மனம் சுமைதாங்கி அல்ல. Manam Sumaithaangi Alla. The Mind is Not a Stress Holder.

சிந்தனைக்குச் சிறு கதை:

ஓர் ஊரில், பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் எப்போதும் ஐந்தாறு சிறு கற்களைத் தன்னுடன் பத்திரமாக வைத்திருந்தான்.   யாராவது அதைத் தூக்கிப்போடச் சொன்னாலும் போடமாட்டான்.  அவன் எங்குச் சென்றாலும் அந்தக் கற்களையும் கூடவே எடுத்துச்சென்று அதைப் பாதுகாப்பாய் வைத்துக்கொள்வான்.

அவன் வளரவளர அவன் வைத்திருந்த கற்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டேயிருந்தது.  அதுவே அவன் இயல்பு, பழக்கம், பொழுதுபோக்கு, குணம் என்று ஒவ்வொருவரும் ஒரு விளக்கம் தர ஆரம்பித்தனர்.  நாளடைவில் அதுவே அவன் அடையாளமாகவும் மாறி விட்டது. 

இந்நிலையிலேயே மேற்படிப்பு, வேலை, குடும்பம் என்று அவனும் வளர்ந்து விட்டான்.  இப்போது அந்தக் கற்கள் தலையணை அளவு பையில் நிறைந்து இருந்தன.  எங்குச் சென்றாலும், யாரிடம் பேசினாலும் அந்தப் பையை மறக்காமல் கூடவே வைத்திருந்தான்.  

அதைத் தூக்க முடியாமல் அவன் சிரமப்படுவதைப் பார்த்துச் சில சமயங்களில் யாராவது உதவியும் செய்வார்கள்.  அந்த நேரத்தில் மற்றவர்கள் தனக்கு முக்கியத்துவம் தருவதாக நினைத்துக் கொள்வான்.  இதனால் ஆக்கப்பூர்வமான செயல்கள் செய்வதற்கு அந்த மூட்டையே பிரச்சனையாகவும், தடையாகவும்  இருப்பதை உணராமல் இருந்தான்.  

நாட்கள் செல்லசெல்ல அவனை மற்றவர்கள் கேலியும் கிண்டலும் செய்வதை அவன் உணர்ந்தான்.   ஆனால், தன்னிரக்கத்தால் அவர்களிடம் கோபித்துக் கொண்டானே தவிர அந்தக் கற்கள் உள்ள மூட்டையை அவனால் விடமுடியவில்லை.  அதை அவ்வப்போது எண்ணி எண்ணி பார்த்து மீண்டும் மூட்டையாக வைத்துக் கொள்வான்.  இதனால் உடலும் மனமும் சோர்வடைந்து எப்போதும் இறுக்கமான மனநிலையிலேயே இருந்தான்.

இந்தக் கதை இயல்புக்கு மாறாக இருக்கிறதே, இப்படிகூட யாரவது இருப்பார்களா? என்று தோன்றலாம்.  ஆனால் நம்மில் சிலர் இத்தகைய மனநிலையில்தான் இருக்கிறார்கள்.  அவர்கள் வைத்திருக்கும் கல்மூட்டை வெளிப்பார்வைக்குத் தெரிவதில்லை அவ்வளவுதான்.  

கடந்தகாலத்தில் ஏற்பட்ட வலிகள், அவமானங்கள், கோபங்கள், தோல்விகள் என்று விதவிதமான கற்களை மனதில் மூட்டைபோல  சுமக்கிறார்கள்.  கல் எறிந்தவர்கள் கடந்து போய்விட்டாலும், பாதிக்கப் பட்டவர்கள் அந்தக் கற்களைச் சேமித்து வைத்துக்கொண்டு அனுதினமும் அந்த வலியை அனுபவிக்கிறார்கள்.  

இதனால், இயல்பாக வாழவேண்டிய நேரத்திலும் இறுக்கமாகவே இருந்து விடுகிறார்கள்.  காயப்பட்ட மனதில் கண்டிப்பாக வலி இருக்கும்.  ஆனால் அது காலம் என்னும் மருந்தினாலும், மனதின் பக்குவத்தாலும் மெல்லமெல்ல காயங்கள் மறைந்து அதுவே அனுபவமாக மாறிவிட வேண்டும்.  

அவ்வாறு அனுபவமாக மாறாத, காலம் கடந்த வலி, மனதில் கல்மூட்டையைத் தூக்கிக்கொண்டிருப்பது போன்ற நிலையை ஏற்படுத்தும்.  இதுவே  பலவிதமான இயலாமைகளுக்குக் காரணமாகவும் இருக்கும்.  

நாமும் பலவகையான கற்களை மனதில் சேர்த்துச் சுமைகளை ஏற்றி வைக்காமல், அவ்வப்போது அவற்றைத் தூர எறிந்துவிட்டு மனதைச் சுத்தம் செய்து இயல்பாக வைத்திருக்க வேண்டும்.  

ஒருவேளை இதுபோல ஏதாவது கடந்தகாலக் கற்கள் அடங்கியப் பையை மனதில் சுமந்து கொண்டிருந்தாலும் அதை உடனடியாக இறக்கி வைத்துவிட்டு, எதையும் அனுபவமாக மாற்றிக்கொள்ள நம்மாலான முயற்சியைச் செய்ய வேண்டும்.  இதுவே நெஞ்சை அழுத்தும் பாரத்திலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளும் ஒரே வழியாகும். 

கடந்த காலத்தின் முடிந்த நிகழ்வுகள், நிர்ணயிக்கப்பட்ட நிகழ்கால நியாயங்கள் போன்றவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு துணிவோடு வாழ்வதுதான் மனவுறுதியை அதிகப்படுத்தும்.  இந்த மனஉறுதிதான் வாழ்க்கையை இயல்பாக எதிர்கொள்வதற்கு ஏற்ற மனவலிமையைத் தரும். 

#  நன்றி.   

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *