வில்லன்கள்:
நாம் காணும் திரைப்படங்களில் பெரும்பாலும் கதாநாயகன் நல்ல பண்புகளோடும், தைரியமும் உள்ளவனாக அனைவரும் விரும்பும் வகையிலும் இருப்பான். அவனுடைய வெற்றியையும், புகழையும் கண்டு பொறாமைப்படும் ஒருவன் வில்லனாக உருவெடுப்பான். அவன் எப்போதும் கதாநாயகனுக்குத் தொந்தரவு செய்து அவனுடைய புகழைக் கெடுக்கும் விதத்தில் செயல்படுவான்.
நேரடி வில்லன்கள்:
பண்பில் சிறந்த இராமனாகவே இருந்தாலும், இராவணனை எதிர்கொண்டு வெற்றிகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. திரைப்படங்களில் எம்.ஜி.ஆர். க்கு, நம்பியார் அமைந்து விடுவது போல, சில தவிர்க்க முடியாத வில்லன்கள்தான், ஹீரோ எப்போதும் சுறுசுறுப்பாகச் செயலாற்ற காரணமாக இருப்பார்கள்.
எதிர்மறையான கதாபாத்திரத்தின் வலிமையே, கதாநாயகனின் வலிமையை வெளிக்கொண்டு வருகிறது. எனவே, கதாநாயகனின் அன்பு, பண்பு, வீரம், போன்ற நல்ல குணநலன்களைப் புரிந்துகொள்வதற்கும், அவனிடம் ஒளிந்திருக்கும் திறமைகள் வெளிப்படுவதற்கும், பெரும்பாலும் வில்லன்களே தூண்டுகோலாக இருக்கிறார்கள்.
சதிநுட்பம்:
நேரடியான வில்லன்களை விட, மறைமுகச் சூழ்ச்சி செய்பவர்கள், சகுனி, மந்தரையைப் போல ஆபத்தானவர்கள். இவர்கள், மற்றவர்களின் வாழ்க்கையில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தவும், தயங்க மாட்டார்கள். சதி வேலைகளைச் சிறப்பாகச் செய்யும் சாதூரியமானவர்கள். துஷ்டனைக் கண்டால் தூர விலகு, என்று பெரியவர்கள் சொன்னதுபோல இவர்களிடம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பதே பாதுகாப்பு. பெரும்பாலும் கதாநாயகனின் அனுபவமும் இதையே வெளிப்படுத்தும்.
அறியாமை:
ஒருசில சமயங்களில் அறியாமையினாலோ, பதட்டத்தினாலோ உடன் இருக்கும் நண்பர்களோ, நபர்களோகூட தவறான வழிகாட்டகூடும். இதைப் புரிந்துகொண்டு, எதையும் ஆலோசித்துச் சுயசிந்தனையோடு செயல்படும் கதாநாயகனே உயர்ந்தவனாகப் போற்றப்படுவான்.
மனதார யாருக்கும் கெடுதல் செய்யும் எண்ணம் இல்லாத இவர்கள், தனது அறியாமையினால் உண்டாக்கும் குழப்பத்தை, நிதானத்துடன் கையாளும் திறமையே கதாநாயகனுக்கான பொறுப்பை வெளிப்படுத்தும்.
போலிகள்:
சுயநலம், கர்வம், பொறாமை போன்ற இழிகுணங்களை மனதில் மறைத்து வைத்து போலியாகப் பழகுபவர்கள்தான் கதாநாயகனின் மனஉறுதிக்கு உரம் இடுபவர்கள்.
அன்பே வா படம் போல வில்லன்களே இல்லாவிட்டாலும், நாகேஷ் போன்ற காமெடியன்களும், சூழ்நிலைகளும் கூட கதாநாயகனுக்கு எதிராகச் செயல்படலாம். இவற்றை எல்லாம் பக்குவமாகக் கையாண்டு சுமுகமான சூழலை உருவாக்கினால்தான் திறமையான ஹீரோவாக உயர்ந்து நிற்க முடியும்.
பார்வையாளர்கள்:
இப்படி, வேறுபட்ட வில்லன்களை உருவாக்கி, அவர்கள் மூலமாக கதாநாயகனின் சிறப்பைத் திரைப்படங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. இதைப் போலவே பார்வையாளர்களும் தங்கள் வாழ்க்கையில் இத்தகைய சவாலான மனிதர்களைச் சந்திக்க நேரலாம். அத்தகைய நேரங்களில், ஹீரோ என்றால் வில்லன்களைச் சமாளித்துதான் ஆகவேண்டும் என்ற தெளிவோடு மனதைத் திடமாகத் தயார் படுத்திக் கொள்வதுதான் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், இத்தகைய சவாலான மனிதர்களே, நல்லவர்களின் பண்புகளையும், உயர்வானத் திறமைகளையும், அடையாளம் காட்டுகிறார்கள். எனவே இவர்களை எதிர்கொள்ளும் திறனும் வாழ்க்கையில் ஒருபகுதிதான் என்பதைப் புரிந்துகொண்டு, பக்குவமாகக் கையாளும் பார்வையாளர்கள் அனைவருமே உண்மையான ஹீரோக்கள்தான்.
நடைமுறை:
சில விலங்குகளின் பற்கள், அவைகளின் குட்டிகளுக்குக் கருணை நிறைந்ததாகவும் அவையே, இரைகளின் பார்வையில் கொடுமையானதாகவும் இருக்கும். அதைப்போலவே, சில மனிதர்களின் குணங்கள் தேவையானவர்களுக்கு ஹீரோ தன்மையோடும், மற்றவர்களுக்கு வில்லன் தன்மையோடும் வெளிப்படுகின்றன.
பெரும்பாலும், தனிப்பட்ட யாரையும் ஹீரோ என்றோ, வில்லன் என்றோ முழுமையாக நினைத்துவிட முடியாது. அனைவருமே குணமும், குற்றமும் கலந்த மனிதர்களாகத்தான் இருக்கிறார்கள். இவற்றில் எந்தத் தன்மை மிகையாக வெளிப்படுகிறதோ அதுவே அவரின் குணமாக அறியப்படுகிறது.
வாழ்க்கையில் ஏற்படும் அனுபவத்தின் விளைவாகவோ, மனமுதிர்ச்சியின் காரணமாகவோ, எதிர்மறை குணங்களைக் குறைத்து, தவிர்த்து, நல்ல நேர்மறையான குணங்களை உயர்த்துவதுதான் மனிதவாழ்க்கையின் அடிப்படையான நோக்கம் ஆகும்.
பண்பின் உயர்வு காரணமாகச் சிறப்பான நல்ல குணங்களின் சதவிகிதத்தை அதிகரித்து முழுமையான பண்பட்ட மனிதராக வளர்வதுதான் மனிதப் பிறவியின் சிறப்பாகும். இவ்வாறு பண்பில் சிறந்து வாழும் மனிதர்களே வாழ்க்கைப் பயணத்தை முறையாக வாழ்ந்து நமக்கும் வழிகாட்டுகிறார்கள்.
உண்மையான வெற்றி:
கதைகளிலும், திரைப்படங்களிலும் காண்பது போல வரையறுக்கப்பட்ட வில்லன்களும், கதாநாயகன்களும் தனித்தனியாக இல்லாமல் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இயங்குகிறார்கள் என்பதுதான் யதார்த்தம்.
இவ்வாறு ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இயங்கும் வில்லத்தனமான, எதிர்மறையான குணங்களை அழித்து, அந்த இடத்தில் நல்ல நேர்மறையான சிந்தனைகளை விதைத்து, உள்ளுணர்வில் கதாநாயகனாக வளர்ந்து, தன்னைத்தானே வெற்றிகொள்வதுதான் சிறப்பாகும்.
ஒவ்வொரு சூழ்நிலையிலும் விழிப்போடு தன் எண்ணங்களைக் கவனித்து நல்ல நேர்மறையான பண்பை வெளிப்படுத்தி, சிறந்த குணமுள்ள மனிதராக மனவளர்ச்சி அடைவதுதான் வாழ்க்கையின் உண்மையான வெற்றியாகும். ஒவ்வொரு மனிதரும் இத்தகைய வெற்றியை முழுமையாகப் பெற்றுவிட்டால் மனிதசமுதாயமே மிகச் சிறந்த பண்பட்ட சமுதாயமாக மிக உயர்ந்த நிலையை அடைந்துவிடும்.
# நன்றி.