கவியரசர் கன்ணதாசன்:
“பருத்தி என்றொரு செடி வளர்ந்தது
பருவப் பெண்ணைப் போலே – அந்தக்
கரிசல் கழனிமேலே – அது
சிரித்த அழகில் காய் வெடித்தது
சின்ன குழந்தை போலே – அந்த
வண்ணச் செடியின் மேலே!…”
“சலவை செய்து வாசம் போட்டுத்
தங்கம் போல எடுத்து – பின்
அங்கம் பொலிய உடுத்து – தன்
நிலைமை மாறிக் கிழிந்த பின்பு
நிலத்தில் என்னை விடுத்து – சென்றார்
நீண்ட கதை முடித்து!…”
“பந்தல் போட்டு மணம் முடித்த
பருவ உடலில் துள்ளி – வாழ்ந்த
பழைய கதையைச் சொல்லி – ஏங்கும்
கந்தல் கதையைக் கேட்ட பின்பும்
காலம் அறிந்து கொள்வீர்! – வாழ்வைக்
காவல் காத்துக் கொள்வீர்!”
என்று, பருத்தி வெடித்துப் புது வண்ண ஆடையாகி, அது பலவகையில் உருமாறி, பின்பு கந்தல் துணியாகி, இறுதியில் நிலத்தில் வீழ்ந்தக் கதையைக்கூறி எச்சரிக்கிறார் கவிஞர் கண்ணதாசன். மனித வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களின் நிலைகளை இந்தக் கவிதையின் மூலம் மனதில் ஆழமாக தைக்குமாறு அற்புதமாகக் கூறி மனதை நெகிழ்ச்சி அடையச் செய்கின்றார் கவியரசர்.
நிதர்சனம்:
மாறிக்கொண்டே இருக்கும் மனித வாழ்க்கையில், இதுதான் வாழ்க்கை, இதுதான் பயணம், எனவே காலம் அறிந்து காவல் காத்துக் கொள்வீர் என்று அனுபவப்பட்டவர் கூறும் வார்த்தைகள் நமக்கு கிடைத்த அரியப் பாடங்கள்.
வாழ்க்கைப் பயணத்தில், நமது கட்டுப்பாட்டில் இருக்கும் சில விஷயங்களை மட்டுமாவது, உரிய காலத்திலேயே கவனமாகக் கையாள்வதுதான் வாழ்க்கையைப் பாதுகாக்கும் வழி என்று வாழ்க்கையின் நிதர்சனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். நம் வீட்டுக் கண்ணாடி நம் முகத்தைக் காட்டும்போதே நம்மை நாம் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உணர்த்துகிறார்.
பாதுகாப்பு:
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
என்று வள்ளுவரும் கூறுகிறார். அவ்வுலகத்திற்குத் தேவைப்படும் அருளைப் பெறுவதற்கும்கூட ஓரளவு பொருளின் துணையும் (இவ்வுலகில்) தேவைப்படும் என்றே தோன்றுகிறது. அன்பும், கருணையும் உள்ள மனமே அருள் நிறைந்து காணப்படும். எனவே ‘அன்பாகிய அருளும், வளமாகிய பொருளுமே’ வாழ்வை காவல் காத்துக்கொள்ள பாதுகாப்பாக அமையும் என்ற புரிதல் ஏற்படுகிறது.
நேர்மையான சிந்தனைகளின் சக்தியாக அன்பு அமைகிறது. அதை ஆற்றலுடன் செயலாக்கும் சக்தியாகப் பொருள் விளங்குகிறது. அன்பான சிந்தனையில் விளையும் ஆக்கப்பூர்வமான செயலே சிறப்பான வாழ்க்கையைத் தருகிறது.
வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை நேர்மையாக உழைத்துச் சம்பாதித்து எதிர்கால தேவைகளுக்காக வங்கியில் சேர்த்துவைக்க வழியிருக்கிறது. அதுபோல வாழ்க்கை முழுமைக்கும் தேவையான நிலையான அன்பை சேர்த்துவைக்க அன்புவங்கி இருக்கிறதா?
அன்பு வங்கி:
வாழ்க்கையின் பொருளாக, உண்மையான மகிழ்ச்சியாக உணரப்படும் அன்பு, உள்ளம் எனும் வங்கியில் சேமிக்கப்படுகிறது. இந்த வங்கியில் சேமிப்பை அதிகரிக்கப் பாசமே பரிவர்த்தனையாகச் செயல்படுகிறது.
பூத்து நிற்கும் புன்னகையும், கனிவான பார்வைகளும், கனிந்த வார்த்தைகளும் வரவை அதிகரிக்கக் கணிசமாக உதவுகின்றன. நேசமும், அக்கறையும் நேரடி பலனளிக்க வட்டியோடு வரிசையில் வந்து நிற்கின்றன.
அகந்தையால் வெளிப்படும் கோபம், அலட்சியம் எனும் வீண் விரயங்களால் சேமிப்புக் கரைந்து, அன்பின் இருப்புநிலை பாதிக்கக்கூடும். உறவை வரமாக நினைத்து, வெளிக்காட்டப்படும் நிலையான அன்பே, வலுவான இருப்பாக அமைந்து சேமிப்பைப் பலமாக்கும்.
ஒவ்வொரு நாட்டிலும் அதற்குரிய தனிப்பட்ட கரன்சியே செல்லுபடியாகும் என்பது போல, ஒவ்வொரு மனதிலும் உள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்குப் பொருத்தமான அணுமுறையே அந்தக் குறிப்பிட்ட மனதில் அன்பாக உணரப்படும்.
பகிரப்படும் பாசமான உணர்வு பரிமாற்றமே உறவு பலப்படுவதற்கும், அன்பின் மதிப்பு கூடுவதற்கும் காரணமாகிறது. இந்தப் பரிவர்த்தனை நுட்பத்தை நன்கு தெரிந்தவர்கள் மட்டுமே, பாசப்பறவைகளின் சரணாலயமாகத் திகழ்ந்து, அன்பு வங்கியின் “உயர் நிலை சேமிப்புதாரர்” ஆகிறார்கள்.
அன்பும், பாசமும்:
குளிர்ச்சியான பௌர்ணமி நிலவின் ஒளி பாலைவனத்திலும் குளிர்ச்சியே தருவதைப் போல, மனிதர் என்ற அடிப்படையான ஒரு நிலையே அன்புக்கு இயல்பான காரணமாகிறது. இதனால்தான் நேரில் பார்க்காத, பழகாதவர்களிடம் கூட இயற்கையான அன்பு தோன்றுகிறது.
கடல்நீரை வாங்கிய சூரியன், உரிய காலத்தில் மழைநீராக மாற்றி, உலகின் உயிர்ச்சத்தாகப் பரிமாறுகிறது. அதுபோல மனதில் கடல்போல இருக்கும் அன்பை, ஆக்கசக்தியாக மாற்றி, காலமறிந்து முறையாகப் பக்குவமாகப் பகிரும் உணர்வே பாசமாக வெளிப்படுகிறது.
விதிமுறை:
அன்பை வெளிப்படுத்துவதற்குச் செயல்திறன் மிக்க கருவியாகப் பணமும் பயன்படுகிறது என்பது உண்மைதான். என்றாலும் அன்பைப் பேணாமல் ஆடம்பரம் மட்டும் வாங்கினால், கண்ணை விற்று சித்திரம் வாங்கியக் கதைபோல ஆகிவிடும்.
தாயின் அன்பைத் தேடும் குழந்தையின் கையில் தங்கப்பொம்மையே தந்தாலும் அது வெறும் சுமையாகவே இருக்கும். பாசமாகப் பகிரப்படாமல் மனதில் மறைத்து வைக்கப்படும் அன்பு, வங்கி கணக்கில் உள்ள வெறும் எண்களைப் போல பயனற்றுக் கிடக்கும்.
எனவே, அன்பைப் பெருக்குவதற்குப் பொருளும், வளத்தைப் பெருக்குவதற்கு அன்பும் ஒன்றுக்கு ஒன்று காரணமாக இருந்தால் அதுவே சமநிலையாகிறது. மென்மையான உணர்வுமிக்க செயல்களே நிலையான அன்பை வளர்க்கவும், வெளிப்படுத்தவும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கின்றன.
அன்பான மனதின் சிந்தனையும், அதை உணர்வுபூர்வமாகச் செயலாற்றும் வளமும் ஆற்றின் இரு கரைகளைப்போல வாழ்க்கையைப் பாதுகாக்கின்றன. இந்த இரண்டையும் சமன் செய்து நேர்மையாக வாழ்வதே சீரான வாழ்க்கையாக அமைகிறது.
# நன்றி.