காட்சிகளைப் பிழையாகப் புரிந்துகொள்கிறார்கள். இதனால் மற்றவர்களைத் தவறாக நினைத்துத் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி, கோபத்தையும் வெளிப்படுத்துகிறார்கள்.
எல்லாவற்றிற்கும் காட்சிகளை மட்டும் சாட்சியாக நினைக்காமல், எதையும் கனிவோடு அணுகும்போது மனமுதிர்ச்சியான செயல்பாடுகள் வெளிப்படும். இதன் மூலமே எங்கும் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
# நன்றி.